Published : 08 Aug 2018 01:13 AM
Last Updated : 08 Aug 2018 01:13 AM

கருணாநிதி அடக்கத்துக்காகக் கோரப்பட்ட இடம் கூவம் நதிக்கரைதான்; கடலோர மண்டலப் பகுதி அல்ல: வழக்கறிஞர் துரைசாமி பேட்டி

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதி கோரி திமுக சார்பில் செய்யப்பட்ட மனு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய மனுக்கள் தவறாக காரணம் காட்டப்படுவதாக மெரினா வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் துரைசாமி கூறியதோடு தான் வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.

அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்தார் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.

இந்நிலையில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி செய்தியாளர்களிடையே கூறும்போது, ''இது தொடர்பாக நான் தாக்கல் செய்த 4 மனுக்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளேன். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் மறுக்க நான் தாக்கல் செய்த  மனுக்கள் தவறாகக் காரணம் காட்டப்படுகிறது.

பாமகவின் கே.பாலு கூட தன் மனுவை வாபஸ் பெறுவார். இதன் மூலம் சட்டச்சிக்கல்கள் இருக்காது.

ஜெயலலிதா நினைவிடம் அமைந்திருப்பது கடலோர மண்டலப்பகுதி. ஆனால் அண்ணா சமாதி இருப்பது கடலோர மண்டலப் பகுதி இல்லை. அது கூவம் நதியின் கரைப்பகுதியாகும். அது மாநகாரட்சிக்கு உட்பட மயானப்பகுதி.

கருணாநிதி நல்லடக்கத்துக்காகக் கோரப்பட்ட இடம் கூவம் நதிக்கரைதான். அதனால் அதில் சிக்கல் இல்லை'' என்று துரைசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x