Last Updated : 12 Aug, 2018 04:55 PM

 

Published : 12 Aug 2018 04:55 PM
Last Updated : 12 Aug 2018 04:55 PM

அதிகார விவகாரம்: நாராயணசாமி கடிதத்தைத் திருப்பி அனுப்பிய கிரண்பேடி

புதுச்சேரி அமைச்சர்களின் ஆலோசனைகளின் படி மட்டுமே கிரண்பேடி செயல்படுவதாக இருந்தால் ஒத்துழைப்பு அளிப்பதாகக் குறிப்பிட்டு அனுப்பிய முதல்வர் நாராயணசாமியின் கடிதத்தை திரும்பி அனுப்பியுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இதுபோன்ற கடிதத்தை எழுதி முதல்வரின் அலுவலக கண்ணியத்தைக் கெடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி கள ஆய்வின்போது பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரண்பேடி சமூக வலைதளம் மூலம் எச்சரித்திருந்தார்.

இதனையடுத்து 5-ம் தேதியன்று முதல்வர் நாராயணசாமி, ஆளுநர் கிரண்பேடிக்கு தன்னிச்சையாக செயல்பட அதிகாரமில்லை. எனவே, அவரது உத்தரவை பின்பற்றத் தேவையில்லை என்று அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேட்டியளித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மறுநாள் 6-ம் தேதி ஆளுநர் கிரண்பேடி, மூத்த அதிகாரிகள் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதை ஒப்புக் கொள்வார்கள் என்று சமூக வலைதளத்தில் பதில் அளித்தார். அப்போது முதல்வர் ஒத்துழைப்பு அளிக்காததால் புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் நாராயணசாமி கடந்த 10-ம் தேதி அமைச்சர்களின் ஆலோசனைகளின் படி மட்டுமே ஆளுநர் கிரண்பேடி செயல்படுவதாக இருந்தால் ஒத்துழைப்பு அளிப்பேன். உச்ச நீதிமன்றமே அமைச்சரவையின் முடிவின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது என்று குறிப்பிட்டு ஆளுநர் கிரண்பேடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து ஆளுநர் கிரண்பேடி இன்று சமூக வலைதளத்தில், ''முதல்வர் நாராயணசாமி எனக்கு எழுதிய கடிதம் பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது குறித்து பத்திரிகைகளில் இன்று படித்தேன். அவர் கூறியபடி அவர் அனுப்பிய கடிதம் என்றால் அதை திருப்பி அனுப்பி விட்டதை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்பு அலுவலகமான ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் அற்பமான கடிதத்தை எழுதியுள்ளார். ஏற்கெனவே முதல்வர் இதுபோன்ற மரியாதையற்ற கடிதங்களை எழுதியுள்ளார். அது வழக்கமாகிவிட்டது. இதுபோன்ற கடிதத்தை எழுதி முதல்வரின் அலுவலக கண்ணியத்தைக் கெடுக்கக்கூடாது என்பதை முதல்வர் உணர்வார் என்று நம்புகிறேன். இது புதுச்சேரி மக்களுக்கான தகவல்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x