Published : 17 Aug 2018 07:52 AM
Last Updated : 17 Aug 2018 07:52 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 11 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகம விதிகளின்படி, அஷ்டபந்தன பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 11-ம் தேதி அங்குரார்ப்பண நிகழ்ச்சியுடன் சம்ப்ரோக்ஷண விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து, 12-ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு, கோயிலில் யாக பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று காலை யாக பூஜைக்கு பிறகு, கோயிலின் தங்க விமான கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதுபோல் அருகில் உள்ள துணை கோயில்களிலும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை பக்தர்கள் மாட வீதிகளில் நின்று தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து, மாலை 5மணிக்கு, கருட பஞ்சமியையொட்டி, உற்சவர்களான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பசுவாமி கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து, இரவு 9 மணியளவில், பெரிய சேஷ வாகனத்தில், மீண்டும் உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இத்துடன் சம்ப்ரோக்ஷண விழா நிறைவு பெற்றது.
இன்று முதல் வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், கோயிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம்போல் நடைபெற உள்ளன.
இது தொடர்பாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் திருமலையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆகம ஆலோசனைக் குழு அளித்த ஆலோசனைகள் மற்றும் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி மகா சம்ப்ரோக் ஷண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. எங்களது வேண்டுகோளுக்கு இணங்க ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், கர்நாடகா மற்றும் இதர மாநில பக்தர்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தமைக்கு நன்றி. 44 வேத வல்லுநர்கள், 100 வேத பண்டிதர்கள் பங்கேற்று இதனை சிறப்பாக நடத்திக் கொடுத்துள்ளனர். கடந்த 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 1.35 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். ஆகஸ்ட் 17-ம் தேதி (இன்று) காலை 11 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல் சர்வ தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிக்கலாம்.
இவ்வாறு அனில் குமார் சிங்கால் கூறினார்.
சம்ப்ரோக்ஷண விழாவில் அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ், இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT