Published : 18 Aug 2014 10:24 AM
Last Updated : 18 Aug 2014 10:24 AM
ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி தொடங்கிய நிலையிலேயே பல மாதங்களாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான காந்திநகர் மயானம் உள்ளது.
இதில் இறந்தவர்களின் உடல்களை புதைக்கவும், விறகுகளால் எரிக்கவும் பொதுமக்கள் அதிகம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்க்கவும், இறந்தவர்களின் உடலை துரிதமாக எரிக்கவும், எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல முறை, ஆவடி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். அதன் விளைவாக, கடந்த ஆண்டு இறுதியில், காந்தி நகர் மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், அப்பணி தொடங்கிய ஒரு மாதத்திலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
அதிக செலவு
இதுகுறித்து, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பாலாஜி, ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்ததாவது: காந்தி நகர் மயானத்தில் இறந்தவர்களை உடல்களை எரிக்கவும் புதைக்கவும் ரூ. 4,000 முதல், ரூ.10,000 ஆயிரம் வரை செலவாகிறது. அவ்வளவு தொகையை செலவிட இயலாத மக்கள், வேறுவழியின்றி 10 கி.மீ., தூரத்தில் உள்ள திருமுல்லைவாயில் மயான எரிவாயு தகன மேடையை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, பட்டாபிராம் காந்தி நகர் மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தது. அதன் விளைவாக, காந்தி நகர் மயானத்தில் ரூ.68 லட்சம் மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, ஆவடி நகராட்சி சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால், அப்பணி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திலேயே கிடப்பில் போடப்பட்டது. எரிவாயு தகன மேடையின் அடித்தளம் அமைக்கும் பணி மட்டுமே முடிந்துள்ளது. மற்ற பணிகள் தொடங்கப்படவில்லை’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
விரைவில் முடியும்
இதுகுறித்து, ஆவடி நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: ‘பட்டாபிராம் காந்தி நகர் மயானம், ஆவடி பெரியார் நகர் மயானம் ஆகிய இரு மயானங்களிலும் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் ஒருவரே. இரு மயானங்களிலும் ஒரே நேரத்தில் பணியை மேற்கொள்ள முடியாததால், பட்டாபிராம் காந்திநகர் மயானத்தில் தொடங்கப்பட்ட பணி கிடப்பில் உள்ளது.
தற்போது, ஆவடி பெரியார் நகர் மயானத்தில் நடைபெற்று வரும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அப்பணி முடிந்த பிறகு, பட்டாபிராம்-காந்தி நகர் மயானத் தில் எரிவாயு தகன மேடை அமைக் கும் பணி மீண்டும் தொடங்கப் பட்டு, துரிதமாக முடிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.
ஆவடி அருகே பட்டாபிராம் மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்காக தொடங்கிய பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT