Published : 18 Aug 2018 05:26 PM
Last Updated : 18 Aug 2018 05:26 PM
வைகை ஆற்றில் அமைந்துள்ள மைய மண்டபம் தூண்கள் கற்களைக் கொண்டு முட்டுக் கொடுக்கும் அளவுக்கு சிதிலமடைந்துள்ளது. வைகை அணை திறக்கப்பட்டால் ஆற்றில் வரும் வெள்ளத்தில் இந்த மண்டபம் அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றில் யானைக்கல் பாலம் அருகே ஆற்றின் நடுவில் மைய மண்டபம் அமைந்துள்ளது. மதுரைக்குப் புதிதாக வருபவர்களும், வெளிநாட்டவர்களும் ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்த மைய மண்டபத்தைப் பார்க்காமல், அறியாமல் செல்ல மாட்டார்கள். மதுரை தெப்பக்குளத்தின் நடுவே அமைந்துள்ள மைய மண்டபம் போன்று இம்மண்டபமும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
இந்த மண்டபம் பல நூற்றாண்டைக் கடந்தது என்றும், நாயக்கர் கால கட்டிடக்கலையை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி உற்சவ மூர்த்தங்கள் வைகையாற்றில் இறங்கி தீர்த்தவாரி கொண்டாடுவதற்காக இம்மண்டபம் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
மைய மண்டபம் நான்கு பத்திகளைக் கொண்டுள்ளது. நடுவே உள்ள பத்தி அகலமாகவும் பக்கவாட்டிலுள்ள பத்திகள் குறுகலாகவும் உள்ளன. இம்மண்டபத் தூண்களில் தெய்வ உருவங்கள், விலங்கினங்கள் மற்றும் துறவிகளின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்படும் போதும் சேதமடையாத அளவுக்கு நல்லதொரு அடித்தளத்தைக் கொண்ட இம்மண்டபம் ஆற்றில் மணல் அள்ளுதல், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் தற்போது சிதைந்து காணப்படுகிறது. இந்த மண்டபத்தைப் பராமரிக்கவும், அதன் வரலாற்றைப் பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், அந்த சிதைந்த மண்டபத்திலே கடந்த மாதம் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட்டது வரலாற்று ஆர்வலர்களை அதிருப்தியடைய வைத்தது. தற்போது இந்த மண்டபத்தின் தூண்கள் கற்களைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்ட நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தற்போது முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியுள்ளதால் அதிலிருந்து அதிகளவு தண்ணீர் வைகை அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதனால், வைகை அணை 66 அடியைத் தாண்டியுள்ளதால் எந்நேரமும் அணையில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. அப்போது வைகை ஆற்றில் வெள்ளத்தல் இந்த மைய மண்டபம் அடித்துச் செல்ல வாய்ப்புள்ளது. அதனால், அதற்கு முன்பே இந்த மண்டபத்தைப் பாதுகாக்க போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT