Published : 04 Jul 2018 07:35 PM
Last Updated : 04 Jul 2018 07:35 PM
போலீஸாருடன் நடக்கும் மோதலில் கொல்லப்படுவதை என்கவுன்ட்டர் என்று அழைப்பார்கள். நேற்று ரவுடி ஆனந்தன் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவரை நடந்த என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகள் பற்றிய ஒரு பார்வை.
1975- ம் ஆண்டுக்கு மேல் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகரித்ததால் அவர்களை கட்டுப்படுத்த போலீஸாருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொன்றனர். இந்த மோதல்கள் என்கவுன்ட்டர்கள் என்று அழைக்கப்பட்டது. 1979-ல் அப்புவும் 1980-ம் ஆண்டு பாலனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பல நக்சலைட்டுகளும் பின்னர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
இது 1990-ம் ஆண்டு வரை நடந்தது. நக்சலைட்டுகளை குறிவைத்து நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் ரவுடிகள் பக்கம் திரும்பியது 1996-க்கு பிறகுதான். முதன்முதலில் சென்னையில் என்கவுன்ட்டர் நடந்தது ஜூலை மாதம் 30 தேதி 1996-ம் ஆண்டு.
சென்னையில் ரவுடிகளின் ஆதிக்கம் தாதாக்களின் ஆதிக்கமாக மாறிய காலம் 1980-ல் ஆரம்பித்தது. 1960-களின் மத்தியில் பர்மாவிலிருந்து சென்னையில் வந்து குடியேறியவர்களுக்கு வியாசர்பாடி ஏரிப்பகுதி ஒதுக்கித் தரப்பட்டது. வடசென்னை தாதாக்களின் பிறப்பிடமாக மாறியது இந்த நிகழ்வுகள் மூலமாகத்தான் என்று சொல்லப்படுகிறது.
பக்தவச்சலம் காலனி என்று அழைக்கப்படும் பி.வி.காலனி தான் முக்கிய கேந்திரம். 1970-களில் சுப்பையா, பெஞ்சமின் என இரண்டு தாதாக்களின் கீழ் இரண்டு பிரிவாக ரவுடிகள் இயங்கினர். இரண்டு குரூப்களும் மோதலில் ஈடுபட்டன. சட்டவிரோத தொழிற்போட்டியில் இரண்டு குழுக்களிலும் நடந்த மோதலில் பலர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு குழுவினர் சென்னைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தனர். 80-களின் மத்தியில் பெஞ்சமின் சுப்பையா ஆட்களால் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமினின் முக்கிய வலதுகரமான வெள்ளை ரவி (பின்நாளில் என் கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்) சுப்பையாவை எம்.கே.பி நகரில் வைத்து கொலை செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பையாவின் உறவினரான சேரா (எ) சே.ராஜேந்திரன் (இவர் ஆரம்பத்தில் காவல்துறையிலிருந்து பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்) வெள்ளை ரவிக்கு எதிரியானார். அதன் பின்னர் வெள்ளை ரவி, சேரா என இரண்டு தாதாக்கள் ஆதிக்கமும், அவர்களுக்கிடையே நடந்த மோதலினாலும் பொதுமக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
வெள்ளை ரவியின் குற்றங்களை விசாரிக்க ஸ்ரீபெரும்பத்தூரில் தனி நீதிமன்றமே திறக்கப்பட்டது. இதை வெள்ளை ரவி கோர்ட் என்று மக்கள் அழைத்தனர். இப்படிப்பட்ட காலகட்டத்தில் ரவுடிகள் தாதாக்கள் கை ஓங்கியது. முக்கிய தாதாக்களான வெள்ளை ரவி, சேரா கோஷ்டியிலிருந்து பலர் பிரிந்து தனியாக தொழில் செய்ய ஆரம்பித்து அவர்களும் தாதாக்களாக மாறினார்கள்.
இவ்வாறு புதிய புதிய கேங்குகள் 85-க்கு மேல் 96 வரை சென்னை முழுவதும் வியாபித்திருந்தனர். போதை மருந்து கடத்தல், ஆட்கடத்தல், வழிப்பறி, கொலை, கூலிப்படை என பல சட்டவிரோதச் செயல்களில் ஊடுருவியிருந்தனர். பலருக்கு அரசியல் செல்வாக்கு அதையொட்டி காவல்துறையிலும் செல்வாக்கு என தாதாக்கள் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது.
இவ்வாறு உருவானவர்களில் முக்கியமான தாதாக்கள் அப்பு(எ) கிருஷ்ணசாமி, கேட் ராஜேந்திரன் (மனம் திருந்தி வாழ்ந்த சுகர் பேஷண்டான இவர் பின்னாளில் வெட்டிக் கொல்லப்பட்டார்), ஆசைத்தம்பி, பாக்சர் வடிவேலு ( பின்னர் சென்ட்ரல் ஜெயில் கலவரத்தில் கொல்லப்பட்டார்), மாலைக்கண் செல்வம், கபிலன்( அடையாறு மலர் மருத்துவமனை அருகே என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்), காட்டான் சுப்ரமணியம். இவர்கள் அனைவரும் வடசென்னையில் கோலோச்ச தென் சென்னையில் தனி தாதாக்கள் உருவாகினர்.
அப்புவும், கேட் ராஜேந்திரனும் தென் சென்னைப்பகுதியான திருவான்மியூர் பக்கம் தங்கள் ஜாகையை மாற்றி அங்கு தங்களுக்கு என தனி கேங்கை உருவாக்கினர். தென் சென்னையில் சைதாப்பேட்டை பகுதியில் பங்க் குமார் (பின்னர் என் கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்), அயோத்திக்குப்பம் வீரமணி (பின்னர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்), குன்றத்தூர் வைரம், மார்க்கெட் சிவா ஆகியோர் முக்கிய ரவுடிகள் ஆவர். இவர்கள் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவு போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்து ஆதிக்கத்தை ஒடுக்கினர்.
முதல் என்கவுன்ட்டர் ஜூலை 30 1996-ம் ஆண்டு நடந்தது. சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே நடந்த என்கவுன்ட்டரில் முக்கிய தாதாவான ஆசைத்தம்பி தனது கூட்டாளிகளுடன் போலீஸாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜூலை 30 அன்று என்ன நடந்தது என்பதை பார்க்கும் முன் அதே மாதம் 4-ம் தேதி தங்களது எதிரியான விஜயகுமார் என்ற ரவுடியை போலீஸ் காவலில் இருக்கும்போதே, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆசைத்தம்பி கும்பல் வெட்டிக் கொன்றது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியானதால் கடுமையான முடிவெடுக்க வேண்டிய போலீஸாருக்கு அடுத்த பிரச்சினை ஆசைத்தம்பியால் வந்தது.
ஜூலை 30 1996-ம் ஆண்டு அன்று என்ன நடந்தது?
மூன்று தனிப்படை போலீஸார் கார்களில் ஒளிந்துக்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கின்றனர். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுதாகர் ரெட்டி என்பவரின் மகன் சுதிரைக் கடத்திய ஆசைத்தம்பி ரூ.10 லட்சம் பிணைத்தொகை கேட்க அதை கொடுத்து மீட்க லயோலா கல்லூரி அருகே வரச் சொல்கின்றனர்.
போலீஸார் தயாராக மறைந்திருக்க, காரில் வந்திறங்கிய ஆசைத்தம்பி அவரது கூட்டாளிகள் குணா, மனோ ஆகியோரை போலீஸார் மடக்க சண்டை அரங்கேற ஆசைத்தம்பி, குணா, மனோ என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டு சுதிர் மீட்கப்பட்டார்.
இந்த என்கவுன்ட்டர் வெகுகாலம் பொதுமக்களால் பாராட்டி பேசப்பட்டது. காரணம் இதன் மூலம் ரவுடிகள், தாதாக்கள் நடுங்கிப் போயினர். அப்போதைய காவல் ஆணையர் ராஜ்சேகரன் நாயர் ’’இது ஆரம்பம்தான், இத்துடன் நில்லாது தவறு செய்பவர் யாராகிலும் கடுமையான நடவடிக்கை பாயும்’’ என்று எச்சரித்தார். அதே போல் நடந்தது.
இது நடந்த சில நாட்களிலேயே சேராவின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவனான ’ஜிம் பாடி’ கபிலன் என்கிற தாதா தொழிலதிபர் ஒருவரை பணம் கேட்டு மிரட்ட அவர் போலீஸுக்குப் போக போலீஸ் வலைவிரித்தது. மலர் மருத்துவமனைக்கு பக்கத்தில் உள்ள அடையாறு காந்தி நகர் அருகே தனது சியாலோ காரில் வர போலீஸ் சுற்றி வளைத்தது.
தப்பிக்க காரை வேகமாக பின்னால் எடுத்த கபிலன் மின்கம்பத்தின் மீது மோதினார். போலீஸார் சூழ்ந்துகொள்ள மோதலில் ஈடுபட்ட கபிலன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் முதன்முறை அப்பாவி இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார். கபிலன் கொல்லப்பட்ட காட்சி பின்னர் திரைப்படம் ஒன்றில் அப்படியே எடுக்கப்பட்டது.
ஆசைத்தம்பி, கபிலன் உள்ளிட்டோருக்கு நிகழ்ந்த என்கவுன்ட்டர் சம்பவம் ரவுடிகளை பயந்தோடச் செய்தது.
அதன் பின்னர் 2003-ம் ஆண்டு வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார், அதே ஆண்டு திருவல்லிக்கேணி அயோத்திக்குப்பம் தாதா வீரமணி கடற்கரையில் வெள்ளைத்துரை என்ற எஸ்.ஐ. மூலம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் வீரமணி கும்பல் திருவல்லிக்கேணியில் தனது கூட்டாளி ரவுடியை கொலை செய்ததற்கு பழிக்குப் பழி வாங்க குள்ளசேகர்(எ) தோட்டம் சேகரைக் கொன்றது.
மேலும் ரவுடி வீரமணியினால் சென்னையின் சட்டம் ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ரவுடி வீரமணி என்கவுன்ட்டருக்குப் பின்னர் திருவல்லிக்கேணி அதையொட்டிய பகுதிகளில் அமைதி திரும்பியது.
இதே காலகட்டத்தில் சைதாப்பேட்டை பகுதியில் ஆதிக்கம் செலுத்திய பங்க் குமார் என்பவர் கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையிலான போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இது நடந்தது 2006 டிச.12. அதன் பின்னர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி மற்றொரு முக்கிய தாதாவான வெள்ளை ரவி கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ வெங்கடசாமி என்பவரைக் கடத்தி ரூ.2 கோடி கேட்க, கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையிலான டீம் அவரை ஓசூர் அருகே மடக்க முயல நடந்த மோதலில் அவரும் கூட்டாளி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் சென்னையின் பிரபல ரவுடியான பாபா சுரேஷ் என்பவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பித்து பின்னர் காசிமேட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸார் பிடிக்க முயல வெடிகுண்டை எடுத்து பாபா சுரேஷ் வீச சுட்டுக் கொல்லப்பட்டார். இது நடந்தது 2008-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி. கொலை, கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என இவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
அதன் பின்னர் ரவுடிகள், தாதாக்கள் ராஜ்ஜியம் முற்றிலும் ஓய்ந்தது. பின்னர் 2010-ல் பள்ளிக்குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோகன்ராஜ் என்பவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல தாதா சென்னையில் முக்கிய நபரை மிரட்ட போலீஸார் அவரைப் பிடிக்க முயன்றபோது சென்னை ஈசிஆர் சாலையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளி கூடுவாஞ்சேரி வேலு என்பவரும் கொல்லப்பட்டார்.
2012 அதன் பின்னர் சென்னையில் நடந்த மிகப்பெரிய என்கவுன்ட்டர் சென்னை, வங்கிகளில் கொள்ளையடித்து போலீஸாருக்கு பெரிய தலைவலியாக இருந்த பிஹாரைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் வேளச்சேரியில் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் கடந்த 6 ஆண்டுகளாக சென்னையில் என்கவுன்ட்டர் எதுவும் இல்லை. சமீபத்தில் மதுரையில் ஆசைத்தம்பி, சகுனி கார்த்திக் என்ற இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் நேற்று தான் சென்னையில் மீண்டும் ஆனந்தன் என்பவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளார்.
என்கவுன்ட்டர் விவகாரத்தில் பல்வேறு கருத்துகள் வெளியானாலும், அது மனித உரிமை மீறல் என்று கூறப்பட்டாலும் பெரும்பாலானோர் அதை சரி என்று வாதிடும் போக்கு உள்ளது. பல என்கவுன்ட்டர்கள் சந்தேகத்துக்குரியதாக மனித உரிமை ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT