Last Updated : 07 Jul, 2018 11:14 PM

 

Published : 07 Jul 2018 11:14 PM
Last Updated : 07 Jul 2018 11:14 PM

தரமான எம்-சாண்ட் தயாரிக்காத நிறுவனங்களை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கு அரசு தீவிர நடவடிக்கை: தர அங்கீகாரம் கோரிய 64 நிறுவனங்களில் 44 மட்டுமே பெற்றுள்ளன

தரமான எம்-சாண்ட் தயாரிக்காத நிறுவனங்களை மூடி ‘சீல்’ வைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் ஆற்று மணல் தட்டுப்பாடு நீடிப்பதால், அதனைப் போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து அடுத்த இரண்டு மாதங்களில் 30 லட்சம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதனிடையே, எம்-சாண்ட் (நொறுக்கப்பட்ட கல் மணல்) குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் பயன்பாட்டை அதிகரிக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஆற்று மணலைவிட எம்-சாண்ட் மூன்று மடங்கு வலுவானது என்றும், கூடங்குளம் அணுமின் நிலையம், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு எம்-சாண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் கூறினாலும், எம்-சாண்ட் தரத்தை உறுதி செய்தால் மட்டுமே பொதுமக்களும், கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானப் பணிகள் முழுமைக்கும் எம்-சாண்ட் பயன்படுத்துவார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.

பலகட்ட ஆய்வு

அதனால், எம்-சாண்ட் தயாரிப்பவர்களைக் கண்காணிப்பதுடன் அவர்களது தயாரிப்பு தரமானது என்பதற்கான அங்கீகாரத்தையும் அரசு வழங்கி வருகிறது. இதற்காக பொதுப்பணித் துறை (கட்டிடம்) முதன்மை தலைமைப் பொறியாளர் எஸ்.மனோகர் தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்பட்டு பலகட்ட ஆய்வுக்குப் பிறகு எம்-சாண்டுக்கு தர அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

இக்குழுவில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) பிரதிநிதி, இந்திய தர நிர்ணய (ஐஎஸ்ஐ) இயக்குநர், ராணுவ பொறியியல் சேவைகள் (எம்இஎஸ்) தலைமைப் பொறியாளர், இந்திய ஆராய்ச்சி நிறுவனப் பிரதிநிதி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், இந்திய பொறியியல் கழக செயலர், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், வீட்டு வசதி வாரியம், காவலர் கட்டுமானக் கழகம் ஆகியவற்றின் தலைமைப் பொறியாளர்கள், கட்டுநர்கள் சங்கத் தலைவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு மாதந்தோறும் கூடி, எம்-சாண்ட் தயாரிக்கும் நிறுவனத்தின் முழு தகவல்கள் மற்றும் தயாரிப்பை ஆய்வு செய்து தரத்துக்கான அங்கீகாரம் வழங்குகிறது. தமிழ்நாட்டில், தற்போது 320 எம்-சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றில் தர அங்கீகாரம் கோரி 64 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. ஆனால், இதுவரை 44 நிறுவனங்கள் மட்டுமே முழு தகவல்களையும் அளித்து பொதுப்பணித் துறை தொழில்நுட்ப நிபுணர் குழுவிடம் இருந்து தர அங்கீகாரம் பெற்றுள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

எம்-சாண்ட் தர அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் தர அங்கீகாரம் பெற்ற பிறகே எம்-சாண்ட் விற்பனை செய்ய வேண் டும் என்று அரசு பல தடவை அறிவுறுத்திவிட்டது. அதன்பிறகும் பெரும்பாலான நிறுவனங்கள் தர அங்கீகாரம் பெறாமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து சில விதிமுறைகளைத் திருத்த பொதுப்பணித் துறை தொழில்நுட்ப நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.

உதாரணத்துக்கு கல்குவாரியும், கிரஷரும் வைத்திருப்பவர்கள் மட்டுமே எம்-சாண்ட் தர அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விதி இப்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதுபோல வேறு சில விதிகளும் தளர்த்தப்பட்டிருப்பதால், வரும் நாட்களில் பெரும்பாலான எம்-சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தர அங்கீகாரம் பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உரிய அவகாசம்

அதையும் மீறி, தர அங்கீகாரம் பெறாமல் எம்-சாண்ட் தயாரித்தால் அந்த நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி, உரிய அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகும் தர அங்கீகாரம் பெறாமல் எம்-சாண்ட் தயாரித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து மூடி ‘சீல்’ வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x