Published : 30 Aug 2018 10:49 AM
Last Updated : 30 Aug 2018 10:49 AM

அரசுத் துறைகளிடம் புரிதல் இல்லை; கர்ப்பிணிகள் பதிவு செய்வதில் தொடரும் சிக்கல்- பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி

அரசுத் துறைகளிடையே புரிதல் இல்லாத காரணத்தால், கர்ப்பிணித் தாய்மார்கள் தங் கள் கர்ப்பகால விவரங்களை பதிவு செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குற்ற வழக்கு ஒன்றில் தண்டனை குறைவாகப் பெறும் நோக்கில், தன்னை 18 வயதுக்கு உட்பட்டவர் என பொய்யான தகவல் அளித்து ஒருவர், பிறப்பு சான்றிதழ் பெற்றதை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கண்டுபிடித்தது. இதைத் தடுக்கவும், பெண் சிசுக்கள் கர்ப்ப காலத்திலும், பிறந்த பிறகும் கொலை செய்யப்படுவதைத் தடுக்கவும் கர்ப்ப காலத்தை பதிவு செய்யும் முறையை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதற்காக கர்ப்பிணித் தாய்மார்களின் கர்ப்பம், குழந்தை வளர்ப்பு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (PICME) என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளது.

பிறப்புச் சான்றிதழ்

அதில், https://picme.tn.gov.in/picme_public என்ற இணையதளம் வழியாக கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கள் கர்ப்பகால விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை யில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கள் கர்ப்பகால விவரங்களை, தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகா தார நிலையங்கள், அரசு மருத்துவமனை களில் பதிவு செய்யலாம். ‘102’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும், அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களிலும், மேற்கூறிய இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.

அதன் பின்னர் ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட சுகாதார செலிவியர் ‘கர்ப்பம் தரித்தல் மற்றும் குழந்தை வளர்ப்பு (RCH)’ பதிவு எண் கொண்ட அடையாள அட்டையை வழங்குவார். கர்ப்ப காலம் மற்றும் குழந்தை வளர்ப்புக்கான அரசின் சேவைகளைப் பெற இந்தப் பதிவு எண் அவசியம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருமணம் செய்து கொண்டு வெளி மாவட்டம் சென்ற கர்ப்பிணித் தாய் ஒருவர் பிரசவத்துக்காக சென்னையில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த இரு மாதங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் கர்ப்பகால முன்பதிவுக்காக அரு கில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு திரு மணமான ஊரில் முன்பதிவு செய்ய வேண் டும் என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெண் திருமணம் செய்து கொண்ட ஊரில்தான் முன் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணைக் கொண்டு, பதிவு எண்ணை வழங்குவோம். முன்பதிவை நாங்கள் செய்யக்கூடாது என்று மாநகராட்சி சுகாதாரத் துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது” என்றனர்.

‘102’ இலவச தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யுமாறு கோரினால், “கர்ப்பிணித் தாய் தற்போது எங்கு உள்ளாரோ அங்கு தான் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட செவிலியர் கர்ப்பிணித் தாயை நேரில் பார்த்து ஆய்வு செய்ய முடியும்” என்றனர்.

அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று முன்பதிவு செய்யுமாறு கோரினால், “இந்த சேவையை மேற்கொள்ளுமாறு எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் இங்கு கர்ப்பகால முன்பதிவை மேற்கொள்ள இயலாது” என்று கூறியுள்ளனர்.

பல இடங்களில் அலைக்கழிப்பு

அரசின் அறிவுறுத்தல்படி பதிவு செய்யச் சென்ற கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்வாறு அலைகழிக்கப்படுவதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசு பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிறப்புச் சான்று பதிவில் தவறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் விதிகளை கடுமையாக்கி வருகிறோம். பல்வேறு துறைகள் இணைந்து இப்பணியை மேற்கொள்கிறோம். இத்திட்டம் புதிதாக தொடங்கப்பட்டு இருப்பதாலும், துறை பணியாளர்களிடையே புரிதல் இல்லாததாலும் சில இடையூறுகள் ஏற்படு கின்றன. இப்பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும். அரசு இ-சேவை நிறுவனத்துக் கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x