Last Updated : 16 Jul, 2018 07:49 AM

 

Published : 16 Jul 2018 07:49 AM
Last Updated : 16 Jul 2018 07:49 AM

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு: மேட்டூர் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பது அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணை காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவும், தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 45,316 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 85,000 முதல் 90,000 கனஅடி வரை காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரோ மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்டோரா மூலம் எச்சரிக்கை

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா மாநிலம் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 85,000 முதல் 90,000 கனஅடி வரை நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று (16-ம் தேதி) காலை மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பிலிகுண்டுலு முதல் மேட்டூர் அணை வரை காவிரி கரையோரக் கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டூர் அணையை அடுத்துள்ள மேட்டூர், எடப்பாடி வட்டங்களில் உள்ள காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் முகாம்

காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள், விவசாயிகள் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கவும், கால்நடைகளையும், உடமைகளையும் கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும், வெள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்தக்கூடாது, காவிரியில் குளிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு வெள்ள நிலவரம் குறித்து கண்காணித்து வருகின்றனர். தருமபுரி மற்றும் காவிரி படுகையில் உள்ள 12 மாவட்ட ஆட்சியர்களிடமும் அணை நிலவரம் குறித்த தகவல்களை உடனுக்குடன் பறிமாறிக் கொள்கிறோம்.

அணை திறப்பு எப்போது?

அணை நீர் மட்டம் 90 அடியை எட்டியதும் அரசுக்கு அறிக்கை சமர்பிப்போம். அணை திறப்பது குறித்து அரசு அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 83.20 அடியாக இருந்த அணை நீர் மட்டம் மாலை 84 அடியை கடந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 45.22 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அதிக நீர் வரத்து காரணமாக ஓரிரு நாளில் அணையின் நீர் மட்டம் 90 அடியை எட்டிவிடும் நிலை உள்ளது. அப்போது, காவிரி பாசன மாவட்டங்களின் விவசாய தேவைக்காக காவிரியில் நீர் திறக்கப்படுவது வழக்கம் என்பதால் ஓரிரு நாளில் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது.

பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன், தமிழக அரசு உடனடியாக மேட்டூர் அணையை திறந்து ஏரி, குளம், குட்டைகளில் நீரை நிரப்புவதற்கும், நேரடி விதைப்பு செய்யும் விளைநிலங்களுக்கு பாதிப்பில்லாமல் பாசனத்தை முறைபடுத்தவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x