Published : 04 Jul 2018 05:31 PM
Last Updated : 04 Jul 2018 05:31 PM
ஓய்வு பெற்ற 3-வது நாளில் 73 பணியாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.4.49 கோடி மதிப்பிலான பணப்பலன்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் மதுரை மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகர்.
அரசு துறைகளில் பணி ஓய்வு பெறும் பணியாளர்கள், தங்களுடைய பணப் பலன்களை பெறுவதற்கு பெரும் வாழ்நாள் போராட்டத்தையே சந்திக்க வேண்டியது வரும். அதுவும், முக்கிய வருவாய் தரக்கூடிய, அதிகளவு நிதியை கையாளக்கூடிய துறைகளில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு பண பலன்கள் கிடைப்பது இன்னமும் சிரமம்.
போக்குவரத்து துறை பணியாளர்கள் பெரும்பான்மையானவர்கள் ஓய்வு பெற்று பல ஆண்டாக இன்னும் பணப் பலன்களை பெற முடியாமல் நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் நடையாக நடந்து கொண்டிருக்கின்றனர். உள்ளாட்சித் துறைக்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஒய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப் பலன்களை கொடுக்காமல் இழுத்தடிப்பார்கள்.
அதனால், பணி ஓய்வு பெற்றவர்கள் முதுமையில் அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியாமல் கஷ்டப்படுவார்கள். ஆனால், ஒட்டுமொத்த அரசு துறைகளுக்கும் முன் உதாரணமாக மதுரை மாநகராட்சியில் கடந்த 30-ம் தேதி ஓய்வு பெற்ற 73 பணியாளர்களுக்கும் ஓய்வு பெற்ற 3-வது நாளிலேயே ஒட்டுமொத்த பண பலன்களை ஒரே நாளில் கொடுத்து அவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளார் மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகர்.
மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்த ஒரு முதுநிலை ஆசிரியர், ஒரு உதவியாளர், 2 இளநிலை உதவியாளர் உள்பட 73 பணியாளர்கள் 30-ம் தேதி அன்று ஓய்வு பெற்றனர். அவர்களை பணபலன்களுக்காக நீண்ட நாளாக காத்திருக்க வைக்காமல் அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகர் திங்கள்கிழமை அழைத்து ஒரே நாளில் ரூ.4.49 கோடிமதிப்பிலான பணப்பலன்களை கொடுத்தார்.
மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இவர்களுக்கு சேம நல நிதியாக ரூ.1 கோடியே 55 லட்சத்து 82 ஆயிரத்து 857 ரூபாயும், சிறப்பு சேம நல நிதியாக 21 லட்சத்து 13 ஆயிரத்து 37 ரூபாயும், கடைசி மாத ஊதியம் 23 லட்சத்து 65 ஆயிரத்து 540 ரூபாயும், ஈட்டிய விடுப்பு தொகை 2 கோடியே 25 லட்சத்து 87 ஆயிரத்து 339 ரூபாயும், 5வது ஊதிய நிலுவை தொகை 9 லட்சத்து 63 ஆயிரத்து 151 ரூபாயும், சேமநல நிதி வட்டிதொகை 13 லட்சத்து 33 ஆயிரத்து 510 ரூபாய் உள்பட மொத்தம் 4 கோடியே 49 லட்சத்து 45 ஆயிரத்து 434 ரூபாய் மதிப்பிலான காசோலைகளையும், பணி நிறைவு சான்றிதழ்களையும் ஆணையாளர் அனீஸ் சேகர் வழங்கி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT