Published : 20 Aug 2014 10:01 AM
Last Updated : 20 Aug 2014 10:01 AM
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் மலைக்குன்றுகளில் நாளுக்கு நாள் பெருகும் சட்டவிரோத கட்டிடங்களால் மண் சரிவு, நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ மூலம் தொடர்புகொண்டு சமூக ஆர்வலர் கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இயற்கை எழில் நிரம்பிய மலைப் பிரதேசமான கொடைக்கானலில் ஒரு கட்டிடத்தை அவ்வளவு எளிதாக கட்டிவிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பே வல்லுநர் குழு ஆய்வு செய்து, கொடைக்கானல் இயற்கை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கட்டிடங் களை வரைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட ‘மாஸ்டர் பிளான்’ படியே, கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால், இப்போது எல்லாம் கைமீறி சென்றுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.
கான்கிரீட் காடுகளாகிய மலைக்குன்றுகள்
ஒரு காலத்தில் திரும்பிய திசை யெல்லாம், இயற்கை அழகு கொட்டி கிடந்த கொடைக்கானலில், தற்போது ஒரு மலைக்குன்றைக்கூட விட்டு வைக்காமல் கான்கிரீட் கட்டிட காடுகளாக மாற்றி விட்டனர். சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் விட்டதால் தற்போது கொடைக்கானலில் மண் சரிவு அபாயம், நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பகுதியில் தொடர்புகொண்ட சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர்.
இதுகுறித்து கொடைக் கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான எபக்ட் கோடை நிர்வாக இயக்குநர் வீரபத்திரன், கருப்பையா ஆகியோர் கூறியது:
கொடைக்கானல் ‘மாஸ்டர் பிளான்’-படி தரைதளம், முதல் தளத்தையும் சேர்த்து ஏழு மீட்டர் வரை மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும். அந்த கட்டிடம், 2,500 சதுரஅடிவரைதான் கட்டப்பட வேண்டும். கொடைக்கானல் ஏரியில் இருந்து 200 மீட்டர் வரை கட்டிடங்கள் கட்டக்கூடாது. பழைய கட்டிடங்களை பராமரிக்கக் கூடாது. ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமானால் வருவாய்த்துறை, நகராட்சி நகர மைப்பு அலுவலர், கனிம வளத் துறை, பொதுப்பணித்துறை, வனத் துறை, குடிநீர் வடிகால் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகள் ஆய்வு செய்து ஒப்புதல், அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப பொறியாளர் அனுமதி பெற வேண் டும். ஆனால் இந்த விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு சட்டவிரோதமாக கட்டிடங்கள் ஏராளமாகக் கட்டப்படுகின்றன.
ஜே.சி.பி. உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தி, மலைப்பாங்கான சரிவு பகுதியில் 20 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டி, துளைபோட்டு கட்டிடங் களை எழுப்புகின்றனர். சதுப்பு நிலப்பகுதியில்கூட கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நீர் ஆதாரம், மலைப்பகுதிகளில் குறுகிய இடைவெளியில் ஆழ்துளை கிணறு அமைப்பதால் பூமிக்கடியில் வெற்றிடம் ஏற்பட்டு மண் கடின தன்மையை இழந்து வருகிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு கட்டி டங்கள் மண்ணுக்குள் இறங்கும் வாய்ப்புள்ளது. சரிவான பகுதியில் தூண் அமைத்து கட்டடம் எழுப்பு கின்றனர். கொடைக்கானல் ஒரு கந்தக பூமி. 500 அடிக்கு கீழே எரிமலைக் குழம்புகள் ஓடுகின்றன. குளிர் பிரதேசம் என்பதால், நில அதிர்வுகள் வராமல் தப்புகிறது. பெரும்பாலும், 6.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டால் மட்டுமே கட்டிடங்கள் இடிந்து விழும். ஆனால், கொடைக்கானலில் 1.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டாலே போதும். நகரில் ஒட்டுமொத்த கட்டிடங்களும் நிலத்தில் புதைந்துவிடும் அபாயம் உள்ளது.
சர்வதேச அளவில் தற்போது பெரும் பணக்காரர்கள், தொழில திபர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் ஊழல்பேர்வழிகள் தங்கள் கருப்பு பணத்தை முதலீடு செய்யக்கூடிய வங்கியாக கொடைக்கானலை பார்க்கின்றனர்.
அதிகாரிகளுக்கு பல்வேறு அரசியல் நெருக்கடிகள் உள்ளதால் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுப்பதோடு நின்று விடுகின்றனர். மேல் நடவடிக்கை எடுக்காததால் சட்டவிரோத கட்டி டங்கள் கொடைக்கானலை அழித்து வருகின்றன’ என வேதனையோடு தெரிவித்தனர்.
கொடைக்கானல் நகரில் வரைமுறையின்றி பெருகிய கட்டிடங்கள்.
நடவடிக்கை எடுக்க உத்தரவு: ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலத்திடம் கேட்டபோது, உயர் நீதிமன்றமும் கட்டிடங்களை முறைப்படுத்த அறிவுரை வழங்கி உள்ளது. அதனால், நோட்டீஸ் கொடுத்த கட்டிடங்களைப் பட்டியலிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க கொடைக்கானல் நகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பணியிடம் காலியாக உள்ளதால், பொறியாளர்தான் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். இதனால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நகர், புறநகர் பகுதியில் கட்டிடங்களை கண்காணித்து புதிதாக விதிமுறை மீறி கட்டிடங்களை கட்டுவதை தடுக்க கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT