Published : 13 Jul 2018 07:23 AM
Last Updated : 13 Jul 2018 07:23 AM
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், உடனடியாக அணையை திறப்பதன் மூலம் உபரிநீர் வீணாக கடலில் கலக்காமல் தடுக்க வேண்டும் என்கின்ற னர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கர்நாடகா, கேரளாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையின் நீர்மட்டம் நேற்றைய (ஜூலை 12) நிலவரப்படி 117 அடியை தாண்டிவிட்டது. அதேபோல் கபினி அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. ஹேமாவதி, ஹாரங்கி அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கர்நாடகாவில் குறைந்தபட்சம் இன்னும் 3 வாரங்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை முன்னறிவிப்புகள் கூறுகின்றன. இதனால் கபினி போலவே, கேஆர்எஸ் அணையும் விரைவிலேயே நிரம்பி, அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.
அதே நேரம், தமிழகத்தைப் பொருத்தவரை, மேட்டூர் அணை திறக்கப்படாததால் இந்த ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி நடக்கவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. ஏரி, குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. பல ஊர்களில் குடிநீருக்கே மக்கள் அலையவேண்டிய நிலை நீடிக்கிறது.
இந்தச் சூழலில், மேட்டூர் அணையை உடனடியாக திறக்க வேண்டியுள்ளது. இப்போது மேட்டூர் அணையைத் திறந்தால், சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை விவசாயிகள் தொடங்க முடியும். மேலும், தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு கிடக்கும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிறுசிறு நீர்நிலைகளை நிரப்ப முடியும். இவை நிரம்பினால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு போதிய குடிநீர் கிடைக்கும். மேலும், இப்போது அணையைத் திறந்தால்தான், உரிய காலத்துக்குள் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரும். கடந்த 2013-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அணை நிரம்பிவிட்டது. அதே நேரம், கர்நாடகாவில் இருந்தும் விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடிக்கும் மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இவ்வளவு தண்ணீர் கிடைத்தும், நம்மால் அதை தேக்கிவைக்க முடியவில்லை. கொள்ளிடம் வழியாக உபரி நீர் முழுவதும் கடலுக்கு திருப்பிவிடப்பட்டது. அதே நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் கடைமடைப் பகுதி விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அதேபோல, கடந்த 2005-ல் மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியதால், வினாடிக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அந்த ஆண்டில் மட்டும் 142 டிஎம்சி தண்ணீர், கடலில் கலந்தது. அடுத்து 2006-ம் ஆண்டிலும் அணை முழுமையாக நிரம்பி வழிந்தது. அதுபோலவே, இந்த ஆண்டும் அணை நிரம்பி வழிய பிரகாசமான வாய்ப்புகள் தெரிகின்றன. அந்த நேரத்தில்வெளியேற்றப்படும் உபரி நீரை, வீணாக கடலை நோக்கித் திருப்பி விடுவதற்கு பதிலாக, இப்போதே திட்டமிட்டு உள்ளூர் நீர்நிலைகளை நிரப்ப வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த விவசாயிகள் சங்கத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன், “கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. கர்நாடகா நமக்கு ஜூலையில் 31 டிஎம்சி நீரும், ஆகஸ்ட்டில் 45 டிஎம்சி நீரும் தந்தாக வேண்டும். காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெற்றுத் தர தற்போது மேலாண்மை ஆணையம் உள்ளது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 70 அடிக்கு மேல் நீர் உள்ளது. இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருப்பதால், தமிழக அரசு மேட்டூர் அணையைத் திறக்க முன்வர வேண்டும்” என்றார்.
காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் கூறும்போது, “முழுமையான பாசனத்துக்காக தண்ணீர் திறக்காவிட்டால்கூட, சம்பா நாற்றங்கால் பணிகளுக்கு தேவைப்படும் நீரை விடுவிக்கலாம். கல்லணை உட்பட மேட்டூருக்கு கிழக்கே உள்ள சிறுசிறு அணைகளில் சிறு பகுதி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். மேட்டூர் அணையில் தேக்கியுள்ள நீரின் அளவைக் குறைப்பதால், வரும் வாரங்களில் கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீரைத் தேக்கி வைக்க வசதியாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT