Published : 19 Aug 2018 11:32 AM
Last Updated : 19 Aug 2018 11:32 AM

பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு வீணாக செல்லும் நீர்: சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் வறண்டு கிடக்கும் வைகை

பெரியாறு அணைக்கு   22,588 கன அடி தண்ணீர் வந்தும், அதை தேக்கி வைக்க முடியாமல் கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்கு 23,064 கன அடி தண்ணீர் வீணாக திறந்து விடப்படுகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் வைகை ஆற்றில் சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது.  அதனால், 26 ஆண்டுகளுக்கு பிறகு  இடுக்கி அணை நிரம்பி விட்டது.  பெரியாறு அணைக்கு இந்த சீசனில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு  22,588 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், பெரியாறு அணை கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியே 142 அடியைஎட்டியது.  ஆனால் கேரள அரசின் எதிர்ப்பால் அணை நீர்மட்டத்தை 141 அடியில் தக்க வைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரி

யாறு அணைக்கு வரும் 22,588 கன அடி தண்ணீரை அப்படியே வைகை அணைக்கு திறந்துவிட முடியாது. அதனால், வைகை அணைக்கு  பெரியாறு அணையில் இருந்து 2,336 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்படுகிறது.

அதே நேரத்தில் பெரியாறு அணையில் கூடுதலாக தண்ணீர் தேக்கி வைக்க வாய்ப்பு இருந்தும், கேரளாவின் பிடிவாதத்தால் பெரியாறு அணையின் 13 ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 23,064 கனஅடி தண்ணீர் இடுக்கி அணைக்கு திறந்து விடப்படுகிறது. ஏற்கெனவே,  இடுக்கி அணை  நிரம்பி,அந்த தண்ணீர் திறந்து விடப்பட்டு கேரளாவை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு வீணாக திறந்து விடப்படும்  இந்த தண்ணீர் இடுக்கி அணைக்குச் சென்று அந்த மாநில மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் பயனில்லாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது.

கேரளாவில் பெரும் மழை வெள்ளத்தால் 22 அணைகள் நிரம்பி அவை திறந்து விடப்பட்டுள்ளன. தமிழகத்தில் காவிரி, தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அந்த ஆறுகளில் வரும் தண்ணீர் கடலில் கலந்து வருகிறது.  ஆனால், வைகை ஆற்றில் தற்போது   சொட்டு தண்ணீர்கூட வராமல் தென் மாவட்டங்கள் வறட்சிக்கு இலக்காகி உள்ளன.

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்று குடிநீருக்கே சிக்கலாகி  மக்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கும், குடிநீருக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கி வருகின்றனர்.

போர்க் கொடி

கேரளாவில் மழை வெள்ளம் அம்மாநில அரசுக்கு பெரும் படிப்பினையை ஏற்படுத்தியும் இன்னமும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 142 அடி வரைகூட தண்ணீரை தேக்கக் கூடாது என போர்க் கொடி உயர்த்தி வருவதால் தமிழக விவசாயிகளிடம் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘கண் முன்னே வீணாகும் என்று தெரிந்தே பெரியாறு அணையில் இருந்து இடுக்கி

அணைக்கு தண்ணீரை  வெளியேற் றிக் கொண்டிருக்கிறோம். பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீரை தேக்கக் கூடாது என்று அம்மாநில மக்கள் சொல்லவில்லை. ஆனால்,  கேரள அரசுக்கு மனமில்லை’’ என்றார்.

முல்லைபெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.முருகன், செயலாளர் பி.ரவி, பொருளாளர் டி.ஜெயபால் ஆகியோர் கூறும்போது, ‘‘முல் லைபெரியாறு அணையும், வைகை அணையும் நிரம்பி வருவதால் உபரிநீர் வீணாக கேரளாவுக்கு செல்வதைத் தடுக்க பெரியாறு பூர்வீக ஒருபோக பாசன நிலங்களுக்கு பாசன நீரை திறந்துவிட வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக பாசன நீர் கிடைக்காத பெரியாறு ஒரு போக பாசனப்பகுதிகள், கண்மாய்கள், கிணறுகள், வறண்டுஉள்ளன. பெரியாறு பாசன நீர் விநி யோகத்தில் பொதுப்பணித் துறை அளவீட்டின்படி அளவீடு கருவிகளின் தவறுதலால் 150-200 கியூசெக்ஸ் நீர் குறைவாக கிடைப்பதால் கடந்த காலங்களில் கடைமடை பகுதிகள் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டன. அதனால் அளவீட்டு கருவிகள்மற்றும் அளவீடுகள் சரிசெய்யப் பட்டு பாசன நீர் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும்’’ என்றார். கேரளாவில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வறண்டு கிடக்கும் மதுரை வைகை ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x