Published : 29 Jul 2018 08:29 AM
Last Updated : 29 Jul 2018 08:29 AM

கொள்ளிடத்தில் கூடுதல் நீர் திறப்பு; மேலணை, கல்லணையிலிருந்து விநாடிக்கு 44,000 கன அடி வெளியேற்றம்

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்ததால் நேற்று மாலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பு மேலணையிலிருந்து 33 ஆயிரம் கன அடி, கல்லணையிலிருந்து 11 ஆயிரம் கன அடி என மொத்தம் விநாடிக்கு 44 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியதால் உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், கர்நாடகத்திலிருந்து வரும் தண்ணீரின் அளவு ஏறத்தாழ 1 லட்சம் கன அடியாக இருந்து படிப்படியாக குறைந்தது.

இதனால், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் 9 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.28

அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 66,571 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 66,434 கன அடியாக இருந்தது.

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீரின் அளவு 62,500 கன அடியாக உயர்ந்ததால், இங்கிருந்து நேற்று மாலை நிலவரப்படி காவிரியில் 25,274 கன அடியும், கொள்ளிடத்தில் 33 ஆயிரம் கன அடியும்,  கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் 11 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறப்பதால், கடைமடைப் பகுதிக்கு பாசனத்துக்கு வாய்க்கால்களில் இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லைஎன்பதால், கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவைக் குறைத்து, கல்லணையிலிருந்து காவிரி மற்றும் வெண்ணாறு ஆகியவற்றில் முழுக் கொள்ளளவு தண்ணீரை திறக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத் தனர்.

இந்நிலையில் கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறியது:

முக்கொம்பு மேலணையிலி ருந்து காவிரியில் திறக்கப்பட்டது போக மீதமுள்ள தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுகிறது. காவிரியில் தற்போது 25,274 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

கல்லணையிலிருந்து பிரியும் கல்லணைக் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த இரு தினங்களாக அதில் தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது உடைப்பு சரி செய்யப்பட்டதையடுத்து, இன்று (ஜூலை 28) மாலை முதல் தண்ணீர் படிப்படியாக திறக்கப்படுகிறது. காவிரி, வெண்ணாறு ஆகியவற்றில் அதன் முழுக் கொள்ளளவைத் தாண்டி தலா 9,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் தற்போது அணைக் கரையிலிருந்து வடவாற்றில் 3 ஆயிரம் கன அடியும், தெற்கு ராஜன் மற்றும் வடக்கு ராஜன் வாய்க்கால்களிலும் அதன் முழு அளவுக்கு திறக்கப்படுகிறது. வடவாற்றில் திறக்கப்படும் தண்ணீர் வீராணம் ஏரிக்கு செல்கிறது என்று தெரிவித்தனர்.

கடலில் கலந்து வீணாகிறது...

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன் கூறியது: கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் ஏறத்தாழ 40 ஆயிரம் கன அடி அளவுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் கடலில் கலக்கிறது.

அணைக்கரையிலிருந்து வடவாற்றில் திறக்கப்பட்ட தண்ணீரும் நேற்று முன்தினம் இரவு வீராணம் ஏரியைச் சென்றடைந்துள்ளது. இந்த ஏரி ஏறத்தாழ 1 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. தண்ணீர் இதே அளவுக்கு திறக்கப்பட்டால் 10 நாட்களில் ஏரி நிரம்பிவிடும். கர்நாடகத்தில் பெய்து வரும் மழையைக் கணக்கிட்டு, மேட்டூர் அணையில் 70 அடி தண்ணீர் இருக்கும் போதே, பாசனத்துக்கு திறந்திருந்தால், கடைமடைப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குக்கூட தற்போது தண்ணீர் சென்று சேர்ந்திருக்கும். ஆனால், அரசும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் இதுகுறித்து கவனம் செலுத்தாததால் தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x