Last Updated : 01 Apr, 2014 12:00 AM

 

Published : 01 Apr 2014 12:00 AM
Last Updated : 01 Apr 2014 12:00 AM

மதுவால் வாழ்க்கையை இழக்கும் போலீஸ்காரர்கள்: டிஅடிக்ஸன் பிரிவு மீண்டும் செயல்படுத்தப்படுமா?

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம்(53). போதை பழக்கத்துக்கு அடிமையாகி பணியில் இருக்கும்போதே பல தவறான செயல்களை செய்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவரது குடும்பத்தினர் அவரைப் பிரிந்து சென்றுவிட்டனர். போதை பழக்கத்தால் பணியையும், குடும்பத்தையும் இழந்த மீனாட்சி சுந்தரம், தொடர்ந்து குடித்து சனிக்கிழமை இரவு எழும்பூர் காவல் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் இறந்து கிடந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்வதற்கு யாருமே முன்வராத நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டது. பின்னர் மீனாட்சி சுந்தரத்தின் உடலை அவரது மூத்த மகன் ராஜசேகர் திங்கள்கிழமை பெற்று இறுதிச் சடங்கை செய்து முடித்தார்.

மீனாட்சி சுந்தரத்தை போல போதைக்கு அடிமையாகி வாழ்க் கையை இழக்கும் போலீஸாரின் எண்ணிக்கை காவல் துறையில் அதிகம். தமிழக போலீஸாரில் 60 சதவீதம் பேர் மது குடிப்பதாகவும், இதில் 5 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமும் 10 சதவீதம் போலீஸார் மது குடித்துவிட்டு பணிக்கு வருவதாகவும் தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கொண்டு வயர்லெஸில் பாட்டுப் பாடிய காவலர், பிரியாணி பார்சல் கேட்டு கடையில் தகராறு செய்த ஏட்டு, போதையில் காவல் நிலையம் வந்த ஆய்வாளர் என போதை போலீஸ் செய்யும் அராஜகங்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவருகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் போதையில் ரகளை செய்த 21 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போதை போலீஸாருக்கு கவுன்சலிங் கொடுக்கவும், அவர் களை திருத்தி மீண்டும் நல்ல நிலைமைக்கு மாற்றவும் ‘டிஅடிக்ஸன்’ என்ற மறுவாழ்வுப் பிரிவு தமிழக காவல் துறையில் இருந்தது.

முன்னாள் சென்னை காவல் ஆணையாளர்கள் விஜயகுமார், நட்ராஜ், ஏடிஜிபி திலகவதி, கடலோர காவல் படை ஐஜி சைலேந்திரபாபு ஆகியோர் பொறுப்பில் இருந்த போது இந்த மறுவாழ்வுப் பிரிவு சிறப்பாக செயல்பட்டது.

போதையில் பிடிபடும் போலீஸார் அனைவருக்கும் இங்கு கவுன்சலிங் மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. ஆனால் இப்போது இந்த பிரிவே தமிழக காவல் துறையில் இல்லை. லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஏடிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற திலகவதி, தலைமையிடத்து ஐஜியாக இருந்தபோது ‘டி அடிக்ஸன்’ பிரிவு மிகச் சிறப்பாக செயல்பட்டது.

திலகவதி கருத்து

"மது குடிக்கும் பழக்கம் போலீஸ் அதிகாரிகள் முதல் சாதாரண காவலர்கள் வரை இருக்கிறது. ஆனால் சரியான விழிப்புணர்வு இல்லாமல் காவலர்கள் செய்யும் தவறுகள் அவர்களை பெரிதாக பாதிக்கிறது.

காவலர்களின் முறையற்ற பணி நேரம், குடும்பத் தலைவனாக இருந்து கொண்டு குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் படும் அவஸ்தைகள், பணிச் சுமையால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை மது அருந்துவதால் ஏற்படும் தைரியம், ஓய்வு போன்றவை சரி செய்துவிடுகிறது என்று அதிகம் பேர் நம்புகின்றனர். இதுவே இவர்கள் குடிக்கு அடிமையாக முதல் காரணம். மது குடித்து பழகுபவர்கள் பின்னர் அதை விடுவதற்கு முயற்சிகூட எடுக்க மாட்டார்கள்.

மது பழக்கத்தால் போலீஸாரின் குடும்பமும் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு ‘டிஅடிக்ஸன்’ பிரிவை திறம்பட செயல்படுத்தி, மதுவிற்கு அடிமையாக இருக்கும் போலீஸாருக்கு கவுன்சலிங், மருத்துவம் கொடுப்பதே சிறந்த வழி" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x