Published : 23 Aug 2018 12:47 PM
Last Updated : 23 Aug 2018 12:47 PM

மசினகுடி விடுதிகள் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம்: நாளை விடுதிகளுக்கு சீல் - மாவட்ட நிர்வாகம் உத்தரவு

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் உள்ள விடுதிகள் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய இன்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள சோலூர், பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், மசினகுடி ஆகிய பகுதிகள் யானைகளின் வழித்தடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் விதிமீறி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த விடுதிகளால், யானைகள் இடம்பெயர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அவை வேறு பகுதிகளுக்கு செல்லும்போது மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. இதனால், யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் மசினகுடி பகுதி யானைகள் வழித்தடத்தில் உள்ள 39 கட்டிடங்களை முதல்கட்டமாக மூடி சீல் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மசினகுடியில் 12 கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்களிடம் ஆவணம் உள்ளதாக தெரிவித்தனர். இதனால், கடந்த வாரம் 27கட்டிடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. மீதமுள்ள 12 கட்டிட உரிமையாளர்கள் வைத்துள்ள ஆவணங்களை அளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், அவர்கள் அளித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் 12 கட்டிடங்களுக்கு முறையான அனுமதி உள்ளதற்கான ஆவணங்கள் குறைந்தளவே உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில ஆவணங்கள் கூடுதலாக அளிப்பதாக விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இன்று (வியாழக்கிழமை) மாலைக்குள், அவர்கள் அனைத்து ஆவணங்களையும் அளிக்க மாவட்ட நிர்வாகம் அவகாசம் அளித்துள்ளது. தவறும்பட்சத்தில் வெள்ளிக்கிழமை முதல் இந்த கட்டிடங்களுக்கும் சீல் வைக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x