Last Updated : 09 Aug, 2018 10:06 AM

 

Published : 09 Aug 2018 10:06 AM
Last Updated : 09 Aug 2018 10:06 AM

கருணாநிதி மறைவையொட்டி அரசு பொது விடுமுறை அறிவிப்பிலும் அரசியல்?- வங்கி, எல்ஐசி, பிஎஸ்என்எஸ் தொழிற்சங்கங்கள் அதிருப்தி

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மறைவுக்கு மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின் அடிப்படையில் அரசு பொது விடுமுறை அளிக்காதது, மத்திய அரசு தொழிற்சங்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய தலைவர்கள் மறைவின்போது அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிப்பது வழக்கம். இந்த நாளில் மக்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு காவல், ரயில்வே, விமான நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளைத் தவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.

கருணாநிதி மறைந்த செய்தி நேற்று முன்தினம் மாலை பரவிய சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால், வாகனப் போக்குவரத்து படிப்படியாக குறைந்து சுமார் 11 மணியளவில் முற்றிலும் குறைந்து அனைத்துச் சாலைகளும் வெறிச்

சோடின. இதனிடையே, அரசு சார்பில் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது மாநில அரசு அலுவலகங்கள் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கும் வகையில் மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின் அடிப்படையில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவை விடவும் அதிக காலம் அரசியல், சமூக வாழ்க்கையில் கோலோச்சிய மு.கருணாநிதியின் மறைவுக்கு அந்த அடிப்படையில் விடுமுறை அறிவிக்கப்படாதது மத்திய அரசின் தொழிற்சங்கத்தினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

வழக்கம்போல பாஸ்போர்ட் அலுவலகம், வங்கிகள், பிஎஸ்என்எல், எல்ஐசி உள்ளிட்ட அலுவலகங்கள் நேற்று திறக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் வருகை இன்றி அவை வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதுதொடர்பாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சாவூர் கோட்ட துணைத் தலைவர் எல்.ஜோன்ஸ் கூறியபோது, "ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழக முதல்வர் என்ற முறையில், மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின் அடிப்படையில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், கருணாநிதி மறைவுக்கு அவ்வாறு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர். பெண் ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையில்தான் பணிக்கு வந்துள்ளனர்" என்றார்.

இதுதொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் ஜி.ராமராஜூ கூறியபோது, "முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின் அடிப்படையில் அரசு பொது விடுமுறை அளித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக நேற்று முன்தினமே வங்கி ஊழியர் சங்கத் தரப்பிலிருந்து அரசிடம் பல முறை வலியுறுத்தியும் பதில் வரவில்லை. இதற்கு, அரசியல்தான் காரணமாக இருக்க முடியும்" என்றார்.

அகில இந்திய பிஎஸ்என்எல் அலுவலர் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ்.காமராஜ் கூறும்போது, “சமூகநீதிக்காக பாடுபட்ட கருணாநிதியின் மறைவுக்கு மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின் அடிப்படையில் பொது விடுமுறை அறிவிக்காதது உண்மையிலேயே மக்கள் மத்தியிலும், மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கத்தினரிடையேயும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.எஸ்பிஐ வங்கியின் திருச்சி பிரதானக் கிளை வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x