Published : 20 Aug 2018 01:06 PM
Last Updated : 20 Aug 2018 01:06 PM
வைகை அணை நிரம்புவதால் 18 ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு வெள்ளோட்டம் பார்க்க வேண்டும் என மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கடந்த காலத்தில் வறட்சியால் விவசாயமே பொய்த்து விட்டதால் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டனர். இந்த காலகட்டத்தில்தான் வேலைவாய்ப்புக்காக இங்குள்ள இளைஞர்கள் பலர் வடமாநிலங்களுக்கு மிட்டாய் கம்பெனிகளுக்கு கொத்தடிமைகளாகச் சென்றனர்.
இதற்குத் தீர்வாக 1996-ம் ஆண்டு தேனி மாவட்டம் வைகை அணையில் தென்மேற்குப் பகுதியில் இருந்து உபரிநீராக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து ஆண்டிப்பட்டி, வத்தலகுண்டு, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராமங்களுக்கு கொண்டு செல்வதற்கு 58 கிராம பாசனக் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் 110 கிராமங்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் ஆரம்பிக்கும்போது வைத்த 58 கிராம பாசனக் கால்வாய் பெயரே தற்போது வரை தொடருகிறது.
இந்தத் திட்டத்திற்காக ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1999-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. பிரதான கால்வாய் 27.735 கி.மீ. நீளத்திலும், இடது கிளைக்கால்வாய் 11.925 கி.மீ. நீளத்திலும், வலது கிளைக்கால்வாய் 10.24 கி.மீ. நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. 6 மீட்டர் முதல் 18 மீட்டர் உயரம் வரை 230 பிரம்மாண்ட தூண்களுடன் தொட்டி பாலம் அமைத்து இந்த 58 கிராம பாசனக் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இடையில் நிதி பற்றாக்குறையால் இந்தத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு மீண்டும் ரூ.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனாலும், பணிகள் விரைவாக நடக்காததால் 18 ஆண்டாக இந்தத் திட்டம் நிறைவு பெறாமல் இழுத்தடிக்கப்பட்டது.
தற்போது இந்தத் திட்டம் முழுமை பெற்றுள்ளது. ஆனால், வைகை அணையில் இருந்து இந்தக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு வெள்ளோட்டம் பார்க்கவில்லை. செயல்பாட்டுக்கும் வராததால் தற்போது இந்தக் கால்வாய் காட்சிப்பொருளாக நிற்கின்றன. இந்தக் கால்வாய் வளைந்து நெளிந்து பார்ப்பதற்கு அழகாகவும், பிரம்மாண்டமாகவும் இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கால்வாயை வியந்து பார்த்துச் செல்கின்றனர்.
தற்போது வைகை அணை 69 அடியைக் கடந்துள்ளதால் உபரி நீர் 58 கிராம கால்வாயில் திறந்து விடுவதற்கு அரிய வாய்ப்பு வந்துள்ளது. அதனால், 58 கிராம பாசனக் கால்வாய் விவசாயிகள், கிராம மக்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகராவைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். அவரும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
30 கண்மாய்கள் நிரம்பும் வாய்ப்பு
58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் பி.தமிழ்ச்செல்வன் கூறுகையில், “வெள்ளக் காலங்களில் வைகை அணை நிரம்பினால் அதன் உபரி நீர் ராமநாதபுரம் சென்று கடலில் வீணாகிறது. அந்த தண்ணீரைதான் இந்தக் கால்வாயில் திறந்துவிடச் சொல்கிறோம். இந்தக் கால்வாயில் தண்ணீர் வந்தால் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பாறப்பட்டி, புள்ளிமான் கோமை சுற்றுவட்டார கிராமங்கள் வழியாக திண்டுக்கல் மாவட்டம் ரங்கப்பநாயக்கன்பட்டி, சந்தையூர், விறுவீடு, செக்காப்பட்டி, நடகோட்டை, விராலிமாயன்பட்டி சுற்றுவட்டார கிராமங்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள உத்தப்பநாயக்கனூர், வெள்ளமலைப்பட்டி, பாப்பாபட்டி, சீமான்னூத்து, தொட்டப்பநாயக்கனூர் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 110 கிராமங்கள் பயன்பெறும். வைகை அணை 69 அடிக்கு வரும்போது, இந்தக் கால்வாயில் 350 கனஅடி தண்ணீர் திறக்கலாம்.
இந்தத் திட்டத்தில் தண்ணீர் வந்தால் 30 கண்மாய்கள், 3 குளங்கள் நிரம்பும். 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT