Published : 08 Aug 2018 01:52 PM
Last Updated : 08 Aug 2018 01:52 PM

‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்

கருணாநிதியை அடக்கம் செய்யும் ஏற்பாடுகள் தயாராகிவரும் வேலையில் அவரது உடல் வைக்கப்படும் சந்தனப்பெட்டியின் மீது எழுதப்பட்டுள்ள வாசகத்துடன் படம் வெளியாகி உள்ளது.

ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என்று திமுகவினரால் அழைக்கப்பட்டவர் கருணாநிதி. தனது கடுமையான உழைப்பால் திருவாரூர் குக்கிராமத்தில் பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த கருணாநிதி தமிழகம் ஆளும் முதல்வராக உயர்ந்ததன் பின்னால் அவரது கடுமையான உழைப்பை யாரும் மறுக்க முடியாது.

மக்கள் ஏற்றுக்கொண்டதால் முதல்வராகலாம், கற்றவர்சபையில் முதல்வராகவும் அவர் அமர்ந்ததற்கு பின் அவரது கடின உழைப்பு, ஓய்வறியா அறிவு தேடலிருந்ததை யாரும் மறுக்க முடியாது. கருணாநிதியின் சுறுசுறுப்பும், வேகமும் திமுக தலைவர்கள் தாண்டி, அரசு அதிகாரிகளும் பார்த்து வியந்து போயுள்ளனர்.

காலை 4 மணிக்கு துயிலெழுந்து துவக்கப்படும் அவரது பணி நள்ளிரவில் நீண்ட நேர வாசிப்பு, எழுத்துப்பணி, கட்சிப்பணியுடன் முடிந்த காலங்கள் உண்டு. குடும்பத்தைக்கூட கவனிக்க முடியாமல் ஓய்வறியாமல் உழைத்த கருணாநிதியை ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என்று கூறுவார்கள்.

அப்படிப்பட்ட பெருமைமிக்க கருணாநிதியின் மறைவை திமுக தொண்டர்களை கடந்து தமிழக மக்களாலேயே தாங்க முடியவில்லை. முதுமை அவரை வீட்டில் முடக்கியபோது தமிழக அரசியலும் முடங்கியது, அவரது ஓய்வு முடிவடையாமல் ஆகஸ்ட் 7 நிரந்தர ஓய்வாக அமைந்தது தமிழக அரசியலுக்கு இழப்பாகும்.

திமுக தலைவரின் இறுதி நிகழ்வுகள் வேகவேகமாக நடந்து வருகிறது. அவர் உடல் வைக்கப்பட சந்தனப்பெட்டி தயாராகிவிட்டது. அதன்மீது பொருத்தமான வாசகத்தை பதித்துள்ளனர். அதன் மீது

‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் ஒரு புறமும், மறுபுறம் கலைஞர். மு.கருணாநிதி- திமுக தலைவர் ஜூன் 03- 1924- ஆகஸ்டு 07- 2018 என எழுதப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x