Last Updated : 20 Aug, 2018 04:52 PM

 

Published : 20 Aug 2018 04:52 PM
Last Updated : 20 Aug 2018 04:52 PM

முதல்வர் நாராயணசாமியின் ஆதரவு வேட்பாளர் தோல்வி; புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் ஆதரவாளர் இளைஞர் காங்கிரஸ் தலைவரானார்

புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரில் தனித்தனி வேட்பாளர்களை முதல்வர், மாநிலத்தலைவர் ஆதரித்து யாருக்கு பலம் என்ற போட்டி நிலவிய சூழலில் அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவு வேட்பாளர் ரமேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வர் ஆதரவு வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூலை 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி நிறைவடைந்தது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட 13 பேருக்கு அனுமதி தரப்பட்டது. இறுதியாக ஜெய்தீபன், ஜெய்னா, காளிமுத்து, ரமேஷ், ரகுபதி, லட்சுமி காந்தன், கார்த்திக், அசோக்ராஜ் உட்பட 9 பேர் போட்டியிட்டனர். அதேபோல் 11 பொதுச்செயலர் பதவிகளுக்கான இடத்தில் 27 பேர் போட்டியிடுகின்றனர். இதில் அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ், காங்கிரஸ் தனவேலு மகன் அசோக் ஷிண்டே உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரில் அதிக வாக்குகள் பெறுபவர் தலைவராவார். அடுத்தடுத்து வாக்குகள் பெறுவோர் எண்ணிக்கை அடிப்படையில் 4 பேர் துணைத்தலைவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இத்தேர்தல் இம்மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் நடப்பதாக இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி மறைவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரில் முதல்வர் நாராயணசாமி வேட்பாளர் லட்சுமி காந்தனையும், மாநிலத்தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் மற்றொரு வேட்பாளரான ரமேஷையும் ஆதரித்தனர். இத்தேர்தலின் மூலம் யாருக்கு பலம் என்ற போட்டியும் நிலவியது.

இந்நிலையில் திங்கள்கிழமை இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. மிகவும் பதற்றமான சூழல் நிலவியது. இதில் அமைச்சர் நமச்சிவாயம் ஆதரவு தெரிவித்திருந்த ரமேஷ் 6 ஆயிரத்து 709 வாக்குகள் பெற்று இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். முதல்வர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்திருந்த லட்சுமி காந்தன் 4 ஆயிரத்து 67 வாக்குகள் பெற்று துணைத்தலைவராகியுள்ளார். அதேபோல் பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட்ட அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ் 2 ஆயிரத்து 819 வாக்குகள் பெற்று வென்றார். . அதேபோல் எம்எல்ஏ தனவேலுவின் மகன் அசோக் ஷிண்டேயும் 2 ஆயிரத்து 201 வாக்குகள் பெற்று பொதுச்செயலர் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x