Published : 06 Aug 2018 09:40 AM
Last Updated : 06 Aug 2018 09:40 AM

வருவாயை பெருக்க புது திட்டம்: தனியாருக்கு 189 ஹெக்டேர் நிலம் குத்தகைக்கு விடப்படும் - ரயில்வே அமைச்சகம் முடிவு

வருவாயை அதிகரிக்கும் வகையில் ரயில்வேக்கு சொந்தமான 189 ஹெக்டேர் நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்திய ரயில்வேயிடம் மொத்தம் 4,72,155 ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 51,165 ஹெக்டேர் நிலம் காலியாக உள்ளது. இதில், வணிகத்துக்கு ஏற்றார்போல் 189 ஹெக்டேர் நிலத்தை (2 கோடி 3 லட்சத்து 43,790 ச.அடி) தேர்வுசெய்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.14,000 கோடி.  இந்த நிலத்தை தனியாருக்கு 45 முதல் 90 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விட்டு நிதி திரட்ட ரயில் நில வளர்ச்சி ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில் தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 15 ரயில்வே இடங்களைக் குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. 

வணிக தேவைக்கான நிலங்களை, சென்னையில் குத்தகைக்கு  எடுக்க தனியார்களி டம் போட்டி இருப்பதால் 12 இடங்கள் சென்னையில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள இடங்கள் நாகப்பட்டினத்தில்  43,055 ச.அடி, விழுப்புரம் 76,423 ச.அடி,சேலம் மார்க்கெட் 1,13,021 ச.அடி, சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை யின் காக்காப்பாலம், பாடி 2,26,000 ச.அடி, சேத்துப்பட்டு 81,805 ச.அடி, விக்டோரியா கிரசன்ட் 46,284 ச.அடி, போயஸ் தோட்டம் 57,048 ச.அடி, பூந்தமல்லி ரோடு 2,15,278 ச.அடி, பார்க் ஸ்டேஷன் 35,520 ச.அடி, பெரம்பூர் பனந்தோப்பு காலனி 2,15,278 ச.அடி, அயனாவரம் காலனி 3,76,736 ச.அடி, தாம்பரம் 1,77,604 ச.அடி, (57,000 ச.அடி வழக்கில் உள்ளது.)  திருவொற்றியூர் 20,91,427 ச.அடி, வால்டாக்ஸ் சாலையில் 12,916 ச.அடி, புளியந்தோப்பு 79,652 ச.அடி. இந்த நிலங்களின் மொத்த பரப்பளவு 38 லட்சத்து 48 ஆயிரம் ச.அடி. ஆகும்.

ரூ.43 கோடிக்கு...

இதில் சென்னை அம்பத்தூர் தாலுகா, காக்காப்பாலம் - பாடி பகுதியில் உள்ள 2,43,239 ச.அடி ரயில்வே இடத்தை  ரூ.43 கோடிக்கு 45 ஆண்டுகால குத்தகைக்கு பிரபல தனியார் நிறுவனத்திடம் வழங்க கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  மற்ற இடங்களைப்  படிப்படியாக தனியார்களுக்கு குத்தகைக்கு விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

ரயில்வே துறையை நவீனமயமாக்க அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்ததுல், சேவைகளை விரிவுப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு  அதிகளவில் நிதி தேவைப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி மட்டுமே போதாது. இதனால், மாநில அரசுகளுடன் இணைந்து ரயில்வே திட்டப்பணிகளைச் செயல்படுத்தி வருகிறோம். அதுமட்டுமல்லாமல், ரயில்வேக்கு சொந்தமான காலி இடங்களைத் தனியாருக்கு நீண்ட நாட்களுக்கு குத்திகை விட்டு, வருவாயை பெருக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த நிதியைக் கொண்டு கிடப்பில் உள்ள புதிய பாதை, அகலப்பாதை திட்டப்பணிகள் மற்றும் மிகவும் பழைமையான பாதையை புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.  

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயணிகள் விடுதி

இது தொடர்பாக டிஆர்இயு துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறும்போது, ‘‘ரயில்வேக்கு சொந்தமான காலி நிலங்களில் நேரடி முதலீட்டு திட்டங்கள் மூலம் வருவாய்க்காக  திட்டமிட வேண்டும். சென்னை போன்ற பெரிய நகர நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவதை ரயில்வேத் துறை கைவிட வேண்டும்.  அதற்கு மாறாக வணிக வளாகங்கள் அமைத்தல், சுற்றுலா பயணிகளுக்கு விடுதிகள் அமைத்தல் போன்ற திட்டபணிகளை ரயில்வே மேற்கொண்டால் வருவாயை அதிகரிக்க முடியும்’’ என்றார்.இந்த நிதியைக் கொண்டு கிடப்பில் உள்ள புதிய பாதை, அகலப்பாதை திட்டப்பணிகள் மற்றும் மிகவும் பழைமையான பாதையை புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x