Published : 16 Jul 2018 03:48 PM
Last Updated : 16 Jul 2018 03:48 PM

4-ம் வகுப்பு மாணவனை ஆசிரியை தள்ளிவிட்டதில் எலும்பு முறிவு: மாணவரின் சகோதர சகோதரிகளுக்கும் சேர்த்து டிசி கொடுத்து வெளியேற்றிய அவலம்

வியாசர்பாடியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவனை ஆசிரியை தள்ளிவிட்டதில் கை முறிந்தது. கைமுறிவு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மாணவன் மற்றும் அவனது சகோதரிகளுக்கு டிசி கொடுத்து வெளியேற்றிய அவலம் நடந்துள்ளது.

வியாசர்பாடியைச் சேர்ந்தவர்கள் அருள் (34) இவரது மனைவி ஆதிலட்சுமி (29). ஆதிலட்சுமியின் சகோதரி உடல் நலக்குறைவால் காலமானதையடுத்து, அவரது 9 வயது மகன் ராஜேஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாங்களே வளர்த்து வருகின்றனர். ராஜேஷ் சென்னை வியாசர்பாடி கணேசபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அவரது சித்தி குழந்தைகள் இருவரும் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி அன்று மாணவன் பள்ளியில் நடந்து செல்லும்போது பின்னால் வந்த ஆசிரியை ஒருவர் வேகமாக போ என்று தள்ளிவிட்டதில் கீழே விழுந்ததில் ராஜேஷின் இடது கை மணிக்கட்டில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்த போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் சிஎஸ் ஆர் போடப்பட்டுள்ளது. மாணவன் எலும்பு முறிவுக்குப் பின்னர், ஆசிரியர்களே மருத்துவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிகிச்சை அளித்து பின்னர் ஆதிலட்சுமிக்கு தகவல் கொடுத்து ஓன்றுமில்லை லேசான காயம் தான் என குழந்தையை அனுப்பி விட்டனர்.

ஆனால் ராஜேஷ் கை வீக்கமாக இருப்பதையும் வலி அதிகமாக இருந்ததால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு ராஜேஷை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவர மருத்துவமனையில் கட்டு கட்டியுள்ளனர். பின்னர் அன்று இரவு 8.30 மணி அளவில் ராஜேஷை அழைத்துச் சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர் சிகிச்சை பெற்ற எக்ஸ்ரே காப்பி சிசிக்சை விவரங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு 4 வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுவன் ராஜேஷ் மற்றும் ஆதிலட்சுமியின் குழந்தைகள் இருவர் சேர்த்து, மூவருக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு நீக்கிவிட்டதாக வெளியே அனுப்பியுள்ளார். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த வெள்ளிக்கிழமை காலை ஆதிலட்சுமி வியாசர்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் வியாசர்பாடி போலீஸார் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்தபோது, தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பெயரைக் கூற மறுத்து அவர் ஆசிரியர் பயிற்சிக்கு சென்றிருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சனிக்கிழமை காலை 10 மணிக்கு விசாரணைக்கு வருமாறு போலீஸார் கூறியுள்ளனர். என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே குழந்தை ராஜேஷ் கையில் ஆப்ரேஷன் செய்ய வேண்டி உள்ளதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சித்தி ஆதிலட்சுமி தெரிவித்தார். அவரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது “நான்தான் வாபஸ் வாங்கிட்டேனே சார் ஆளாளுக்கு என்னை மிரட்டுகிறீர்களே?” என்று கேட்டார்.

நாங்கள் ’இந்து தமிழ்’ இணையதளத்திலிருந்து பேசுகிறோம் என்று கூறியவுடன் மாணவர் ராஜேஷின் கையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்பதால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தன்னைப் புகாரை வாபஸ் வாங்கும்படி உதவி ஆய்வாளர் ஒருவர் மிரட்டியதால் வெள்ளை பேப்பரில் கையெழுத்துப் போட்டு கொடுத்துள்ளதாகவும், ஆளாளுக்கு போனில் மிரட்டுவதால் உங்களையும் மிரட்டும் நபர் என்று நினைத்துக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

இது பற்றி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஷ்வரியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ''அவ்வாறு எதுவும் நடக்கவில்லை, விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

தலைமை ஆசிரியையிடம் கேள்விகள் எழுப்பியபோது அவர் கூறியதாவது:

மாணவரின் கை எலும்பு முறிந்த பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்தீர்களா?

நாங்கள்தான் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தோம்.

பாதிக்கப்பட்ட மாணவர் அவரது சகோதர சகோதரிக்கு நீங்கள் ஏன் மாற்றுச்சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு அனுப்பினீர்கள்?

அவர்கள் தான் ஆட்களை அழைத்து வந்து மாற்றுச்சான்றிதழ் கொடுத்தால்தான் ஆச்சு என்று மிரட்டினார்கள் அதனால் கொடுத்தேன்.

போலீஸில் புகார் அளித்துள்ள பெற்றோர் நீங்கள் வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கி வலுக்கட்டாயமாக டிசி கொடுத்து அனுப்பியதாக கூறியுள்ளார்களே?

'நாங்கள் ஏன் டிசி கொடுக்கப்போகிறோம். அவர்கள் தான் சண்டைபோட்டு வாங்கிச் சென்றார்கள்.

ஆசிரியை மீது நடவடிக்கை எதுவும் எடுத்துள்ளீர்களா?

விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

குழந்தையின் நிலை எப்படி இருக்கிறது என்று எதுவும் தெரியுமா?

அது சம்பந்தமாகத்தான் கல்வி அலுவலர்கள் விசாரணை நடந்து வருகிறது.

குழந்தையின் பெற்றோரை மிரட்டியதாகவும், வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கியதாகவும் குற்றச்சாட்டு கூறுகிறார்களே?

நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. அவர்களாகத்தான் டிசி கேட்டு வாங்கிச் சென்றார்கள்.

குழந்தைக்கு கை எலும்பு முறிவுக்கு மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தீர்களா?

நாங்கள் தான் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றோம்.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறுகிறார்களே?

நானும் தான் போலீஸ் விசாரணைக்குச் சென்றுவிட்டு வந்தேன்.

ஆசிரியை தள்ளிவிட்டதால் தான்  எலும்பு முறிவு ஏற்பட்டதாக மாணவர் தெரிவித்துள்ளாரே?

விசாரணை நடக்கிறது, அதிகாரிகள் வந்து அதுபற்றிதான் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள.

இவ்வாறு தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தெரிவித்தார்.

இது குறித்து குழந்தை நேய காவல் பணி பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ ஜேசுராஜிடம் கேட்டபோது அங்குள்ள குழந்தை நேய காவல் உதவி ஆய்வாளரிடம் தகவல் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

காவல் நிலையங்களில் குழந்தை நேய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள், நீங்கள் பயிற்சியும் அளித்துள்ளீர்கள், ஆனாலும் இது போன்ற புகார்களில் பெற்றோர்களை போலீஸ் மிரட்டி புகாரை வாபஸ் பெறச்செய்வதாக புகார் எழுகிறதே என்ன காரணம்?

இந்த வழக்கை நடத்துவதே குழந்தைகள் நல அலுவலரான பெண் காவல் உதவி ஆய்வாளர் தான். கூடுதல் விவரங்களை அவரிடம் கேட்டுள்ளேன். பையனுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் டிசி வாங்கிச்சென்றதாக உதவி ஆய்வாளர் தெரிவித்தார்.

அவரிடம் தெளிவாக விளக்கியுள்ளோம். குழந்தைகளுக்குள்ளேயே சண்டை வந்தால்கூட பள்ளிக்கூடம்தான் பொறுப்பு. ஆகவே அந்தப் பார்வையில்தான் பார்க்கவேண்டும், ஆகவே உங்கள் விளக்கம் சரியில்லை என்று கூறியுள்ளோம்.

போலீஸாருக்கு குழந்தைகள் புகார் குறித்த வகுப்புகள் நடத்தியும் குழந்தைகள் நல அலுவலராக இருப்பவர்கள் அதை சரியாக கையாளுவதில் தடுமாற்றம் வருகிறதே ஏன்?

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். உடனே மாற்றம் வராது. ஏன் இப்படி நடக்கிறது என்றால் நாம் வெளியிலிருந்து புதிதாக ஆட்களைக் கொண்டுவந்து உள்ளே இறக்கவில்லை. உள்ளே இருப்பவர்களைத்தான் தயார் செய்துள்ளோம்.

இதற்கென்று சிறப்பு சிறார் போலீஸ் என்று உருவாக வேண்டும். அவர்கள் இவர்களுடன் இணைந்து வழிகாட்ட வேண்டும். ஆனால் அப்படி ஒன்று இப்போது உருவாகவில்லை. இப்போது நியமிக்கப்பட்டவர்கள் வழக்கமாக உள்ள காவலர்களுடன் இணைந்துதான் செயல்படுபவர்கள்.

அவர்கள் வழக்கமான காவல்துறையின் அத்தனை நடைமுறைகளுடன் இணைந்து நடப்பவர்கள். ஆகவே அவர்கள் வழக்கமான போலீஸாக செயல்டும்போதே, இதுபோன்ற வழக்கு வரும்போது திடீரென குழந்தைகள் அலுவலராக மாறவேண்டும்.

அது நடக்காதபோதுதான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. ஆகவே இது படிப்படியாகத்தான் மாறும்.

இதற்கு மாற்றாக மாற்றம் ஏற்பட உடனடி தீர்வாக எதாவது உண்டா?

இதற்கு மாற்று ஒன்று யோசித்துள்ளோம். அருகில் உள்ள சமூக இயக்கங்களுடன் இணைந்து தொடர்ச்சியாக இவர்களும், அவர்களும் இணைந்து வேலை செய்தால் அது போலீஸ் தரப்பிலும் கொஞ்சம் உதவி கிடைக்கும் குழந்தைகளிடம் எப்படி பேசுவது என்பது குறித்த வழிகாட்டுதல் கிடைக்கும், நாமும் கண்காணிக்க முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஆண்ட்ரூ சேசுராஜ்  தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x