Published : 07 Aug 2018 07:55 PM
Last Updated : 07 Aug 2018 07:55 PM

கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணம்: ஒரு காலவரிசை

கலைஞர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திமுக தலைவர் மு.கருணாநிதி காலமானார். திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவர், சமூக நீதி காத்தவர், எந்தத் தேர்தலிலும் தோல்வி காணாத சாதனை படைத்தவர் கருணாநிதி.

கருணாநிதியின் வாழ்க்கைக் குறிப்பு: ஒரு காலவரிசைப் பார்வை

ஜூன் 3, 1924: திருக்குவளையில் பிறப்பு; தந்தை முத்துவேலர் நாதஸ்வரக் கலைஞர். கருணாநிதியும் நாதஸ்வரம் கற்க அனுப்பப்பட்டார், ஆனால் அந்தக் காலத்தில் நாதஸ்வரக் கலைஞர்கள் மேலாடை அணியக் கூடாது, இதனை எதிர்த்து நாதஸ்வரம் கற்பதை எதிர்த்த கருணாநிதி அரசியல் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்.

1938: நீதிக்கட்சியில் இணைந்தார். பிறகு திராவிடர் கழகமானது, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார்.

1942: மாணவர் நேசன் என்ற 8 பக்க கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். இதுதான் பின்பு முரசொலி ஆனது, பிற்பாடு தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் தொடங்கினார். இதுதான் திமுகவின் மாணவர் அமைப்பானது.

1944: ஜுபிடர் பிக்சர்ஸில் ஸ்க்ரீன் ரைட்டராகச் சேர்ந்தார்.

1947: இவர் வசனம் எழுதிய முதல் திரைப்படம் ராஜகுமாரி வெளியானது

1949: திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுக தொடங்கப்பட்ட போது அறிஞர் அண்ணாவுடன் இணைந்தார்.

1952: தமிழகத்தை உலுக்கிய சமூகப் படம் பராசக்தி வெளியானது. கருணாநிதி திரைக்கதை, வசனத்தில் வெளியான இந்தப் படம் திமுகவின் சமூக நீதிக் கொள்கைகளை சக்திவாய்ந்த முறையில் எடுத்துரைத்தது.

1953: டால்மியாபுரம் என்று மாற்றப்பட்ட பெயரை எதிர்த்து புகழ்பெற்ற கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டார். ரயில்வே பாலத்தில் படுத்தது தமிழகத்தில் மறக்க முடியாத ஒரு பிம்பமானது. 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

1957: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முதன்முதலாக குளித்தலையிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். அன்று முதல் வெற்றி நாயகனாகவே இருந்தார், ஒரு தேர்தலில் கூட தோற்கவில்லை.

1961: திமுக பொருளாளார் ஆனார்.

1962: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவரானார்.

1967: திமுக முதன்முதலாக தமிழக அரியணை கண்ட போது முதல்வர் அண்ணாதுரையின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1969: அண்ணாதுரை மறைவையடுத்து தமிழக முதல்வரானார்.

1972: கருத்து வேறுபாடு காரணமாக நண்பர் எம்.ஜி.ராமச்சந்திரன் அதிமுகவைத் தொடங்கினார்.

1976: இந்திரா காந்தி திமுக அரசை ஆட்சியிலிருந்து நீக்கினார்.

1977: அ.இ.அ.தி.மு.க பதவிக்கு வருகிறது, அப்போது முதல் 13 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாக அமர்ந்தார்.

1989: எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.

ஜனவரி 1991: திமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்கிறது, விடுதலைப்புலிகளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

மே 1991: ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியது.

1996: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றி மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.

2001: ஜெயலலிதா தலைமை அதிமுக அரசு கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்கிறது, கடும் எதிர்ப்புகளை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

2006: மீண்டும் தமிழக ஆட்சியை திமுக பிடிக்கிறது. முதல்வராக கலைஞர் கருணாநிதி 5-ம் முறையாகப் பதவியேற்றார்.

2009: தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு சக்கர நாற்காலி வசமானார்.

2013, மார்ச்: தமிழீழப் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகினார்.

2014: மு.க.அழகிரியை கட்சியிலிருந்து நீக்கினார்.

2016: திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார்.

2018 ஆகஸ்ட் 7 மறைவு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x