Published : 10 Aug 2018 08:27 AM
Last Updated : 10 Aug 2018 08:27 AM

இன்று உலக சிங்க தினம்; அழிவின் விளிம்பில் ‘காட்டு ராஜா’- 2 லட்சமாக இருந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைந்தது

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்க தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

திறந்த புல்வெளி காடுகளின் அழிவாலும், கடுமையான வேட்டை யாலும் சிங்கங்கள் அழிவைச் சந்திக்கின்றன. சிங்கங்களைப் பாது காக்கவும், அது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வு அடையவும் கென்யா வன உயிரின ஆர்வலர்களின் முயற்சியால் இந்த நாள் முதலில் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழு வதும் சிங்கங்களின் நலன் பேணும் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 2 லட்சத்துக்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இன்று வெறும் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் 500-க்கும் குறைவாகவே உள்ளன.

மன்னர்கள் காலத்தில் இருந்து சிம்மம் என்னும் சொல் தலைவன், அரசன் என்பதை குறிக்கும் சொல்லாகவே கருதப்படுகிறது. உதாரணமாக சிம்மாசனம், சிம்ம சொப்பனம் என்று பல சொற்களை குறிப்பிடலாம். ஆற்றலின் அடை யாளமாகவே சிங்கம் அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த வழக்கம் நமது நாட்டில் மட்டும் அல்ல, ஆப்பிரிக்க பழங்குடிகள் தொடங்கி ஐரோப்பா வரை இருந்துவருகிறது.

பூனை இனங்களில் புலிகளுக்கு முன்னர் மிகக் கடுமையான அழிவை சந்தித்தவை சிங்கங்களே. கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இவற்றின் அழிவு தொடங்கிவிட்டது. அரசர்கள் வேட்டையாடியபோதும், போர்களின்போதும் நாடுவிட்டு நாடு பயணம் செல்லும் வேளைகளிலும், வீர விளையாட்டு என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்ட சிங்கங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.

இதுகுறித்து மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது:

ஆப்பிரிக்க சிங்கங்கள் இனத்தில் 7 உள்ளினங்களும், ஆசிய இனத்தில் ஒரே ஒரு இனம் மட்டுமே மீதம் உள்ளன. ஆப்பிரிக்க இனங்களின் உள்ளினங்களில் ஒன்று பார்பெரி சிங்கம், இவை ஐரோப்பா, வடமேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்பட்டன. இவை தற்போது காடுகளில் முழுமையாக வேட்டையாடப்பட்டு விலங்கு காட்சியகங்களில் மட்டுமே சொற்ப எண்ணிக்கையில் எஞ்சியுள்ளன. இரண்டாவது, செனகல் சிங்கங்கள் எனும் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங் கள். இவையும் அழிவின் விளிம்பில் உள்ளன. மூன்றாவது காங்கோ சிங்கம் அல்லது உகாண்டா சிங்கம் என்ற இனம். இவை காங்கோவில் உள்ள தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நான்காவது, கட்டாங்கா சிங்கங்கள் அல்லது தென் மேற்கு ஆப்பிரிக்க சிங்கங்கள்.

ஐந்தாவது மசாய் சிங்கங்கள் அல்லது கிழக்கு ஆப்பிரிக்க சிங் கங்கள். இவை மிக அழகான வையாக கருதப்படுகின்றன. அதன் நீண்ட கால்களும், சீரான பிடரி முடிகளும், அழுத்தமான முக அமைப்பும் தனி அடையாளமாக திகழ்கின்றன. ஆறாவது, கலகாரி சிங்கங்கள் அல்லது தென்கிழக்கு ஆப்பிரிக்க சிங்கங்கள். இவை மசாய் சிங்கங்களைப் போன்றே மிகப் பெரியவை. ஏழாவது, எத்தியோப்பிய சிங்கங்கள். இவை வெகு சமீப காலத்தில்தான் மரபணு சோதனையின் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க வகை சிங்கங்களில் இருந்து தனி இனமாக அறிவிக்கப்பட்டன. இதன் சிறப்பு அடர்ந்த பிடரி முடியில் இருக்கும் கருப்பு வண்ணமே.

இந்த 7 வகை சிங்கங்களைத் தவிர, துருக்கியில் இருந்து தென்மேற்கு ஆசியா முழுவதும் பரவி இருந்த ஆசிய சிங்கங்கள் இன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே உள்ளன. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் அருகிவிட்டன. திடீரென பரவும் தொற்றுநோய்கள், ஒரே குடும்பங்களுக்குள் நேரும் இனச்சேர்க்கையினால் பலவீனம் அடைதல், இடநெருக்கடிகளால் காடுகளை விட்டு வெளியேறும் சிங்கங்களால் ஏற்படும் மனித - விலங்கு மோதல்கள் போன்ற பிரச்சினைகளை ஆசிய சிங்கங்கள் எதிர்கொள்கின்றன. அரசர் காலத் தில் சிங்கங்கள் பெரிய அழிவை சந்தித்திருந்தாலும், அதையே சொல்லிக்கொண்டு இருக்காமல் தற்போதுள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வன உயிர்களை காப் பதன் மூலம் இயற்கையின் சம நிலையை நிலை நிறுத்தினால் நமக்குத் தேவையான நீர், காற்று, ஆரோக்கியம் போன்ற செல்வங் களையும் பெறலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x