Published : 21 Aug 2014 11:47 AM
Last Updated : 21 Aug 2014 11:47 AM

மெட்ரோ ரயில் பாலத்தில் ஏறி நின்று மாணவர்கள் தற்கொலை மிரட்டல் - மறியல்: ஜிஎஸ்டி, அண்ணா சாலையில் 4 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு

மெட்ரோ ரயில் பாலத்தில் ஏறி டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் தற்கொலை மிரட்டல் விடுத்தனர். மற்ற மாணவர்கள் மறியல் செய்ததால் ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், குன்னவலத்தில் செயல்பட்டு வந்த டி.டி. மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அந்த கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்தது. இதனால் அங்கு படித்துவந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது. டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் அல்லது இங்கு படித்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 120 மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை காலையில் சென்னை கோட்டை முன்பு மாணவ, மாணவிகள் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

புதன்கிழமை காலை 10 மணியளவில் கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் முன்பு திரண்ட மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக் கொண்டு பல்கலைக்கழகம் எதிரே அண்ணா சாலையில் அமர்ந்து மறியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். காலையில் பரபரப்பான நேரத்தில் மாணவர்கள் மறியல் செய்ததால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அண்ணா சாலையில் நந்தனம் சிக்னலை கடந்தும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேலும் இங்கு தொடங்கிய போக்குவரத்து நெருக்கடி ஜிஎஸ்டி சாலையையும் பாதிக்க ஆரம்பித்தது. ஜிஎஸ்டி சாலையில் மீனம்பாக்கம் மற்றும் வடபழனி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

சம்பவம் குறித்து அறிந்த சென்னை மாநகர காவல் துறை இணை ஆணையர்கள் அபாஸ்குமார், திருஞானம், அடையாறு துணை ஆணையர் கண்ணன் உட்பட ஏராளமான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோக வைக்க முயற்சி செய்தனர். ஆனால், மாணவர்கள் கைகளை கோர்த்துக்கொண்டு எங்களுக்கு முடிவு கிடைக்காத வரை எழுந்து செல்ல மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கதறி அழுது எங்களுக்கு ஒரு வழிகாட்டுங்கள் என்று போலீஸாரை பார்த்து கெஞ்சியதால், என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களும் திணறினர்.

இந்த சம்பவத்துக்கு இடையே 6 மாணவர்கள் மெட்ரோ ரயில் பாலத்தில் ஏறி, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர். போலீஸார் அவர்களை கீழே இறங்க சொல்லி பலமுறை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அதைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களை கீழே இறங்க வைத்தனர்.

பின்னர் அனைத்து மாணவ, மாணவிகளையும் போலீஸார் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சுமார் 4 மணி நேரத்துக்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x