Published : 18 Aug 2018 06:26 PM
Last Updated : 18 Aug 2018 06:26 PM

மோமோ சேலஞ்சை தடுக்க என்ன செய்யலாம்? போலியாக மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை: துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பேட்டி

மோமோ சேலஞ்ச் என்ற விபரீதத்தால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மோமோ சேலஞ்ச் பெயரால் தெரிந்த நபர்களை ஜாலியாக மிரட்டுவதன் மூலம் அவர்கள் மன உளைச்சல் அடைந்து போலீஸாருக்குப் புகாராக வருகிறது. இது குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ப்ளூவேல் என்ற விளையாட்டு கடந்த ஆண்டு பிரபலமானது. ப்ளூவேல் விளையாட்டு இணையத்தின் மூலம் உள்ளே புகுந்து அதன் மூலம் அந்த விளையாட்டை விளையாடுபவர்களை உளவியல் ரீதியாக மிரட்டி அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டி உயிரைப் பறித்தது.

இதில் தமிழகத்தில் பல மாணவர்கள், இளம் தலைமுறையினர் பலியாகினர். எந்த ஒரு புதிய விஷயங்களுக்கும் இளம் தலைமுறையினர் உடனடியாக அதில் ஈடுபடுவது வழக்கம். இளங்கன்று பயமறியாது என்பார்கள். என்னதான் இருக்கிறது பார்ப்போம் என்று ஈடுபடுகின்றனர். இதில் ஒரு வகையானவர்கள்தான் இதுபோன்ற விஷயங்களில் சிக்குகின்றனர். ஒரு கட்டத்தில் உயிரை மாய்க்கும் அளவுக்குச் செல்கின்றனர்.

ஹேக்கர்ஸ் என்று அழைக்கப்படும் இணையத் தகவல் திருடும் கும்பல்களின் அட்டூழியம் தான் இந்த வகை விளையாட்டுகள். விளையாட்டாக, மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள்தான் இதுபோன்ற ஹேக்கர்களாக இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

சாப்ட்வேர்களைக் கரைத்து குடித்தவர்கள் அடுத்தவர்களின் தகவல்களைத் திருடுவதில் கைதேர்ந்தவர்கள் ஆகிவிடுகின்றனர். இதுபோன்ற ஹேக்கர்களால் பரப்பப்படுவதுதான் மோமோ சேலஞ்ச் விளையாட்டு.

மோமோ என்ற அருவருப்பான உருவமாக ஜப்பானில் தேர்வு செய்யப்பட்ட பறவையின் உடல் மனித உடல் கலந்த, முட்டைக் கண்கள் கொண்ட ஒரு உருவத்தைத்தான் இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

மோமோ சேலஞ்சில் முதன் முதலில் அர்ஜென்டினாவில் 12 வயது சிறுமி பலியானார். அவரது செல்போனை ஹேக் செய்தவர்கள் அவரைப் படிப்படியாக விளையாட விட்டு கடைசியில் தற்கொலை செய்ய வைத்தார்கள்.மோமோ சேலஞ்ச் தற்போது அமெரிக்கா, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பலரின் உயிரைப் பறித்துள்ளது.

என்ன இருக்கு இந்த மோமோ சேலஞ்சில்?

உங்கள் அந்தரங்கம் சந்திக்கு வரும் என்ற மிரட்டல், அதன் மூலம் உங்களை ஆட்டி வைப்பதுதான் மூலம். ஒவ்வொருவருக்கும் அவரவர் கையிலிருக்கும் செல்போன் ஒரு அந்தரங்கத் தகவல் மையம் எனலாம். நீங்கள் ரகசியமாக எடுக்கும் போட்டோக்கள், வீடியோக்கள், உங்கள் உறவினர்களை எடுக்கும் போட்டோக்கள், வெளியிட முடியாத உங்களது அந்தரங்கங்கள் அடங்கியது உங்களது செல்போன் என்றால் அது மிகையல்ல.

படம் எடுத்தோம் அழித்துவிட்டோம் என்பதெல்லாம் ஹைதர் காலத்து கதை. படம் எடுத்தால் அழிக்க முடியாது. அது உங்கள் டேட்டாவாக இருக்கும். நீங்கள் செல்போன் கேலரியில் அழிக்கலாம். ஆனால் அது கிளவுட், கூகுள் டேட்டா என்று எங்காவது சேமிக்கப்படும்.

செல்போன் வாட்ஸ் அப்பில் வரும் அழைப்பு மூலம் மோமோ சேலஞ்ச் என்று தொடர்பு கொள்வார்கள். பதிலளித்தால் உங்கள் செல்போன் கான்டாக்ட், அனைத்து டேட்டாக்கள் திருடப்படும். மறைமுகமாக உள்ளே நுழையும் மால்வேர்கள் உள்ளே உள்ள அனைத்தும் கண்காணிக்கப்படும்.

பின்னர் அவர்கள் உங்களை மிரட்டத் தொங்குவார்கள். உங்களது அந்தரங்கப் படம், குடும்பத்தாரின் அந்தரங்கப் படம் உள்ளது. அதை உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பி விடுவோம், வலைதளத்தில் போட்டுவிடுவோம் என்பார்கள். பின்னர் அவர்கள் சொற்படி கேட்க வேண்டும் என்று கட்டளை வரும்.

உங்களை மாடி மீது நிற்கச் சொல்வார்கள், ரயில் தண்டவாளம், நடு சாலையில் நிற்பது, கையை அறுத்துக்கொள்வது, உடலில் சூடு வைத்துக்கொள்வது என்று உங்களை ஆட்டிப் படைப்பார்கள். முடிவில் உங்களைத் தற்கொலைக்குத் தூண்டுவார்கள் அல்லது மன உளைச்சலில் இருந்து விடுபட நீங்களே தற்கொலை செய்துகொள்வீர்கள்.

இப்படிப்பட்ட மோசமான மோமோ சேலஞ்ச் விளையாட்டைத் தெரியாமல் டவுன்லோடு செய்பவர்கள் நிலைதான் மேற்சொன்ன நிலை.

தமிழகத்தில் இதற்கான விழிப்புணர்வு வேண்டும் என்று காவல் துறையினர் விழிப்புடன் உள்ளனர். இதனிடையே இது குறித்து அறிந்த சில குறும்புக்கார இளைஞர்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் விளையாட்டை ஆரம்பித்துள்ளனர்.

தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு வெளிநாட்டு சிம் கார்டுகள் மூலம் அழைக்கும் இவர்கள் நாங்கள் மோமோ சேலஞ்ச் பேசுகிறோம் என்று அழைத்து அவரது குடும்பத்தார், படிப்பு, வேலை பற்றிய தகவல்களைக் கூறி உங்கள் செல்போனை ஹேக் செய்துவிட்டோம் என்று கூறி மிரட்டுகின்றனர்.  ஏதாவது போட்டோக்களை அனுப்பி வைத்து அவர்களை பயப்பட வைத்து அதில் இன்பம் காணுகின்றனர்.

இதனால் உண்மையில் மோமோ சேலஞ்சில் சிக்கிக்கொண்டோமோ என காவல்துறையினரிடம் புகார் அளிக்க, அவர்கள் நடத்திய விசாரணையில் உண்மை தெரியவந்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலக துணை ஆணையர் (தலைமையிடம்) அர்ஜுன் சரவணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மோமோ சேலஞ்ச் குறித்து தமிழகத்தில் புகார் எதுவும் வந்துள்ளதா?

சைபர் பிரிவில் இதுவரை விசாரித்ததில் புகார் எதுவும் இல்லை என்றே தகவல் வந்துள்ளது. ஆனால் நான் இதுபற்றிய பதிவைப் போட்ட பின்னர் எனது நண்பர் ஒருவருக்கே இதுபோன்ற அழைப்பு வந்ததுள்ளது. அந்தப் படத்தை அனுப்பி ஹாய் மோமோ என்று அனுப்பியுள்ளதாக அந்த ஸ்க்ரீன்ஷாட் அனுப்பியிருந்தார்.

மோமோ சேலஞ்ச் புகார் தவிர அதுபோன்று போலியாக மிரட்டுபவர்கள் பற்றிய புகார்கள் வந்ததாகப் பதிவிட்டுள்ளீர்களே?

ஆமாம், மூன்று புகார்கள் இதுவரை வந்துள்ளன. அவை அனைத்தும் தெரிந்த நண்பர்கள் பிரைவேட் எண் மூலம் தனது நண்பர்களுக்கு மோமோ சேலஞ்ச் என்று பேசி மிரட்டியுள்ளனர். ஜாலிக்காக செய்யப்பட்ட அந்த அழைப்புகளினால் சம்பந்தப்பட்டவர்கள் பயந்துபோய் போலீஸில் புகார் அளிக்க உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

இதுபோன்ற அழைப்புகளில் என்ன செய்ய வேண்டும்? உங்களிடம் வந்த புகாரை எப்படிக்  கையாண்ட்டீர்கள்?

இதுபோன்ற அழைப்புகளில் ஏமாற்றும் விதமாகச் செய்கிறார்கள். குரல் மாறிப் பேசும் செயலி மூலம் பேசி அழைத்து உனது மோசமான பக்கங்கள் எனக்குத் தெரியும். அதை வெளியிட்டுவிடுவேன் என்று கூறி, உனது அப்பா, அம்மா, உறவுகள் இன்னார் என்று அனைத்து விவரங்களையும் சொல்லி அனைத்தையும் சொல்லும்போது அவர்கள் நம்பி விடுகின்றனர்.

எனக்குத் தெரிந்து வந்த இரண்டு புகார்களில் ஒரு கல்லூரி மாணவரிடம் இதே போன்று மோமோ அழைப்பு வந்ததாகவும் அனைத்து விவரங்கள், எந்தக் கல்லூரியில் படிக்கிறாய் என்பது உட்பட பல விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.

நான் அந்த மாணவரிடம் உன் கல்லூரி தகவல் எல்லாம் உன் செல்போனில் இல்லாத போது ஹேக் செய்பவர்களுக்கு அது கிடைக்க வாய்ப்பில்லை. உன்னிடம் ஃபேஸ்புக் ஐடியும் இல்லை. பின் எப்படி அந்த விவரங்கள் தெரிந்தன. ஆகவே தெரிந்த யாரோ உன்னிடம் விளையாடுகிறார்கள் என்று தெரிவித்தேன்.

அதே போன்று உடன் படிக்கும் சக மாணவர் விளையாட்டாகச் செய்ததாக என்னிடம் கூறினார்.

இதுபோன்ற செயல்களில் விளையாட்டாக ஈடுபட்டவர்களை எச்சரித்தீர்களா?

அவர்கள் நம்பரை வாங்கிப் பேசினேன். சும்மா ஜாலிக்காக செய்தோம். மோமோ பற்றி வரும்போது சும்மா மிரட்டிப் பார்க்கலாம், பயத்தில் என்ன செய்கிறான் என்று செய்தோம் என்று கூறினர்.

இதுபோன்று விளையாட்டாகச் செய்தாலும் அது குற்றம் தானே? அதற்கு என்ன நடவடிக்கை?

கண்டிப்பாக, இதுவும் ஒருவகை மிரட்டல் தான். போட்டோ அனுப்பு, சொந்த விவரங்கள் அனுப்பு என்று பயமுறுத்துவதும், சொந்த விவரங்கள் கேட்பதும் மிரட்டல். ஆகவே இது மன உளைச்சலை ஏற்படுத்தி எதிராளியை தவறான முடிவை நோக்கித் தள்ளும் செயல் என்பதால் ஐடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை வரும். ஆகவே,  புகார் வந்தால் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்யப்படும்.

விளையாட்டாக மோமோ சேலஞ்ச் அழைத்தால் நடவடிக்கை, உண்மையாக மோமோ சேலஞ்ச் அழைப்பு வந்தால் என்ன செய்வது?

உண்மையில் மோமோ சேலஞ்ச் அழைப்பு வந்தால், முதலில் பயப்படக்கூடாது. யார் இதற்குத் தீர்வு தருவார்களோ அவர்களைத்தான் நீங்கள் அணுக வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் சைபர் பிரிவு யூனிட் காவல்துறையில் உள்ளது. மாவட்டங்களிலும் சைபர் செல் இருக்கும். அவர்களிடம் முதலில் கூறுங்கள். பயந்துகொண்டு வேறு எதுவும் செய்யும் அவசியம் கிடையாது. விழிப்புணர்வுதான் முக்கியம்.

மோமோ அழைப்பு வந்த பின்னர் என்ன தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம்?

முதலில் மோமோ அழைப்பு வந்த நம்பரை பிளாக் பண்ணுங்கள். உங்கள் செல்போன் டேட்டாவை அணைத்து விடுங்கள். டேட்டா இருந்தால்தான் எதுவும் வெளியே போகாது, உள்ளே வராது. உங்கள் கேமராவை ஆஃப் செய்து விடுங்கள்.

கேமராவை ஆபரேட் செய்யலாம் என்பதால், தேவைப்பட்டால் அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டி விடுங்கள். இதனால் அவர்கள் உங்கள் கேமராவை ஆன் செய்து கண்காணிக்க முடியாது.

ஆனால் அந்த மால்வேர் செட்டிங் மறைமுகமாக செல்போனில் இருக்கும் என்கிறார்களே?

அப்படி இருக்க வாய்ப்பில்லை. இதுபோன்று வரும் படங்களை டவுன்லோடு செய்யும்போதுதான் மால்வேர் ஊடுருவும். நீங்கள் அதைத் தவிர்க்க ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை கட் செய்துவிட வேண்டும். தேவைப்பட்டால் டவுன்லோடு செய்யும் முறை மட்டுமே செல்போனில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவையற்ற லிங்குகளை டவுன்லோடு செய்யக்கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே தப்பிக்க முடியும்.

இதுபோன்ற அழைப்புகள் செல்போனில் மட்டும்தான் வருகிறதா? அல்லது லேப்டாப் போன்றவற்றிலும் வருமா?

இது வாட்ஸ் அப் மூலமாக பரவுவதால் செல்போனில் மட்டுமே இது நடக்கிறது.

இவ்வாறு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவித்தார்.

வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் தங்கள் புரொபைல் படங்களை யார் பார்க்க வேண்டும் என்கிற ஆப்ஷனை வாட்ஸ் அப் செட்டிங்கில் தங்கள் தொடர்பில் உள்ளவர்கள் மட்டும் என்று மாற்ற வேண்டும். இலவசமாகவோ அல்லது சலுகை அடிப்படையில் பொருட்கள் தருகிறார்கள் என்று வரும் லிங்குகளை தொடவே கூடாது, அது ஹேக்கர்கள் உங்களுக்கு அனுப்பும் மெசேஜ் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Htts என்று வரும் லிங்குகள் ஆபத்தற்றவை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x