Published : 07 Jul 2018 11:48 PM
Last Updated : 07 Jul 2018 11:48 PM

படுக்கை வசதியுள்ள அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய செயலி விரைவில் அறிமுகம்: தட்கால் டிக்கெட் முறையும் கொண்டுவரப்படுகிறது

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் படுக்கை வசதியுள்ள புதிய பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய செயலி மற்றும் தட்கால் டிக்கெட் முறையை விரைவில் அறிமுகப்படுத்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

அவசரமாக வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வசதியாக ரயில்வேயில் தட்கால் ரயில் டிக்கெட் முறை உள்ளது. இதேபோல், அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் கொண்டுவரப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், பழைய பேருந்துகள் அதிகமாக இருப்பதாலும், பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லாததாலும் இதை அறிமுகப்படுத்த அரசு போக்குவரத்துக் கழகங்கள் தயங்கின.

இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு அதிநவீன வசதியுள்ள 40 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. படுக்கையுடன் கூடிய ஏசி, கழிப்பறை, தீயணைப்பு கருவி, அவசரக்கால கதவு மற்றும் ஜன்னல், தானியங்கி கதவு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அடுத்த 2 வாரங்களில் மேலும் 60 சொகுசுப் பேருந்துகள் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இணைக்கப்பட உள்ளன. சென்னை - சேலம் ரூ.725, போடிநாயக்கனூர் ரூ.1,110, ஈரோடு ரூ.905, கோபிசெட்டிபாளையம் ரூ.955, மதுரை ரூ.975, கரூர் ரூ.820, கோயம்புத்தூர் - பெங்களூருவுக்கு ரூ.805 என கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த பேருந்துகளுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய புதிய செயலி மற்றும் தட்கால் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் அரசுப் பேருந்துகளில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு வசதி உள்ளது. பயணிகள் 90 நாட்களுக்கு முன்பே http://www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஒரே நேரத்தில் அதிக அளவில் டிக்கெட் முன்பதிவின்போது சர்வரில் கோளாறு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, விரைவுப் பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் தனி செயலியை தயாரித்து வருகிறோம். விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு அது கொண்டு வரப்படும்.

மேலும், ரயில்வே துறையில் இருப்பது போல் தட்கால் டிக்கெட் முன்பதிவு முறையையும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அமல்படுத்த உள்ளோம். குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திருப்பதி, பெங்களூர், கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகளில் தலா 4 இருக்கைகளுக்கு தட்கால் டிக்கெட் முன்பதிவு முறையைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரயில்வே துறையில் இருப்பது போல் 24 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு தொடங்கும். டிக்கெட் முன்பதிவு செய்ததும், அதற்கான குறுந்தகவல் பயணிகளின் செல்போனுக்கு வந்துவிடும். தத்கால் டிக்கெட் முன்பதிவுக்கான கட்டண விபரங்களும் விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x