Published : 13 Aug 2014 08:57 AM
Last Updated : 13 Aug 2014 08:57 AM

எலிகளைப் பார்த்து ஓடிய பூனை: பேரவையில் நகைச்சுவை விவாதம்

சட்டப்பேரவையில் பொதுத்துறை, நிதித்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் (தேமுதிக) பேசும்போது, “எம்எல்ஏ விடுதியில் எலிகள், கொசுக்கள், கரப்பான் பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது” என்றார்.

அப்போது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, “அப்படி எந்தத் தொந்தரவும் இல்லை. கொசுக்களைக் கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. எலிகளைப் பிடிக்க எலிப்பொறி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை மீறி எலிகள் வர முடியாது.

தெரு நாய்களைப் பிடித்துச் செல்ல எம்எல்ஏ விடுதியில் நாய் பிடிக்கும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

மோகன்ராஜ்:

எங்கள் கட்சி எம்எல்ஏ ஒருவர் எலிகளைப் பிடிக்க பூனை கொண்டு வந்தார். எம்எல்ஏ விடுதியில் இருந்த எலிகளைப் பார்த்து அந்தப் பூனை ஓடிவிட்டது.

பன்னீர்செல்வம்:

உறுப்பினர்கள் தங்குவதற்கு மட்டும்தான் எம்எல்ஏ விடுதி, பூனை தங்குவதற்காக அல்ல.

மோகன்ராஜ்: அறையில் உள்ள ஓட்டையை அடைத்துவிட்டுத்தான் தூங்க வேண்டியுள்ளது. அப்படி அடைக்காவிட்டால் எலி வந்து கடித்துவிடும்.

மோகன்ராஜ்:

எம்எல்ஏ விடுதியில் ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும்.

பன்னீர்செல்வம்:

வங்கி ஏடிஎம் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதையடுத்து மோகன்ராஜ் பேசும்போது, முதல்வரின் தனிப்பிரிவு, சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம்:

முதல்வரின் தனிப்பிரிவு முன்னோடி குறைதீர் மையமாக செயல்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டு களில் முதல்வரின் தனிப் பிரிவுக்கு நேரிலும், தபாலிலும், இணையதளம் மூலமாகவும் 10 லட்சத்து 22 ஆயிரத்து 848 மனுக்கள் வந்தன. இவற்றில், 9 லட்சத்து 55 ஆயிரத்து 507 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுவிட்டது.

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x