Published : 21 Aug 2018 03:06 PM
Last Updated : 21 Aug 2018 03:06 PM
களிமண் சிலைகளை இலவசமாக செய்து திரட்டிய ரூ.35 ஆயிரம் நிதியை புதுச்சேரி சுடுமண் சிற்பக் கலைஞர் முனுசாமி முதல்வர் நாராயணசாமியிடம் அளித்துள்ளார். குழந்தைகள் தாங்கள் சேகரித்த நிதியை உண்டியலுடன் அளித்தது நெகிழ்ச்சியடையச் செய்ததாகக் குறிப்பிட்டார்.
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து பலரும் தங்களால் இயன்ற உதவிகளை தாங்களாகவே முன்வந்து செய்யத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் சுடுமண் சிற்பக் கலைஞர் முனுசாமி, கடற்கரை காந்தி சிலை அருகில் 30 விநாடிகளில் விநாயகர், யானை உள்ளிட்ட களிமண் சிலை பொம்மைகளை செய்து, இலவசமாக வழங்கும் நிகழ்வைத் தொடங்கினார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் மனம் உவந்து பலரும் நிவாரண நிதி தந்தனர். அந்த நிதியை 35 ஆயிரத்து 625 ரூபாய்க்கான காசோலையாக மாற்றி கேரள நிவாரணத்துக்காக முதல்வர் நாராயணசாமியிடம் அளித்தார்.
இதுதொடர்பாக முனுசாமி கூறியதாவது:
“சுனாமியின்போது சிலை செய்து தந்து 21 ஆயிரத்து 700 ரூபாய் நிதியும், உத்தரகாண்டில் மழை வெள்ளப் பாதிப்புக்கு டெல்லியில் சிலை செய்து 11 ஆயிரத்து 400 ரூபாய் நிதியும் திரட்டித் தந்தேன்.
தற்போது கேரள வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு உதவ சிலை செய்ய முடிவு எடுத்தேன். கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் 27 மணி நேரம் நின்றபடி 740 சிலைகள் செய்தேன். அதன் மூலம் 35 ஆயிரம் 625 ரூபாய் நிதி கிடைத்தது. அதைக் கேரளத்துக்கு உதவ நிவாரண நிதியாக முதல்வரிடம் தந்தேன். இதில் தென்னல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சஞ்சனா, சஞ்சய் ஆகியோர் தங்கள் உண்டியலுடன் அதிலிருந்த பணம் 634 ரூபாயைத் தந்தது நெகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT