Published : 14 Aug 2018 03:40 PM
Last Updated : 14 Aug 2018 03:40 PM
ஏற்கெனவே கருணாநிதிக்கு சிலை வைத்த திராவிடர் கழகம் மீண்டும் அவருக்கு அதே இடத்தில் சிலை வைக்கும் என்று அக்கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சிலை அமைக்கப்பட்டது, பின் உடைக்கப்பட்டது குறித்த ஒரு பார்வை.
கருணாநிதி நினைவிடம் நோக்கி திராவிடர் கழகம் சார்பில் அமைதிப் பேரணி கி.வீரமணி தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் மீண்டும் சிலை வைப்பது குறித்து பேசிய கி.வீரமணி, '' திராவிடர் கழகம்தான் கருணாநிதிக்கு அண்ணா சாலையில் சிலை வைத்தது. வைக்கவும் போகிறது. பெரியாருடைய உத்தரவுப்படி, மணியம்மையார், பெரியார் மறைந்த பிறகு, அரசாங்கத்தின் அனுமதி பெற்று, இன்னும் கேட்டால், அரசாங்கத்திற்கு அதைப் பராமரிப்பதற்குரிய பணத்தையும் கட்டி, நாங்கள் அங்கே கருணாநிதி சிலையைத் திறந்தோம்.
சில விஷமிகள் அந்தச்சிலையை உடைத்த நேரத்தில்கூட பொறுத்திருந்தோம். காலம் வரும் என்று காத்திருந்தோம். காலம் கனிந்திருக்கிறது. கருணாநிதி, கம்பீரமான சிலையாய், அண்ணா சாலையில், இங்கே எப்படி அண்ணாவிற்குப் பக்கத்தில் இருக்கிறாரோ, அதேபோல, சிலையாய் எழும்பி நிற்பார்'' என்று வீரமணி தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டதும், அவரது சிலை இடித்து தள்ளப்பட்டதும் குறித்து ஒரு தொகுப்பு:
கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். இதற்கு முன் உயிருடன் இருப்பவர்களுக்கு சிலை காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே திறக்கப்பட்டிருந்தது.
அண்ணா மறைவுக்குப் பின்னர் 1971-ம் ஆண்டு பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே அந்தக் கோரிக்கையை வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் அவருக்குச் சிலை வைக்கவேண்டும் என்று பெரியார் தெரிவித்தார்.
அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்.
அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.
அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) க.அன்பழகன், மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார்.
தி.க. சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது என்று பேசினார். சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார் சிலையைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஜிஆர் மறைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் கருணாநிதியின் சிலையை சில விஷமிகள் கடப்பாரையால் இடித்துத் தள்ளினர்.
சிலையை உடைத்ததைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட கருணாநிதி அந்தப்படத்தை முரசொலியில் வெளியிட்டு "உடன் பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை- நெஞ்சிலே தான் குத்துகிறான், அதனால் நிம்மதி எனக்கு. வாழ்க! வாழ்க!''என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின்னர் அதே இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் சிலை அமைக்க முயற்சி எடுத்தபோது கருணாநிதி அதைத் தடுத்துவிட்டார். இதையடுத்து தி.க.வினர் அந்த முயற்சியைக் கைவிட்டனர்.
இந்நிலையில் கருணாநிதி மறைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என்று தி.க.தலைவர் வீரமணி அறிவித்திருந்தார். இன்று மீண்டும் கேள்வி எழுந்தபோது அதே இடத்தில் சிலை கம்பீரமாக எழுந்து நிற்கும் என்று அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே சிலை தயாராக இருப்பதாக தி.க.சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் கருணாநிதி சிலை அமைக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT