Published : 03 Aug 2018 08:08 PM
Last Updated : 03 Aug 2018 08:08 PM

கருணாநிதி நலம்பெற வேண்டி கடல் கடந்து இலங்கையிலும் பிரார்த்தனை

இந்தியாவையும் தாண்டி கடல் கடந்து இலங்கையில் இருந்தும் திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டி பிரார்த்தனைகள் நடைபெறுவதாக அந்நாட்டு சமூக அபிவிருத்தித்துறை அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையவே கடந்த 27-ம் தேதி நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 29-ம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலை சீரானது.

திமுக தலைவர் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என்று பல்வேறு மாநில, தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர்கள், பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் என ஏராளமானோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

நலம்பெற சிறிசேனா வாழ்த்து

இந்தியாவையும் தாண்டி கடல் கடந்த வெளிநாட்டில் இருந்தும் கருணாநிதி நலம்பெற வேண்டும் என்று வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன. இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார். கடந்த ஜூலை 30 அன்று சென்னை வந்த இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்குச் சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இலங்கை அதிபரின் வாழ்த்துக் கடிதத்தை நேரில் வழங்கினர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள ஹட்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கூறுகையில், ''தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளைத் தொடர வேண்டும் என இலங்கையில் மலையகப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் பிரார்த்தனைகள் செய்தவண்ணம் உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x