Published : 25 Aug 2018 11:00 AM
Last Updated : 25 Aug 2018 11:00 AM
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. டெல்லியிலிருந்து ஹரித்வாருக்கு வாஜ்பாயின் அஸ்தியின் ஒரு பகுதி கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்ளால் கங்கை நதிக்கரையில் கரைக்கப்பட்டது.
இதன்பின் வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைக்க பாஜக தலைமை முடிவெடுத்தது. அதன்படி அந்த அஸ்தியை பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச பாஜக தலைவர்களிடமும் ஒப்படைத்தனர்.
இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சார்பில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் மற்றும் செயலாளர் அருள்முருகன் ஆகியோர் வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக் கொண்டனர். பின்னர் இந்த அஸ்தி ஹைதராபாத் வழியாக புதுச்சேரி விமான நிலையத்துக்கு கடந்த 23-ம் தேதி கொண்டு வரப்பட்டது.
புதுச்சேரி சித்தானந்தா நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை பாஜக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வாஜ்பாய் ஒரு சிறந்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், மிக சிறந்த நாடாமன்றவாதி என்ற பெயர் பெற்றவர். அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து பாஜக அகில இந்திய தலைமை பொறுப்பை ஏற்றார்.
எப்போதும் அவர் நகைச்சுவையாக பேசுவார். ஆழ்ந்த கருத்துக்களை கூறுவார். அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பல ஆலோசனைகளை வழங்கியவர். அவர் ஒரு மிதவாதி. எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற மனப்பக்குவம் கொண்டவர். எல்லா அரசியல் தலைவர்களையும் அரவணைத்து செல்லும் தலைவர். வாஜ்பாய் ஒரு சரித்திரம், அவரது புகழ் மங்காது இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT