Published : 05 Aug 2018 09:56 AM
Last Updated : 05 Aug 2018 09:56 AM

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அகற்ற லாரிகள் வருவதில்லை: முன்பதிவு செய்து பல நாட்கள் காத்திருக்கும் மக்கள் அவதி

சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ள விரிவாக்கப்பட்ட பகுதி களில் லாரிகள் மூலமாக கழிவுநீர் அகற்றும் திட்டத்தில், முன்பதிவு செய்து பல நாட்கள் ஆகியும் லாரிகள் வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னையில் கடந்த 2011-ம் ஆண்டு 44 உள்ளாட்சிகள் மாநக ராட்சியுடன் இணைக்கப்பட்டு, அதன் எல்லை 176 சதுர கிமீ பரப்பில் இருந்து 426 சதுர கிமீ பரப்பளவில் எல்லை விரிவாக்கப்பட்டது. முந்தைய சென்னை மாநகராட்சி யில் பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடைந்துள்ளது.

அதே நேரத்தில் விரிவாக்கப் பட்ட பகுதிகளில் சோழிங்கநல்லூர், புழுதிவாக்கம், திருவொற்றியூர், போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்னும் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீரை அகற்ற மட்டுமே பெரும் தொகையை பொதுமக்கள் செலவிட்டு வருகின்றனர்.

அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாரம் இரு முறையும் தனி வீடுகளில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் கழிவுநீர் அகற்ற வேண்டியுள்ளது. புழல், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் லிட்டர் அகற்ற ரூ.1300 வசூலிக்கப்படுகிறது.

ஆனால் மடிப்பாக்கம், ராம்நகர், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் அகற்ற ரூ.3,500 வரை வசூலிக்கப்படுகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக, விரிவாக்கப்பட்ட பகுதி களில் உள்ள வீடுகளின் கழிவுநீர் தொட்டிகளில் இருந்து, சென்னை குடிநீர் வாரியம் மூலம் குறைவான கட்டணத்தில் கழிவுநீர் லாரிகள் மூலமாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித் திருந்தார்.

இத்திட்டம் கடந்த மே 15-ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. 044- 45674567 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு கழிவுநீரகற்று லாரிகள் கோரி பதிவு செய்யலாம் என்றும்  6 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் அகற்ற ரூ.650 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் குடிநீர் வாரியம் அறிவித்திருந்தது. இத்திட்டத்தை செயல்படுத்த சென்னை குடிநீர் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவுநீரகற்று லாரி கோரி பதிவு செய்தால், பல நாட்கள் ஆகியும் லாரிகள் வருவதில்லை  என்று  மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக மாதவரம் மண்டல பொதுமக்கள் கூறியதா வது: எங்கள் பகுதியில் 12 ஆயிரம் லிட்டர் கழிவுநீரை ரூ.1200-க்கு தனியார் லாரிகள் அகற்றி வருகின்

றன. அரசு திட்டத்தை பயன்படுத் தலாம் என்று கழிவுநீரகற்று லாரி கோரி பதிவு செய்தோம். 10 நாட்களுக்கு மேல் ஆகியும் லாரி வரவில்லை’’என்றனர்.

மடிப்பாக்கம் பகுதி மக்கள் கூறும்போது, "நாங்களும் லாரி கேட்டு பதிவுசெய்து பல நாட் கள் ஆகிறது. இன்னும் லாரி வரவில்லை. அரசு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தும்  அதன் பலன் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் மாதந்தோறும் உணவு, மின் செலவை விட அதிகமாக, கழிவுநீரை அகற்ற மட்டுமே செலவிட்டு வருகிறோம். அதனால் குடிநீர் லாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, காவல்துறை பாதுகாப்புடன் லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 6 கழிவுநீரகற்று லாரிகள் இயக்கப்படுகின்றன.  இதுவரை கழிவுநீர் அகற்றத்துக்காக 488 பேர் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலத்தில் 246 பதிவுகளும் பெருங்குடி மண்டலத்தில் 119 பதிவுகளும் வந்துள்ளன. மணலியில் ஒரே ஒரு பதிவு மட்டும் வந்துள்ளது.  அனைத்து பதிவுகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கழிவுநீர் அகற்றப்பட்டு வருகிறது. அதிக பதிவுகள் வந்துள்ள பகுதியில் கூடுதல் லாரிகள் இயக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் லாரி உரிமையாளர்களால் சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த கழிவு நீரகற்று லாரி ஓட்டுநர்கள் மிரட்டப்பட்டால் அது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x