Published : 11 Aug 2018 03:05 PM
Last Updated : 11 Aug 2018 03:05 PM
ஆண்ட்ராய்டு செல்போன் உபயோகிக்கும் பெண்கள் சமீபகாலமாக சந்திக்கும் சைபர் பிரச்சினைகள், குற்றமிழைப்பவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகள் குறித்தும் அவற்றைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் மனநல நிபுணர் இளையராஜா ஆலோசனை.வழங்கியுள்ளார்.
சமீபத்தில் உறவுப்பெண்ணின் செல்போனில் ட்ராக் செய்யும் செயலி மூலம் ஹாக் செய்த இளைஞர் அவரது அந்தரங்க உரையாடல், காணொலிகளை வைத்து மிரட்டி பாலியல் உறவுக்கு அழைத்து சிக்கினார். இது ஏன் நடக்கிறது? நவீன வளர்ச்சியின் தாக்கம் மனித மனப்பிறழ்வை ஏற்படுத்துகிறதா? அல்லது தானாக வரும் மனோ வியாதியா?
இது குறித்து மனநல நிபுணர் இளையராஜாவிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் கேள்விகள் எழுப்பியபோது அவர் கூறியதாவது:
சகோதரி முறைகொண்ட பெண்ணிடமே அத்துமீறும் இந்த மனோபாவம் எதனால் ஏற்படுகிறது?
இது நவீன அறிவியல் வளர்ச்சியின் ஒரு விளைவுதான். 30, 40 சதவீதம் மனப்பாதிப்பு, இணையதளத்தில் கிடைக்கும் ஆபாசப் படங்களின் ஆதிக்கம் (porn movie influence) முக்கியப் பங்கு வகிக்கிறது. தொடர்ச்சியாக இதுபோன்ற பல படங்களைப் பார்க்கும் ஆட்களின் ஆழ்மனதில் அது படிய ஆரம்பிக்கிறது. பின்னர் அது அதிகரித்து தங்கை, அக்கா சொந்த உறவுகள் எனத் தெரிந்தும் பாலியல் உணர்வுகள் போகும். உறவினர் என்பதைத் தாண்டி அவர் வேறு பார்வை பார்க்க ஆரம்பிப்பார்.
உறவுப் பெண்ணை படம் எடுத்து மிரட்டும் அளவுக்கு துணிவு எப்படி வருகிறது?
ஆரம்பத்தில் யாராவது ஒருவரை முயற்சித்து வெற்றி பெற்றிருக்கலாம், அது மனதில் ஆழமாகப் படிந்திருக்கும். அதன் பின்னர் அது ஒரு அடிக்ஷனாகிப் போகும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, அதிலேயே மூழ்கிப் போவார்கள். இவர்கள் பெரும்பாலும் வேலை வெட்டிக்குப் போகாமல் இதுபோன்ற விஷயங்களில் அதிகமாக ஈடுபடும் நபர்களாக இருப்பார்கள்.
இந்த வியாதி எப்படி ஆரம்பிக்கிறது?
இதுபோன்ற சம்பவங்கள் கால் சென்டர்களில் அதிகம் நடக்கும். சிலர் கால் சென்டர்களில் பெண்கள் குரலை மட்டுமே கேட்டால் தொடர்ந்து பேசுவார்கள். சிலர் அப்படிக் கேட்பதற்காகவே போன் செய்வார்கள். அதன்மூலம் திருப்தி அடைவார்கள். இதுபோன்ற எண்ணம் கொண்ட வயதானவர்கள் பெரிதாக பாலியல் தொந்தரவு தர மாட்டார்கள். ஜஸ்ட் லேசாக ஒரு தட்டு தட்டிவிட்டுப் போவது, லேசாக உரசுவது ஆகியவற்றின் மூலம் திருப்தி அடைவார்கள்.
அதுபோன்ற வகைதான் இதுவும். பெண்கள் பேசும் உரையாடல்களைக் கேட்டு ரசிப்பது, அதிலேயே சுகம் காண முயற்சிக்கும் போது அதற்கான நெறிமுறைகளை மீறுவார்கள். அதில் ஒருவகை தான் செல்போன் பேச்சுகளை ஹேக் செய்யும் ரகம்.
இதற்கு உளவியலில் ஸ்கேட்டலோஜியா (scatologia) என்று சொல்வார்கள். இந்த வகையான மனநோயால் பாதிக்கப்பட்டவர் இந்த மாதிரியான உரையாடலைக் கேட்கும்போது அதன்மூலம் பாலியல் ரீதியான திருப்தியடைவார்கள்.
ஆனால் அதையும் தாண்டி வீடியோ எடுத்துவைத்து மிரட்டுகின்றனரே?
இதில் ஒருவர் மூழ்கிவிட்டார் என்றால் அவர் அன்றாட வேலைகளைக் கூட விட்டுவிடுவார். அதன் அடுத்தகட்டமாக ஆபாசப் படங்கள் வரும் வலைப்பக்கத்தில் மூழ்குவார். அதன் பாதிப்பு அவர் ரகசியமாக வீடியோ எடுப்பது, போட்டோ எடுத்து ரசிப்பது போன்றவற்றில் ஈடுபட ஆரம்பிப்பார். ஆடியோ போகப் போக வீடியோவாக மாறும். இதைத்தான் ஆபாச படப் பாதிப்பு (porn affect), சைபர் பாதிப்பு (cyber affect) என்கிறோம். இதன் மூலம் இதற்கு அடிமையாகும் பட்சத்தில் இவர்கள் எந்த வேலையிலும் ஈடுபட மாட்டார்கள்.
வலைதளங்களை, நவீன வரவுகளை அனைவரும் தானே பயன்படுத்துகின்றனர்? அப்படியானால் அனைவரும் அப்படிப்பட்டவர்களா?
அப்படியல்ல. அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்ன் சைட்டைப் பார்க்கிறார்கள். எல்லோரும் பார்ப்பார்கள், யார் அதற்கு அதிக நேரம் கொடுத்து அதில் மூழ்குகிறார்களோ அப்போதுதான் அது மனோ பிர்ச்சினையாக வரும். நமது செயல்பாட்டை பாதிக்கும் பிரச்சினையாக வரும்போது அது மனப்பிரச்சினையாக மாறுகிறது.
பார்க்காமல் இருப்பது, பார்த்துக்கொண்டே இருப்பது என்ற இரண்டுமே பாதிப்புதான். பூஜ்யத்திலும் இருக்கக்கூடாது, அதிகபட்ச சதவிகிதத்திலும் மூழ்கக் கூடாது. கேடலிஸ்ட் என்று சொல்வோம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆசையில் உந்தப்பட்டு பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதையே பிழைப்பாக வைத்து மூழ்கிக் கிடக்கும்போது நாம் சிறுக சிறுக மனோ வியாதி நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
நவீன விஞ்ஞான வளர்ச்சியில் நவீன கருவிகள் கையில் எளிதாகக் கிடைக்கின்றன. வேலைக்குப் போகும் பெற்றோர், அப்பா அல்லது அம்மா மட்டுமே உள்ள பிள்ளைகள் தனிமையாக இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். அதன்மூலம் குழந்தைகள் ஆபாச வலைதளம், மற்ற பக்கங்களில் மூழ்கி அதற்கு அடிமையாகும் நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இவை நாட்பட்ட பழக்கத்தால் நாளடைவில் உருவாகக் கூடியதுதான். முழுக்க முழுக்கப் பெற்றோர் கண்காணிப்பு மிக முக்கியம். தற்போதைய காலகட்டத்தில் நெட் கனெக்ஷனுடன் கூடிய லேப்டாப், ஆண்ட்ராய்டு செல்போன் பயன்பாடு மிக அதிக பாதிப்புகளை உருவாக்குகிறது. பருவ வயதில் உள்ள குழந்தைகள் தனியாக லேப்டாப்பிலோ, செல்போனிலோ நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்றால் பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
இதை எப்படிக் கண்காணித்து தடுப்பது?
கூடியவரை அனைவரும் பயன்படுத்தும் விதமாக லேப்டாப், டெஸ்க்டாப் வீட்டின் ஹாலில் இருப்பது போல் அமைக்க வேண்டும். பிள்ளைகள் அறையில் லேப்டாப் பயன்படுத்தினால் ஸ்க்ரீன் வாசலைப் பார்த்தவாறு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வயதில் நவீன செல்போன்களைப் பயன்படுத்த அனுமதிப்பதும், அதையும் பெற்றோர் கண்காணிப்பதும் முக்கியம்.
குழந்தை தனிமையில் லேப்டாப்புடன் அல்லது செல்போனுடன் அதிக நேரம் செலவிட்டாலோ, அப்படிப் பயன்படுத்தும்போது நம்மை தவிர்த்தாலோ கண்காணிப்பது முக்கியம். நாட்பட கவனிக்காத நிலையில் அடிக்டுகளாக மாற வாய்ப்புண்டு.
இதில் ஏதாவது வித்தியாசமான பாதிக்கப்பட்ட நபர் கவுன்சிலிங் பெற வந்துள்ளாரா?
ஒருவர் வந்தார். அவருக்கு ஒரே பிரச்சினைதான். வீட்டில், அலுவலகத்தில் கழிப்பறைக்குச் சென்றால் வெளியே வர 15 நிமிடத்திற்கு மேல் ஆகும். இதனால் உறவினர்கள், நண்பர்களிடையே கேலிப்பேச்சுக்கு ஆளாகினார். அவருக்கு கவுன்சிலிங் கொடுத்தபோது அவர் கூறியது வித்தியாசமாக இருந்தது.
ஆரம்பத்தில் கழிப்பறையில் எனக்கு மலச்சிக்கல் இருந்தபோது பாக்கெட்டில் இருந்த செல்போனில் பார்ன் சைட்டைப் பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின்னர் எப்போதெல்லாம் கழிப்பறைக்குப் போகிறேனோ அப்போதெல்லாம் பார்ன் சைட்டைப் பார்த்தால் தான் முடியும் என்ற நிலைக்கு ஆளாகி விட்டேன் என்று தெரிவித்தார்.
தற்போது கழிப்பறைகள் வெஸ்டர்ன் ஸ்டைலில் அமர்ந்துபோகும் வகையில் உள்ளதால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு நாளடைவில் செல்போன் இருந்தால் தான் என்ற நிலைக்கு அடிக்ட் ஆகின்றனர். இதுபோன்ற புதுவிதமான மன வியாதியஸ்தர்களும் உள்ளனர். பின்னர் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தேன். ஒருவர் மட்டுமே வந்தார், ஓராயிரம் பேர் நம்மில் உள்ளனர்.
செல்போனில் ஹேக் செய்யும் நபர்களை, இதுபோன்ற மனோவியாதிக்கு அடிமையான நபர்களை எப்படிக் கண்டறிவது?
இந்தப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அதில் சுகம் காண்கிறார்கள். அதை அவர்கள் குற்றமாக நினைப்பதில்லை. தனக்கு இப்படிப் பிரச்சினை உள்ளது என்று வெளியில் நண்பர்கள், உறவினர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை.
உளவியல் நிபுணர்களிடம் மட்டுமே சொல்கிறார்கள். இதனால்தான் இது குறித்த தகவல் அதிகம் வெளியே வராமல் உள்ளது. அதனால்தான் அவர்கள் குற்றமிழைத்து சிக்கும்போது வெளியே தெரிகிறது. அப்போதுதான் இப்படிக்கூட பிரச்சினை உள்ளதா என்று அனைவரையும் யோசிக்க வைக்கிறது.
பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பெண்கள் எப்போதுமே நமது அந்தரங்கம் வெளியே செல்லும் வாய்ப்புள்ள கருவி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பெண்களும் சரி, ஆண்களும் சரி முடிந்தவரை செல்போன் தானே என்று நண்பர்களிடம், உறவினர்களிடம் கொடுப்பதை தவிர்ப்பது பாதுகாப்பு.
உங்கள் செல்போனை நீங்கள் கொடுப்பதன் மூலம் மேற்கண்ட மனநிலையில் உள்ளவர்கள் அதை ஹேக் செய்ய அல்லது அதில் உள்ள படங்களை, வீடியோக்களை எடுக்க வாய்ப்புண்டு. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அறிவுரை தான். செல்போன் என்பது நமது அந்தரங்கத் தகவல்கள் அனைத்தும் அடங்கிய ஒரு கிரெடிட் கார்டு போன்ற ஒரு கருவி.
அப்படியானால் எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும்?
செல்போனை சர்வீஸ் சென்டரில் கொடுத்தால்கூட கேலரியில் உள்ள அனைத்தையும் நீக்குவது, ரீசெட் செய்து கொடுப்பது நல்லது. மெமரி கார்டை எடுத்துவிட்டுக் கொடுப்பது நல்லது. இந்தக் காலத்தில் போனில் முடிந்தவரை லாக் போடுவது, சென்சார் லாக் போடுவது சிறந்தது.
உங்களுக்குத் தெரியாவிட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தில் கேட்டால் அவர்கள் வழிகாட்டுவார்கள். நமது போன் ஐந்து நிமிடம் அடுத்தவர் கையிலிருந்தால் நமது வாட்ஸ் அப் வரை கண்காணிக்கும் செயலிகள் வந்துவிட்டன.
ஆகவே, செல்போன் என்பது நமது அந்தரங்கம் என்பதை உணர வேண்டும். மறந்தும் அடுத்தவர் கையில் குறிப்பாக பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆகவே ஆபாச வலைதளங்களின் ஆதிக்கம் ஒருவரின் ஆளுமையை, செயல்பாட்டை, சிந்திக்கும் திறனையே பாதிக்கும் அளவுக்கு உள்ளது.
இவ்வாறு மனநல நிபுணர் இளையராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT