Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில், அதிமுக, திமுக தவிர்த்து இதர கட்சி கள் தங்கள் கூட்டணி வைக்கும் கட்சிகளிடம் முதல்கட்டமாக எதிர்பார்க்கும் தொகுதிகளின் நிலவரம் இது. இதில் சில கட்சிகள் தங்களது தகுதியையும் மீறி தொகுதிகள் எண்ணிக்கையை எழுதி வைத்துக்கொண்டு பேரம் செய்ய காத்திருக்கின்றன.
தேமுதிக, திமுகவுடன் கூட்டணி சேரும் பட்சத்தில் பெரும் புதூர், காஞ்சிபுரம், தருமபுரி, திருப்பூர், கோவை, மதுரை, தேனி அல்லது திண்டுக்கல், விருதுநகர், திருநெல் வேலி, விழுப்புரம் ஆகிய 10 தொகுதிகளை கேட்கிறது. திமுக கூட்டணியில் உறுதியாகிவிட்ட புதியதமிழகம் கட்சி தென்காசி தொகுதியை மட்டும் கேட்கிறது. கடந்த முறை திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இம்முறை சிதம்பரம் அல்லது விழுப்புரத்தை கேட்கிறது.
இதேபோல் திமுக கூட்டணியில் தங்களது இருப்பை இறுதி செய்துவிட்ட மனிதநேய மக்கள் கட்சியும் மயிலாடுதுறை அல்லது ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்காக கேட்கிறது. ராமநாதபுரம் என்றால் அக்கட்சியின் எம்.எல்.ஏ.வான ஜவாஹிருல்லாவே வேட்பாளராகவும் இருக்கலாம் என்கிறார்கள். முஸ்லிம் லீக் கட்சி திமுக-விடம் வேலூர் தொகுதியைக் கேட்கிறது. திமுக தரப்பிலோ முஸ்லிம் லீக் அல்லது மமக இருவரில் ஒருவருக்குத் தான் சீட் என்று சொல்கிறார்கள்.
பாஜகவுடன் தேமுதிக கூட்டணி சேரும் அமைப்பு ஏற்பட்டு அந்தக் கூட்டணியில் பாமக இல்லாத பட்சத்தில் 24 தொகுதிகளை கேட்கும் திட்டத்தில் இருக்கிறதாம் தேமுதிக. பாமகவும் கூட்டணியில் இருந்தால் வடமாவட்டங்களில் 10 மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் 10 என மொத்தம் 20 தொகுதிகளுக்கு அடிபோடலாம் என்று நினைக்கிறார்களாம்.
தேமுதிக.வுக்கு 11 மட்டுமே
ஆனால், தேமுதிக வரும் பட்சத்தில் அவர்களுக்கு 11 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என்று கணக்குச் சொல்கிறதாம் பாஜக. இந்தக் கூட்டணிக்கு பாமக வரும்பட்சத்தில் ஸ்ரீபெரும் புதூர், விழுப்புரம், ஆரணி, அரக்கோணம், தருமபுரி, சிதம்பரம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளை கேட்கும் யோசனையில் இருப்ப தாகச் சொல்கிறார்கள்.
மதிமுக
பாஜக கூட்டணியில் முதல் கட்சியாக துண்டுபோட்டு இடம்பிடித்த மதிமுக அந்தக் கூட்டணியில், தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, ஆரணி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம் அல்லது ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை ஆகிய 10 தொகுதிகளை குறி வைக்கிறது. இதில் 7 வரை தர பாஜக முன்வரலாம் என்கிறார்கள்.
பாரிவேந்தரின் ஐஜேகே பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதிகளையும் கொங்கு பேரவை கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 4 தொகுதிகளை எதிர்பார்க்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT