Last Updated : 08 Aug, 2018 01:55 PM

 

Published : 08 Aug 2018 01:55 PM
Last Updated : 08 Aug 2018 01:55 PM

கருணாநிதிக்கு மிகப்பெரிய பெருமை: வரலாற்றில் முதல்முறையாக எம்.பி.யாக இல்லாத ஒருவருக்கு நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

 நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக எம்.பி.யாகவோ, அல்லது முன்னாள் எம்.பி.யாகவோ இல்லாத மறைந்த முதல்வர் கருணாநிதிக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முதல்முறையாக நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி ரத்த அழுத்தக் குறைபாடு காரணமாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கருணாநிதி அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் முதுமை காரணமாக அவரின் உடல்உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், நேற்று மாலை 6.10மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவுக்குப் பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தேசிய தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும், எம்.பி.யாக இருந்தவருக்கும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது இல்லை. ஆனால், நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாகக் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவை கூடியதும் திமுக கருணாநிதி மறைவு குறித்த செய்தியை வாசித்து, இரங்கல் தெரிவித்தார். மேலும், அவையை ஒத்திவைப்பது குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி, அவை ஒத்திவைப்பது குறித்து முடிவு செய்து அறிவித்தார்.

கருணாநிதி நாட்டின் தலைசிறந்த தலைவர், உயர்ந்த தலைவர் அவருக்காக நாடாளுமன்றத்தை ஒருநாள் ஒத்திவைப்பதை ஏற்கிறோம் என பல்வேறு கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.

முன்னதாக, திமுக கருணாநிதி குறித்து புகழாரம் சூட்டி வெங்கையா நாயுடு பேசினார். இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை முதல்வராகவும் கருணாநிதி செயல்பட்டவர். அதுமட்டும்லாமல், கலை, இலக்கியம், நாடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனிமுத்திரை பதித்தவர் கருணாநிதி.

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காகவும் கடுமையாக உழைத்தவர். அவரின் மறைவு, நாட்டுக்குப் பேரிழப்பு, மிகச்சிறந்த நிர்வாகியை, சமூகத்தொண்டரை, எழுத்தாளரை நாடு இழந்துவிட்டது என்று புகழாரம் சூட்டினார்.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது குறித்தும், கருணாநிதி மறைவு குறித்தும் அறிவிக்கப்பட்டது. மக்களவையிலும் கருணாநிதி மறைவு குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அதன்பின் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நான் முழுவதும் ஒத்திவைப்பதை அரசு ஏற்கிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மக்களவையையும் ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x