Published : 25 Aug 2018 02:52 PM
Last Updated : 25 Aug 2018 02:52 PM
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பது சர்ச்சையாகி வருகிறது. அமித் ஷா வருவாரா? என்ற கேள்விக்கு இதுவரை தகவல் இல்லை என தமிழிசையும் தற்போது மறுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திமுக சார்பில் 'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற நினைவேந்தல் கூட்டம் வரும் ஆகஸ்டு 30-ம் தேதி மாலை- 4 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்துக்கொள்வார்கள் என அழைப்பிதழில் பெயர் இடம் பெற்றுது. க.அன்பழகன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்திற்கு ஸ்டாலின் முன்னிலை வகிக்க, துரைமுருகன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல தேசியத்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
கூட்டத்திற்கு ரஜினி, கமல், வைகோ, திருமாவளவன் அழைக்கப்படவில்லை என தெரிகிறது. இதே போன்று ஜெயலலிதா மறைவுக்கு பின் சமீபகாலமாக திமுக அதிமுக இடையே நிலவி வந்த பண்பாடு காரணமாக கருணாநிதியை பலமுறை அதிமுக தலைவர்கள் சென்று பார்த்தனர். ஆனால் நினைவேந்தல் கூட்டத்தில் அதிமுக தலைவர்களுக்கும் அழைப்பில்லை.
அழைத்தால் பரிசீலிப்போம் என்று துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். ஆனால் அழைக்கவே இல்லை. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. ஆனால், அமித் ஷா கலந்துகொள்கிறார். இந்த நிகழ்வை வைத்து திமுகவும் பாஜகவும் நெருங்கி வருவதாகவும், கூட்டணிக்கு அச்சாரம் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
‘‘அமித் ஷா திமுக நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை. அவர் வருகிறாரா? வரவில்லையா? என்பது பற்றி எனக்கு தெரியாது. அவர் வந்தாலும் வராவிட்டாலும் காங்கிரஸுக்கு எவ்வித அக்கறையும் இல்லை, கவலையும் இல்லை. அதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் கிடையாது. அதனால் திமுக கூட்டணியில் அவர்கள் சேர்கிறார்கள் என்றோ, காங்கிரஸ் விலகுகிறது என்றோ அர்த்தம் கிடையாது’’ என்று காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
“எனக்கு தெரிந்த வரையில் அவர் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்கிற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று நேற்று சுப்ரமணியம் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமே என்று பலரும் கூறிவரும் நிலையில் அமித ்ஷா பங்கேற்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசையும் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
“திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பது குறித்து எங்களுக்கு அதிகாரபூர்வ தகவல் வரவில்லை, பாஜக தலைமையிடமிருந்து தகவல் வந்தவுடன் தெரிவிக்கிறேன்.” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி எப்போதும் அரசியலில் பரபரப்பாக இருந்தார். அவரது மறைவுக்கு பின்னும் அவர் பரபரப்பாக பேசப்படுகிறார். அவரது நினைவேந்தல் நிகழ்ச்சிகூட தேசிய அளவில் கூட்டணி மாற்றம் என்ற சர்ச்சையை கிளப்பி செய்திகளில் பரபரப்பாக பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT