Published : 01 Aug 2018 09:12 AM
Last Updated : 01 Aug 2018 09:12 AM

காவிரியில் கடைமடை வரை தண்ணீர்: 6 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டவுள்ள ஆடிப்பெருக்கு விழா

மக்களை வாழ வைக்கும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா, இந்த ஆண்டு காவிரியின் கடைமடைப் பகுதி வரையில் தண்ணீர் சென்று சேர்ந்துள்ளதால் சிறப்பாகக் கொண்டாடப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதம். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் விழாக்கள் நடைபெற்றாலும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் வழிபடுவது வழக்கம். இது தவிர ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆடி மாதம் 18-ம் தேதி நதிக்கரைகளில் வாழும் மக்கள் தங்களை வாழ வைக்கும் நதிக்கு நன்றி செலுத்தும் வகையில் படித்துறை களில் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு உள்ளிட்டவைகளை வைத்து நீருக்கு ஆராதனை செய்து, பின்னர்மஞ்சள் கயிறை ஒருவருக்கொரு வர் அணிந்து கொள்வார்கள். இதனை தாலி பெருக்கும் நிகழ்வு என அழைப்பதுண்டு. டெல்டா மாவட்டங்களில் சிறுவர்கள் சிறு தேர் (சப்பரம்) இழுத்து மகிழ்வர்.

புதுமணத் தம்பதி

மேலும், புதுமணத் தம்பதியர் அன்றைய தினம் காவிரிக் கரையில் சிறப்பு வழிபாடுகள் செய்து புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொண்டு, திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபடுவர்.

மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் இருக்கும். இதனால்  ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெறும்.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. ஆனாலும், மேட்டூர் அணையிலிருந்து ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாட 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கும்பகோணம் நகரைக்கூட சென்றடையாது.

இதனால் கடந்த சில ஆண்டு களாக ஆடிப்பெருக்கு விழா தண்ணீரின்றிக் களையிழந்து காணப்பட்டது. ஆடிப்பெருக்கு அன்று திருவையாறு, கும்ப கோணம் உள்ளிட்ட இடங்களில் காவிரி ஆற்றில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து தண்ணீரை இறைத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பியதால் ஜூலை 19-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு திறக்கப் பட்டது. இந்த தண்ணீர் காவிரியின் கடைமடைப் பகுதியான மேலை யூருக்கு ஜூலை 29-ம் தேதி சென்றடைந்தது.

இதேபோன்று கிளை ஆறு களிலும் தண்ணீர் கடைமடை வரை சென்றுள்ளது.இதனால், கடந்த 6 ஆண்டு களாக களையிழந்திருந்த ஆடிப்பெருக்கு விழா இந்த ஆண்டு தண்ணீர் வந்ததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் களைகட்டும் என்பதில் ஐயமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x