Published : 02 Aug 2018 03:50 PM
Last Updated : 02 Aug 2018 03:50 PM
அவிநாசி அருகே அருந்ததியர் சமையலர் பாப்பாள் விவகாரத்துக்குப் பிறகு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை பள்ளியில் பாதியாகக் குறைந்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூர் அருகே குட்டகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையலர் பாப்பாள் (42) வேலை செய்வதற்கு, பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த 18-ம் தேதி சேவூர் போலீஸாரிடம் பாப்பாள் புகார் அளித்தார். இதையடுத்து அடையாளம் தெரியக்கூடிய 12 பேர் உட்பட 87 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிந்தனர். இதுதொடர்பாக போலீஸார் 8 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியதாவது:
''திருமலைக்கவுண்டன்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 75 குழந்தைகளில், பாப்பாள் சமைப்பதற்கு முன்பாக 65 பேர் அன்றாடம் சத்துணவு சாப்பிட்டுள்ளனர். கடந்த 20-ம் தேதிக்கு பிறகு, பாப்பாள் விவகாரத்துக்கு பள்ளிக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரின் குழந்தைகள் வரமால் இருந்தனர். இந்நிலையில் 25-ம் தேதிக்குப் பிறகு பள்ளிக்கு குழந்தைகள் வழக்கம் போல் வரத் தொடங்கினர். ஆனால் ஏற்கெனவே சத்துணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளில் 30 பேர் சத்துணவு சாப்பிடுவதில்லை. வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து சாப்பிடுகின்றனர். தற்போது பள்ளியில் கடந்த 3 நாட்களாக 32 பேர் மட்டுமே சத்துணவு சாப்பிடுகின்றனர்'' என்றனர்.
பாப்பாள் சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், ''குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே உணவு கொடுத்து அனுப்புகிறோம். இதில் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை'' என்றனர்.
பள்ளித் தலைமை ஆசிரியை எம்.சசிகலா கூறுகையில், ''பள்ளிக் குழந்தைகள் வீட்டிலிருந்தே உணவு கொண்டுவந்து சாப்பிடுவதால் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது'' என்றார்.
சத்துணவு திட்ட அலுவலர்கள் கூறுகையில், ''மதியம் சத்துணவு சாப்பிடுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆகவே குறைவாகத்தான் சமைக்கிறோம். கடந்த 3 நாட்களாக 32 பேர் தான் சத்துணவு சாப்பிடுகின்றனர். மேலும் இது தொடர்பாக சத்துணவு சாப்பிட விரும்பும் மாணவர்கள் குறித்து மறு கணக்கெடுப்பு செய்யப்படும்'' என்றனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் கூறுகையில், ''திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளியில் வெறும் தடுப்புகளால் மட்டும் கட்டப்பட்ட சமையலறைக்கு தனிக்கூடம் கட்டித்தர வேண்டும். மயானத்துக்கு அருகில் உள்ள இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தீண்டாமை பிரச்சினை காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு உளவியல் சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தில் இந்த விஷயம் ஆழமாகும் பதியும் முன்பு இதனைத் துடைக்கும் வகையில், அப்பகுதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விரைவில் சமூக நல்லிணக்கக் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT