Published : 10 Jul 2018 05:58 PM
Last Updated : 10 Jul 2018 05:58 PM

‘எமுத்து பாசெ… கொகாலு..!’: பழங்குடியினருக்காக ‘கானகம்’ நாராயணனின் 20 ஆண்டுகால விநோத முயற்சி

சமீபத்தில் கேரளா, அட்டப்பாடி, கூழிக்கடவுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் மத்திய அமைச்சர் ஜூவல் ஒறம் (JUAL ORAM). ஜார்கண்ட் பழங்குடி இனத்தவரான அமைச்சரிடம் ‘ஆதின் எமுத்து பாஷெ’ என்ற தலைப்பில் தாம் எழுதிய ‘ஸ்கிரிப்டை’ கொடுத்து விளக்கி கோரிக்கை ஒன்றை வைத்தார் டி. நாராயணன். அமைச்சரும் முயற்சி எடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். உலகத்து மொழிகளில் பல ‘லிபி’கள் (எழுத்து வடிவங்கள்) அழிந்து கொண்டிருக்க (தமிழ் கூட தங்கிலீஷ் ஆகி வருகிறது) பழங்குடி மக்களுக்காக தன்னால் உருவாக்கப்பட்ட ‘லிபி’க்கு அங்கீகாரம் பெற 20 ஆண்டுகளாக முயற்சிப்பதுதான் இந்த நாராயணனின் தனிச் சிறப்பு.

தமிழகத்தின் மேற்கு எல்லை ஆனைகட்டி. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் தாசனூர். எண்ணி 64 இருளர் சமூகத்தவர் வீடுகளே உள்ள கேரள அட்டப்பாடி பழங்குடி கிராமம். நாராயணன் என்ற பெயர் சொன்னாலே அவர் வீட்டைச் சொல்லி விடுகிறார்கள். 1997 பழங்குடி ஸ்டைலில் ஒரு மூங்கில் குடிலை உருவாக்கி, அதில் ‘கானகம்’ என்ற பெயரில் ஆதிவாசிப் பள்ளியை நடத்தியவர். பழங்குடிகளிடம் அருகி வரும் ஆதி இசை, கலை, கலாச்சார விஷயங்களை மீட்டெடுக்கும் முகமாக இசைக்கருவிகள் இசைக்கவும், நடனங்கள், ஆடல் பாடல் பயிற்சிகளை இங்கே சொல்லிக் கொடுத்ததோடு, பள்ளி இடைநிற்றல் மாணவ-மாணவிகளை மீட்டெடுத்துக் கல்வியை தொடர வைத்தவர்.

அப்படி 5 ஆண்டுகளில் 124 பேர் மேற்படிப்பும் கற்று அரசுப் பணிகளிலும் உள்ளார்கள். சிலர் முனைவர் பட்டம் பெற்று பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்களாக திகழ்கிறார்கள். இவர் நடத்திய கானகம் பள்ளிக்கு ஆர்ஷ வித்ய குருகுலம் பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அந்த காலகட்டத்தில் உதவிகளும் புரிந்துள்ளார். சூழ்நிலை காரணமாக கானகத்தை இடையில் நிறுத்தியவர், தான் வார்டனாகப் பணிபுரிந்து வந்த பழங்குடியினர் பள்ளி உண்டு உறைவிடப் பள்ளியில் குழந்தைகளுக்கு கானக விஷயங்களை சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்ட கேரள மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் இவரை அணுகியது. பால்வாடி குழந்தைகளுக்காக மாதிரிப் புத்தகம் ஒன்றைத் தயாரித்திருந்த அவர்கள், அந்த நூலை ஆதிவாசிக் குழந்தைகளுக்கு புரியும்படி அவர்கள் மொழியிலே (தங்கிலீஸ் போல் மலையாளத்தில்) மாற்றித் தரும்படி நாராயணனை கேட்டுக்கொண்டனர். 207 பக்கங்களில் ‘கொகாலு’ (பழங்குடியினர் ஊதும் ஓர் இசைக்கருவியின் பெயர்) என்ற தலைப்பில் உருவாக்கித் தந்துள்ளார். அதற்காக நினைவு விருதினை நாராயணனுக்கு கேரள கவர்னர் சதாசிவம் கையால் கடந்த 2015 ஆம் ஆண்டில் அளித்துள்ளது ஆணையம். இந்த முன்னோட்டங்களைக் கொண்ட நாராயணனை சந்தித்து உரையாடினோம்.

‘என் தாத்தாவோட அப்பா பேரு தாசன். அப்ப இந்த இடத்துக்கு பேரு துண்டுக்காடு. ‘கறவைகள் அதிகம் உள்ள காடு!’ என அதுக்கு அர்த்தம். அப்ப 5 குடிசைகள்தான். யானை, கரடி, குள்ளநரி, புலி, சிறுத்தைக கூடவே வாழ்ந்த தலைமுறை அது. சோளம், ராகின்னு விவசாயமும் இருந்திருக்கு. காட்டுல ஆடு, மாடு மேய்ச்சு, விவசாயம் செஞ்சுட்டு மூலைக்கு மூலை தங்கியிருந்த எங்க ஜனங்களை இந்த ஒரே இடத்துல பாதுகாப்பா கொண்டு வந்து குடிவச்சிருக்கார் தாசன் பாட்டன். அப்படி பெருகிய மக்களுக்கு ஊர் மூப்பரா (தலைவர்) தாத்தாவோட அப்பா, அப்புறம் தாத்தா, அப்புறம் பெரியப்பா, பிறகு அப்பா இருந்திருக்காங்க.

அப்ப சுத்து வட்டாரத்தில் முப்பத்தாறு ஊர்களுக்கும் சேர்த்து அப்பாதான் படிச்சவர். பள்ளிக்கூட ஹெட்மாஸ்டர். பியுசி முடிச்சதும் எனக்கு அரசாங்கத்தில் கிளார்க் வேலை கிடைச்சுடுச்சு. என் சகோதரி, என் மனைவி ரெண்டு பேருமே டீச்சர். ஆனா என் இனத்துல பலரும் படிக்கல. மீறிப்போன அஞ்சாம் வகுப்புதான். ஏன் இப்படி? சிந்திச்சேன். கேரளா, தமிழ்நாடு ரெண்டிலும் உள்ள கல்வி முறை ஆதிவாசிகளுக்கான மொழியில் இல்லை. உதாரணமாக தமிழில் ‘அரணை’ என்ற சொல்லை மலையாளத்தில் ‘தரா’ என்றும், எங்க சனங்க ‘றண்ணே’ என்றும் சொல்லுவாங்க. இப்படி ஆதிவாசிகளுக்குன்னு நிறைய சொற்கள் இருக்கு. . தவிர ஆதிவாசிகள் சைகை மொழியையும் (உடல் மொழி) வெளிப்படுத்துவர்.

எதற்குமே இங்கே எழுத்து வடிவம் இல்லை. ஆதிவாசிகள் பேசும் சில சொற்களின் உச்சரிப்பை தமிழ், மலையாளம், ஆங்கிலம் என எதிலுமே கொண்டு வர முடியாது. எங்களுக்குன்னு கலை, கலாச்சாரம், பண்பாடு இருக்கு. ஆதியில மூலிகைகளை, அதற்கான மருத்துவ முறைகளை எங்க ஜனங்கதான் அனுபவத்துல கண்டுபிடிச்சு வச்சிருந்தாங்க. வரி வடிவமா அது இல்லாததால அதில் நிறைய அழிஞ்சே போச்சு. அதேபோல் சான்றிதழில் தாய்மொழி குறிப்பிடும்போது, தமிழ்நாட்டில் ‘தமிழ்’ என்றும், கேரளத்தில் ‘மலையாளம்’ என்றும் எங்களுக்கு எழுதுகிறார்கள். எப்படி அது எங்களின் தாய்பாஷை ஆகும்? எப்படி அப்படி பொய்யாக எழுதலாம்.? ‘இல்லை’ என்றால் ‘உங்க பாஷைக்கு லிபியை காட்டும்பாங்க. அதுக்காகவே எங்க பாஷெ, எங்க எழுத்து, எங்க வாழ்க்கைன்னு ஆதிவாசி மொழிக்கு லிபியை உருவாக்கினேன். அதற்கு ஆதின்பாஷெ என்றும் தலைப்பிட்டேன்!’ என்று உணர்ச்சிவசப்பட்டு சொன்ன நாராயணன் தான் உருவாக்கியுள்ள எழுத்துகளை நம்மிடம் காட்டி விளக்கினார்.

‘இதுல அச்சுக் கோவை (உயிர் எழுத்து)-13, காரிய அச்சுக (மெய்யெழுத்து) -28, கூட்டு அச்சுக (உயிர்மெய்)-12 மொத்தம் 53 எழுத்துகளும், சைகை மொழிக்கான குறியீடாக 8 சுழிகளும் உள்ளன. இந்த எழுத்துகள் என் மனதில் உருவேற வேண்டுமல்லவா? அதற்காகவே அந்த லிபியிலேயே ‘விதி மேலாடுகுது’ (விதியின் ஊஞ்சலில்) என்ற தலைப்பில் ஒரு நாவலை (இப்போது 2-வது நாவல் ஒன்றையும் எழுதிவிட்டார்) நானே எழுதினேன். எங்கள் கானகத்தில் பயின்ற 32 மாணவர்களுக்கு இந்த ஆதின் பாஷையை கற்பித்தும் உள்ளேன்!’என்றார்.

1997 ஆம் ஆண்டில் இந்த எழுத்து வடிவத்தை கேரளா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியிருக்கிறார் நாராயணன். அவர்கள் கோழிக்கோட்டில் இயங்கி வரும் KIRTADS என்ற அமைப்பிற்கு (ஆதிவாசிகள் பற்றிய ஆய்வு செய்யும் அரசு நிறுவனம்) ஆய்வு செய்ய கொடுத்தனராம். அப்புறம்.

‘அவர்கள் டெல்லிக்கு அனுப்பினதா சொல்றாங்க. இதுவரை அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. அட்டப்பாடிக்கு வரும் அமைச்சர்களிடம் மட்டும் தொடர்ந்து நம்பிக்கையுடன் மனு கொடுக்கிறேன். ‘கொங்குனி’ பாஷை உருவாக்க ஒருத்தர் 37 வருஷம் கஷ்டப்பட்டாராம். 5 வருஷம் முன்புதான் இந்திய மொழிகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது ரூபாய் என்பதற்கு ஒற்றை எழுத்துருவை தமிழக இளைஞர் ஒருவர்தான் உருவாக்கினார். அரசும் அதை ஏற்று செயல்படுத்தியிருக்கிறது.

‘அவரவர் தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை கொடுப்பது இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை. சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆதி மக்களுக்கு அது வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகங்கள் பலவும் மொழியில் துறைகளை ஆராய்ச்சிக்கெனவே வைத்துள்ளது நிதி ஒதுக்கீடும் கோடிகளில் நடக்கிறது. ஆனால் ஆதிப் பழமையான பழங்குடியினருக்குள்ள பேச்சு மொழிக்கு எந்த ஆய்வும் இல்லை. அதற்கு எழுத்து வடிவமும் இல்லை. அதில் கல்வியும் கற்பிக்கப்படவில்லை என்றால் எவ்வளவு வேதனை? அதை வடிவமைத்துக் கொடுத்தாலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்?’ என்று வேதனையுடன் குறிப்பிட்டார் நாராயணன்.

‘இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் இப்போது பணி ஓய்வு பெற்றுள்ளேன். எனவே கானகத்தை நிரந்தரமாக ஆரம்பிக்கப் போகிறேன். அதில் எங்க மொழியை, இசையை, கலாச்சார, பண்பாடு, மருத்துவ முறைகளை எங்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறேன்!’ என்கிறார் நம்பிக்கையுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x