Published : 08 Aug 2018 02:24 AM
Last Updated : 08 Aug 2018 02:24 AM
திமுக தலைவர் மு.கருணாநிதி ஈரோட்டில் தங்கியிருந்து குடியரசு, விடுதலை இதழ்களுக்கு பணியாற்றியது குறித்து, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் த.சண்முகம் கூறியதாவது:
‘ஈரோடு குருகுலத்தில் படித்து வந்த மாணவன் நான்’ என அடிக்கடி பெருமையுடன் சொல்பவர் திமுக தலைவர் மு.கருணாநிதி. ஈரோட்டில் பெரியார், அண்ணாவுடன் இணைந்து குடியரசு மற்றும் விடுதலை பத்திரிகை பணிக்காக, 1944-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் கருணாநிதி தங்கியிருந்தார். அப்போது அண்ணா தலைமையில், கருணாநிதி, ஈ.வி.கே.சம்பத் போன்ற தலைவர்கள் ஈரோட்டில் தங்கியிருந்து பணிபுரிந்துள்ளனர்.
திராவிடர் கழகத்தின் கொடி உருவாக்கும் பணியில் கருணாநிதியின் பங்கு முக்கியமானது. கொடி உருவாக்கத்தின்போது, கருப்பு வண்ணத்துக்கு நடுவே சிவப்பு இருக்க வேண்டும் என்ற யோசனை உருவானபோது, தனது விரலில் குண்டூசியில் குத்தி ரத்தம் எடுத்து, கருப்பின் மையத்தில் வைத்து, திராவிடர் கழகக் கொடியின் மாதிரியை உருவாக்கியவர் கருணாநிதி. ஈரோட்டில் நடந்த இந்த சம்பவம் மறக்க முடியாதது. கதை, திரைக்கதை, கவிதை என எந்த துறையாக இருந்தாலும், அதில் பெரியாரின் கொள்கைகளை வெளிப்படுத்துவதில் கருணாநிதி உறுதியாய் இருந்தார்.
திராவிடர் கழகத்தின் கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக மாணவர் பயிற்சி பாசறை ஈரோட்டில் நடக்கும். இந்த பயிற்சியில் கருணாநிதி, கி.வீரமணி, அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். புலவர் ஆறுமுகனார் இந்த குழுவின் தலைவராக இருந்து பயிற்சி அளித்தார். இந்த பயிற்சிக்குப் பின் மாநிலம் முழுவதும் பெரியாரின் கருத்துக்களை கருணாநிதி எடுத்துச் சென்றுள்ளார்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில், திராவிடர் கழகம் சார்பில் பெரியாருக்கு சிலை நிறுவப்பட்டது. 1971-ல் நடந்த சிலை திறப்பு விழாவில் குன்றக்குடி அடிகளார் தலைமையில், பெரியார் முன்னிலையில், முதல்வர் கருணாநிதி பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். அதன்பின், 1976-ல் பெரியார் அண்ணா நினைவகத்தை திறந்து வைத்த கருணாநிதி, அதனை தொடர்ந்து அரசு பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார், என்றார்.
அறிவுப்பொறிக்கு திருத்தலம்
ஈரோடு நகரில் 1971-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நடந்த பெரியார் சிலை திறப்பு விழாவில், அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி பேசியதிலிருந்து...
"எப்படி பக்தர்களுக்கு பல ஷேத்திரங்கள், தலங்கள் உள்ளதோ, அதைப்போலவே, சுயமரியாதை இயக்க, திராவிடர் கழக, திமுக தோழர்களுக்கு அறிவுப்பொறிக்கு திருத்தலமாய் அமைந்த ஊர் ஈரோடு. திமுக தொடங்கப்பட்டபோது, திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று அண்ணா சொன்னார். அந்த வார்த்தை எந்த அளவுக்கு உண்மையாகி உள்ளது என்பதை இங்கு பார்க்கிறோம்.
பெரியாருக்கும், எங்களுக்குமான ஒற்றுமை சாதாரணமானதல்ல. நாங்கள் எல்லாம் பெரியார் வீட்டில் அவர் இட்ட பணிகளைச் செய்து வந்தோம். கழகத்துக்கு கொடி வேண்டும் என பெரியார் சொன்னபோது, பலரும் பலவிதமாய் சொன்னார்கள். ஒருநாள் நள்ளிரவில் குடியரசு அலுவலகத்தில் பலவிதமான கொடிகளைப் போட்டுப் பார்த்தோம். கடைசியில் சுற்றிலும் கருப்பு வர்ணத்தைப் பூசி, இடையில் சிவப்பு வைக்க மை தேடினோம். மை கிடைக்கவில்லை. இறுதியில், குண்டூசியால் கைவிரலைக் குத்தி, அதில் பீறிட்ட ரத்தத்தைக் கொண்டு நடுவில் சிவப்பு வைத்து பெரியாரிடம் சபாஷ் வாங்கியவர்கள் நாங்கள்.
ஊரை ஏமாற்றுவது, உலகை ஏமாற்றுவதைக் கண்டிப்பதுதான் நாத்திகம் என்றால், நான் ஒரு நாத்திகன்தான். இந்த அரசு பெரியாரின் வேகத்துக்கு செல்லாவிட்டாலும், பெரியார் பாதையில் மெல்ல, மெல்ல ஆனால், உறுதியாக நடைபோடும்".
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT