Published : 23 Aug 2018 01:53 PM
Last Updated : 23 Aug 2018 01:53 PM
கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை கடந்த 100 ஆண்டுகளிலும், 150 ஆண்டுகளிலும் இல்லாத மழை என்று மக்கள் பேசி வரும் நிலையில், அது குறித்து புள்ளிவிவரங்களுடன் தமிழ்நாடு வெதர்மேன் விளக்கியுள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாகக் கொட்டித்தீர்த்த பெருமழையால், 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாகத்தான் வெள்ள நீர் வடிந்து வருகிறது.
கேரள மாநிலத்தில் பெய்த மழை 100 ஆண்டுகளில் இல்லாத மழை என்றும், 150 ஆண்டுகளில் இல்லாத மழை என்றும் பிரமிப்பாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப்ஜான் சில தரவுகளை அளித்து விரிவாகத் தொகுத்துள்ளார்.
அதன்விவரம் வருமாறு:
கேரள வரலாற்றில் 1924, 1961-ம் ஆண்டுகளை அந்த மக்களால் மறக்க முடியாது. அந்த மாநிலத்தையே புரட்டிப்போட்ட பெருவெள்ளம் ஆட்கொண்ட ஆண்டுகள் அவை. ஆனால், அந்த ஆண்டுகளைப் பேசிக்கொண்டிருந்த மக்கள் தற்போது 2018-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையை அதைக்காட்டிலும் பெரிய, மோசமான மழை என்று பிரமிக்கிறார்கள்.
உண்மையில் கடந்த 1924, 1961-ம் ஆண்டுகளில் பெய்த மழையைக் காட்டிலும் இந்த ஆண்டு பெய்த மழை பெரிதானதா?
இயல்பான மழைப்பொழிவு எவ்வளவு?
தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாதங்களில் கேரள மாநிலத்துக்கு 2,039.6 மி.மீட்டர் மழை சராசரியாகக் கிடைக்கும்.
கேரளாவில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான சராசரி மழை அளவைப் பார்த்தால், 1,795.4 மி.மீட்டர் தான். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்போதுவரை கேரளாவில் 2,392.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்னும் தென்மேற்குப் பருவமழை முடிய ஏறக்குறைய 40 நாட்கள் இருப்பதால், இன்னும் கேரள மாநிலத்தில் மழையை எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல், கடந்த 1923-ம் ஆண்டு மற்றும் 1882-ம் ஆண்டுகளில் பெய்த மழையைக் காட்டிலும் அதிகமாகப் பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 1924-ம் ஆண்டை முறியடிக்குமா 2018 மழை?
செப்டம்பர் மாதத்தைப் பொறுத்தவரை கேரள மாநிலத்தின் சராசரி மழை 250 மி.மீ.மட்டுமே. ஒருவேளை கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் 250 முதல் 300 மி.மீ. வரை மழை பெய்யும் பட்சத்தில் செப்டம்பர் இறுதியில் கேரளாவின் ஒட்டுமொத்த பருவமழையின் அளவு 2,800 மி.மீட்டருக்கு உள்ளாகவே இருக்கும்.
இதனால், 1961-ம் ஆண்டு பெய்த 2934 மி.மீ. மழை அல்லது 1924-ம் ஆண்டு பெய்த பேய் மழையான 3,115 மி.மீ. மழையைத் தொடுவதற்கு வாய்ப்பு இருக்காது.
1924-ம் ஆண்டு குடகு
கடந்த 1924-ம் ஆண்டு காவிரியில் வந்த மிகப்பெரிய பிரளய வெள்ளத்தை யாரேனும் மறக்க முடியுமா? வினாடிக்கு 4.6 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரியில் கரைபுரண்டு ஓடியது. குடகுவில் உள்ள பாகமண்டலாவில் ஒரே நாளில் 842 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
ஜூலை மாதத்தில் ஏறக்குறைய 3 மாதத்தில் 1800 மி.மீ. மழை கொட்டியது. அடுத்த சில நாட்களுக்குப் பின் மீண்டும் பாகமண்டலாவில் ஒரே நாளில் 500 மி.மீ. மழை பெய்து, அடுத்த 3 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மழை கொட்டித் தீர்த்து 3 நாட்களில் 1,300 மி.மீ. மழை பதிவானது.
இந்த ஆண்டு (2018) பாகமண்டலாவில் 5 நாட்களில் 1,000 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. மடிகேரியில் ஒரேநாளில் 365 மி.மீ. மழையும், 3 நாட்களில் 800 மி.மீ. மழையும் கொட்டியது. இந்த ஆண்டு மடிகேரியில் ஒரேநாளில் 300 மி.மீ. மழை பெய்தது. இது இன்றைய தேதி வரை காவிரியில் மிக அதிகபட்ச மழையாகும்.
1924- கேரளா
கடந்த 1924-ம் ஆண்டு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெருமழை கொட்டியது. மூணாறில் மட்டும் 3 நாட்களில் 900 மி.மீ. மழை பெய்தது, பீர்மேட்டில் 3 நாட்களில் 900 மி.மீ. மழையும், ஒரே நாளில் 315 மி.மீ. மழையும் கொட்டியது. இந்த ஆண்டு பீர்மேட்டில் ஒரேநாளில் 350 மி.மீ. மழை பதிவானது.
கொல்லம், ஆரியங்காவு ஆகிய இடங்களில் 3 நாட்களில் 700 மி.மீ. மழையும், மலப்புரம், நிலம்பூரில் 700 மி.மீ. மழையும் பதிவானது. 1924-ம் ஆண்டில் கோழிக்கோட்டில் உள்ள குட்டியாடி பகுதியில் ஒரேநாளில் 420 மி.மீ. மழை பெய்தது. இந்த ஆண்டு (2018) குட்டியாடியில் ஒரேநாளில் 410 மி.மீ. மழை பதிவானது. பாலக்காடு மாவட்டம் மற்றும் மற்ற மாவட்டங்களில்கூட கடந்த 1924-ம் ஆண்டில் நல்ல மழை பதிவானது.
1961- கர்நாடகா
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கொட்டிகேரா, ஹேமாவதியில் ஒரே நாளில் 600 மி.மீ. மழை பதிவானது. 3 நாட்களில் 1,350 மி.மீ. மழை பதிவானது. கடந்த 1961-ம் ஆண்டு கொட்டிகேராவில் 10 ஆயிரம் மி.மீட்டரைக் கடந்து மழை பெய்தது. ஹசனில் உள்ள ஒரு ஸ்டேஷனில் 3 நாட்களில் 900 மி.மீ. மழை பெய்தது. கடந்த 1961-ம் ஆண்டு காவிரியில் 3 லட்சம் கனஅடி தண்ணீர் பாய்ந்தோடியது.
1961-ம் ஆண்டு கேரளா
கடந்த 1961-ம் ஆண்டில் பெய்த மழையை வயநாடு எப்போதும் மறக்காது. வயநாட்டில் உள்ள வியத்ரியில் ஒரேநாளில் 530 மி.மீ. மழை பெய்தது, 3 நாட்களில் 1200 மி.மீ. மழை பெய்தது. கோழிக்கோட்டில் உள்ள கோயிலாண்டியில் ஒரேநாளில் 400 மி.மீ. மழையும், 3 நாட்களில் ஆயிரம் மி.மீ. மழையம் கொட்டித் தீர்த்தது. கடந்த 1961-ம்ஆண்டில் கோயிலாண்டியில் 10 ஆயிரம் மி.மீ. மழை பதிவானது.
2018- கர்நாடகா
தலைக்காவிரியில் கடந்த 5 நாட்களில் 1200 மி.மீ. மழை கிடைத்துள்ளது. ஒரேநாளில், 315 மி.மீ. மழையும் பதிவானது. மடிகேரியில் ஒரேநாளில் 300 மி.மீ. மழை பெய்தது. கலிபீடு பகுதியில் ஒரேநாளில் 330 மி.மீ. மழையும், பாகமண்டலாவில் 4 நாட்களில் 900 மி.மீ. மழையும் பெய்தது.
2018- கேரளா
கேரளாவில் இந்த ஆண்டு குட்டியாடி, மூணாறு, பீர்மேடு, காக்கி ஆகியவற்றில் வழக்கத்துக்கு மாறாக அதிகமான மழை பெய்துள்ளது. பம்பலா அணை (கீழ்பெரியாறு)4 நாட்களில் 900 மி.மீ. மழை பதிவானது, அதிகபட்சமாக ஓரே நாளில் 305 மி.மீ. மழை பதிவானது. காக்கி அணையில் 4 நாட்களில் 900 மி.மீ. மழையும், அதிகபட்சமாக 296 மி.மீ. மழையும் பெய்தது. குட்டியாடியில் 4 நாட்களில் ஆயிரம் மி.மீ. மழையும், அதிகபட்சமாக 410 மி.மீ. மழையும் பெய்தது.
60 ஆண்டுகளில் இல்லாதது
கடந்த 1924 அல்லது 1961 அல்லது 2018 ஆகிய ஆண்டுகளில் கேரள மாநிலத்தில் பரவலாக பெருமழை பெய்துள்ளது. நகரமயமாதல் மனிதனின் செயல்பாடுகள், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் போன்றவை கடந்த 1924 அல்லது 1961-ம் ஆண்டுகளில் அதிக அளவு இல்லை. ஆனால், இப்போது மனித நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன.
2018-ம் ஆண்டில் கேரளாவில் இன்னும் 500 மி.மீ. மழைப்பொழிவு இருந்தால் கடந்த 1961-ம் ஆண்டு மற்றும் 1878-ம் ஆண்டில் பெய்த மழை அளவைப் பெற்றுவிடும். கடந்த 1924-ம் ஆண்டு மழை அளவை முறியடிக்க இன்னும் 700 மி.மீ. மழை தேவை.
இதில் நினைவில் வைக்கவேண்டியது என்னவென்றால், செப்டம்பர் மாதத்தில் கேரளாவில் சராசரி மழை 250 மி.மீ. தான். ஆதலால், செப்டம்பரில் இரு மடங்கு மழை அதாவது 500 மி.மீ. மழை பெய்வது என்பது சாத்தியமில்லை.
கடந்த 1924-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரை கேரளாவில் 2,850 மி.மீ. மழையும், கடந்த 1961-ம் ஆண்டில் 2,550 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது. ஆனால், 2018-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 2,400 மி.மீ. வரை மட்டுமே இருக்கும்.
ஆதலால், கடந்த 1924, 1961-ம் ஆண்டுகளில் பெய்த மழையோடு இந்த ஆண்டு பெய்யும் மழை குறைவாகவே இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு கேரளாவில் பெய்த மழை வரலாற்றில் இடம் பிடிக்கும். கேரள வரலாற்றில் இதுவரை பெய்த தென்மேற்குப் பருவமழையில் 4-வது அதிகபட்ச மழையை 2018-ம் ஆண்டு பிடிக்க வாய்ப்புள்ளது. முதல் மூன்று இடங்களில் 1924 1961, 1878 ஆண்டுகள் உள்ளன.
கடந்த 1924 அல்லது 1961-ம் ஆண்டில் பெய்த மழையைப் போல் கேரளாவில் இந்த ஆண்டு இனிமேல் பெய்ய வேண்டும் என்றால், இன்னும் சேதம் மிக, மிகக் கடுமையாக இருக்கும். இந்தச் சேதத்துக்கே மாநிலமும், மக்களும் தாங்கவில்லை. அப்படி இருக்க 1924, 1961-ம் ஆண்டு மழையை முறியடிக்க வேண்டுமா?
ஆனால், கேரளாவின் இந்த ஆண்டுப் பெருமழை, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மழை என்று பிரமிப்பு அடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT