Last Updated : 14 Aug, 2018 07:10 PM

 

Published : 14 Aug 2018 07:10 PM
Last Updated : 14 Aug 2018 07:10 PM

சிறிய தொகையானாலும் பெரிய மனசு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்

கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்துவந்தனர். அந்த வகையில் விருத்தாசலத்தை அடுத்த தாழநல்லூர் கிராமத்தில் வசித்த 11 இருளர் சமூகத்தினர் வசித்துவந்த குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, உடைமைகள் அனைத்தையும் இழந்தனர்.

இதையறிந்த எண்ணங்களின் சங்கமம் என்ற தன்னார்வ அமைப்பினரும் அவர்களுக்கு உதவிசெய்ய முன்வந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஆனந்தாஸ்ரம சுவாமிகள், 11 குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொள்ள, தலா ரூ.25 ஆயிரம் வழங்கி உதவினர். எண்ணங்களின் சங்கமம் அமைப்பினர், அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உடைமைகளை வழங்கினர். தற்போது தாழநல்லூரில் வசிக்கும் 11 குடும்பத்தினரும் நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலில் கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு, ஏராளமானோர் வீடுகளை இழந்து வாடும் செய்தி அறிந்து, அவர்களுக்கு உதவ தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 11 குடும்பத்தினரும் முன்வந்தனர். இதையடுத்து அவர்கள், எண்ணங்களின் சங்கமம் அமைப்பினரை அழைத்து ரூ.1500-ஐ கேரள மக்களுக்கு வழங்கியுள்ளனர். சிறிய தொகையானாலும், பாதிப்பு எப்படியிருக்கும் என்பதை உணர்ந்து, உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதை அறிந்த சங்கமம் அமைப்பினர் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இது தொடர்பாக எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிர்வாகி பிரபாகரிடம் கேட்டபோது, ''செய்நன்றி மறவாமல், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு நிலையான வருமானம் கிடையாது. வயல்களில் சுற்றித் திரியும் எலிகளைப் பிடித்து உண்பது, பாம்பு பிடிப்பது போன்ற தொழில்களைத்தான் செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையிலும் அவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன் வந்திருக்கின்றனர். அதேபோன்று வரகூர்பேட்டையில் ஏழ்மையில் படித்துவரும் மாணவ,மாணவியருக்கு உதவிவரும் மகாத்மா காந்தி மாலை நேர சிறப்பு வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர் ரூ.300 வழங்கியுள்ளனர்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x