Published : 23 Aug 2018 04:00 PM
Last Updated : 23 Aug 2018 04:00 PM
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 64,105 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மொத்த விதிமீறல் குற்றங்களில் 40 சதவீதம் ஆகும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. விபத்துகளுக்கு அதிகம் காரணமாகும் முக்கிய விதிமீறல்களை வரையறுத்தபோது அதில் முக்கிய இடங்களைப் பிடிப்பது மது போதையில் வாகனத்தை இயக்குவது, செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்குவது, அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குவது, அஜாக்கிரதையாக இயக்குவது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றுவது போன்றவை ஆகும்.
இந்தக் குற்றங்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்குபவர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப் பரிந்துரைக்கலாம் என்று திருத்தப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டனர். இதிலும் முன்பெல்லாம் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை போலீஸார் பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பின்னர் நிரூபிக்கும் நிலை இருந்தது.
அதிலும் ஒரு மாற்றமாக லேசாக ஊதினாலே மதுவின் அளவைக் காட்டும் கருவி போக்குவரத்து துறையில் கொண்டுவரப்பட்டது. இதில் ஊதியவர்கள் மது அருந்தியிருந்தால் தப்பிக்க முடியாது. அவர்களின் அனைத்து டேட்டாக்களும் உடனடியாகப் பதிவாகிவிடும்.
இதன்மூலம் மதுபோதையில் வாகனம் ஓட்டிவரும் விஐபிக்கள்கூட தப்பிக்க முடியாமல் சிக்கினர். இந்நிலையில் இந்தப் புதிய கருவிகளின் வருகையால் பலரும் சிக்கினர். அவர்களது ஓட்டுநர் உரிமம் ஆறு மாத காலத்துக்கு ரத்தும் செய்யப்பட்டது.
இதேபோன்று ஓவர் ஸ்பீடை அளக்கும் கருவியும் வந்துவிட்டது. இதுபோன்ற நவீன விஞ்ஞான வரவுகள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் பலரும் சிக்கி வருகின்றனர். தற்போது 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதங்களில் மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டு சிக்கியவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்த விதிமீறல்களின் எண்ணிக்கையை போக்குவரத்துத் துறை வெளியிடப்பட்டது. அந்த எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது. போக்குவரத்து விதிமீறலினால் கடந்த 7 மாதங்களில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 706 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயமாக முதலிடத்தில் இருப்பது செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டி சிக்கியவர்களே.
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி சிக்கியவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 105 ஆகும்.
அடுத்த இடத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்ததாக 29 ஆயிரத்து 964 பேர் உள்ளனர்.
மதுபோதையில் வாகனத்தை இயக்கி சிக்கியவர்கள் 19 ஆயிரத்து 422 பேர்.
சிக்னலை மதிக்காமல் சென்று சிக்கியவர்கள் 18 ஆயிரத்து 287 பேர்.
அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கி சிக்கியவர்கள் 17 ஆயிரத்து 701 பேர்.
ஓவர் லோடு ஏற்றி சிக்கியவர்கள் 7 ஆயிரத்து 223 பேரும் அடங்குவர்.
மொத்தமாக 7 மாதங்களில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 702 பேர் ஆகும்.
செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்குவது நம்மிடையே சாதாரணமாக நடக்கும் நிகழ்வாக உள்ளது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்படவும், அதன்மூலம் எதிரில் வரும் அப்பாவி வாகன ஓட்டி, பாதசாரி பாதிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தமிழகத்தில் 6 மாத காலம் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட வழக்கில் சிக்கியவர்களில் 40.9 சதவிகிதத்தினர் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியிருப்பவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாகும்.
போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள தகவலில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மேற்கண்ட போக்குவரத்து விதிமீறல்களினால் குற்றமிழைத்து சிக்கி 6 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை முறையே 30,519 மற்றும் 25,143 ஆக உள்ளது. அதன் பின்னர் அடுத்தடுத்த மாதங்களில் படிப்படியாகக் குறைந்துள்ளது. மே மாதம் மொத்தமே 4237 பேர்தான் சிக்கியுள்ளனர்.
ஆனால் ஜூனில் இது இருமடங்காகி, ஜூலையில் 7 மடங்கு அதிகரித்து 67,221 பேர் மொத்தமாக சிக்கியுள்ளனர். இது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. மே மாதத்துக்குப் பின்னர் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து விதிமீறல் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT