Published : 02 Aug 2018 07:39 AM
Last Updated : 02 Aug 2018 07:39 AM

துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ. 140 கோடி மதிப்புள்ள நீல வைரக்கல் மீட்பு

துபாயிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 140 கோடி மதிப்பிலான அரியவகை நீல வைரக்கல்லை துபாய் போலீஸார் தீவிரமாக புலனாய்வு செய்து பத்திரமாக மீட்டுள்ளனர்.

அரிய வகையைச் சார்ந்த 9.33 காரட் எடையுள்ள நீல வைரக் கல் ஒன்று, துபாயில் மூன்று கட்டப் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வந்தது. முதல் கட்டப் பாதுகாப்புக்கு சாவியையும், 2-வது கட்ட பாதுகாப்புக்கு ரகசியக் குறியீட்டையும், மூன்றாவது கட்டப் பாதுகாப்புக்கு தானியங்கி முறையில் மாறக்கூடிய பாஸ்வேர்டையும் பயன்படுத்தி, மூன்று பாதுகாவலர்கள் ஒரே நேரத்தில் இணைந்து திறந்தால் மட்டுமே திறக்கவல்ல  அதி நவீன தொழில்நுட்ப பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து நீல வைரக்கல் கடந்த 25.05.2018 அன்று திருடு போனது. அந்த  வைரக்கல்லின் மதிப்பு ரூ. 140 கோடி ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த துபாய் போலீஸார் , தனி குழுவை அமைத்து  120-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

8620 மணி நேர பதிவு

கிட்டத்தட்ட 8620 மணி நேர சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்ட பின்னர், இந்த  பாதுகாப்பு பெட்டக அலுவலகத்தில் பணிபுரிந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர்தான் வைரக்கல்லை திருடினார் என்பதைக் கண்டறிந்தனர்.

வைரக்கல்லை திருடிய இலங்கை நபர் , அதை  ஒரு காலணிப் பெட்டியில் வைத்து இலங்கையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பார்சலில் அனுப்பிவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார். நீண்ட நாட்களாக நடந்த திரைப்படங்களை விஞ்சும் நுட்பமான விசாரணைகளுக்கு பின்னர் துபாய் போலீஸார் வைரக்கல் இலங்கையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.  தற்போது வைரக்கல்லை மீட்டு துபாய்க்கு திரும்ப எடுத்துச் சென்றுள்ளனர்.

வைரக் கல்லைத் திருடிய இலங்கையர் எப்படி அதி நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து பல கோடிரூபாய் பெறுமான நீல வைரக்கல்லை திருடினார் என்பது குறித்த தகவல்களை துபாய் போலீஸார் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்து விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x