Published : 07 Aug 2018 12:31 PM
Last Updated : 07 Aug 2018 12:31 PM

ஏர்வாடி தீ விபத்தில் காணாமல் போன மனநோயாளி; நோயில் இருந்து மீண்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்களுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஏர்வாடி தீ விபத்தின்போது மனநோயாளியாக காணாமல் போன ஒருவர், அந்நோயில் இருந்து மீண்டு சராசரி மனிதராக அவரது குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே உசிலம்பட்டியை சேர்ந்தவர் வாசுமலை. விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு சின்னராமையா உள்பட 4 மகன்கள், 4 மகள்கள். சின்ன ராமையாவுக்கு 17 வயதில் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. மனநோய் தீவிரமானதும், அவரை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமல் உறவினர்கள், அவரை ஏர்வாடி மனநலகாப்பகத்தில் கொண்டு போய் விட்டுள்ளனர்.

2001 ஆம் ஆண்டு ஏர்வாடி மனநல காப்பகம் தீப்பிடித்த சம்பவத்தில் 28 மனநோயாளிகள் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். அப்போது தமிழக அரசு அந்த காப்பகத்தில் உயிர் தப்பிய மனநோயாளிகளை தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மனநல காப்பகங்களுக்கு அனுப்பியது.

ஏர்வாடி தீ விபத்தில் உயிர் தப்பிய சின்னராமையா சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆனால், சின்னராமையா உறவினர்கள் அவர் இறந்துவிட்டதாக நினைத்து அவரை தேடுவதற்கு முயற்சி செய்யாமல் விட்டுவிட்டனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகவே அங்கிருந்து சின்னராமையா உள்ளிட்ட 10 நோயாளிகள் மதுரை செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 10 பேரும் தொடர் மனநல சிகிச்சை மற்றும் பயிற்சியால் தற்போது மனநோயில் இருந்து மீண்டு சராசரி மனிதர்களாகியுள்ளனர். அவர்கள் வேலைகளை அவர்கள் பார்ப்பதோடு, கைவினைப்பொருட்கள் தயாரிக்கின்றனர். தோட்ட வேலைகள் பார்க்கின்றனர்.

இதில், சின்னராமையா மனநல காப்பகத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, உள்ளிட்ட தோட்ட வேலைகளை பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் அளவுக்கு நலமாக மாறியுள்ளார்.

இந்நிலையில், சின்னராமையின் அண்ணன் மகள் கவிதா என்பவர், ஏர்வாடி தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு பார்க்க முடியாமல் போன தன்னுடைய சித்தப்பா சின்னராமையா, ஏர்வாடியில் இருந்து கீழ்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதை அறிந்து அங்கு சென்று விசாரித்துள்ளார். அவர் மதுரையில் உள்ள செல்லமுத்து அறக்கட்டளை காப்பகத்தில் இருப்பதை தெரிந்துள்ளார்.

கவிதா உதவியால் அவரது குடும்பத்தினர் அனைவரும் மதுரையில் உள்ள மனநல காப்பகத்திற்கு வந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு சின்னராமையாவைப் பார்த்துள்ளனர். தன்னுடைய சகோதர, சகோதரிகளை அடையாளம் கண்டுகொண்டு சின்னராமையா, அவர்களிடம் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இதையடுத்து, சின்னராமையாவை முறைப்படி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சின்னராமையா காணாமல்போன அதே ஏர்வாடி தீ விபத்து கோர சம்பவம் நிகழ்ந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அவரை அவரது குடும்பத்தினரிடம் மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சதீஷ் ராகவன் ஒப்படைத்தார்.

சின்னராமையாவுக்கு மனநலப் பயிற்சி அளித்த மனநல ஆலோசகர் பாபு கூறுகையில் “சின்னராமையாவை எங்களிடம் ஒப்படைக்கும்போது அவருக்கு தீவிர மனநோய் இருந்தது. ரத்த சோகை, காசநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் ஒல்லியான தேகத்துடன் காணப்பட்டார். அவருக்கு பல் விளக்க, பேண்ட், சட்டை கூடப் போட தெரியாது. தன்னிலை மறந்தநிலையில் வந்த சின்னராமையா தற்போது தன்னிடம் ஒளிந்துள்ள திறமைகளை வெளிப்படுத்தும் மனிதராக மாறியுள்ளார்” என்றார்.

சின்னராமையாவின் அக்காள் பொன்னுதாய் கூறுகையில், “தம்பியை மீண்டும் பார்ப்போம் என கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. சின்னராமையும், அவன் கூடப்பிறந்த லட்சுமணனும் இரட்டைக் குழந்தைகள். ரெண்டுபேரும் நன்றாகத்தான் பள்ளிக்கூடத்திற்கு போய் கொண்டு இருந்தார்கள். 10-ம் வகுப்பு படிக்கும்போது லட்சுமணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.

அந்த பாதிப்பில் சின்னராமையா மனநோயாளியாக மாறிவிட்டான். எங்களால் வீட்டில் வைத்துப் பாராமரிக்க முடியாததால் ஏர்வாடியில் கொண்டு போய்விட்டோம். அதன்பிறகு அவனைப்பார்க்க முடியவில்லை. மீண்டும் அவன் பழைய சின்னராமையாவாக கிடைத்ததில் மகிழ்ச்சி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x