Published : 07 Jul 2018 10:30 AM
Last Updated : 07 Jul 2018 10:30 AM
சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராதத் தொகை உயர்த்தப்பட்டதால், மாநகராட்சி யால் பிடிக்கப்படும் மாடுகளை மீட்க அதன் உரிமையாளர்கள் தயங்குகின்றனர். அதனால் கடந்த 3 மாதங்களில் பிடிபட்ட 94 மாடுகளில் 22 மாடுகள் புளூ கிராஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சென்னையின் வாகனப் பெருக் கம் அதிகரித்துவிட்ட நிலையில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுமக்களின் புகார் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் மாடுகளைப் பிடித்துச் சென்றா லும் அபராதத் தொகை மிகவும் குறைவாக இருந்ததால், மாடுகளின் உரிமையாளர்கள் அபராதத் தொகையை செலுத்திவிட்டு, வழக்கம்போல் மாடுகளைச் சாலைகளில் அவிழ்த்துவிட்டு வந்தனர். இந்நிலையில், மாநகராட்சியிடம் பிடிபடும் மாடுகளுக்கான அபராதத் தொகை ரூ.1,550-லிருந்து ரூ.10,750 ஆக 7 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மாடுகளை மீட்க அவற்றின் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பல மாடுகள் புளூ கிராஸிடம் ஒப்படைக்கப்பட்டு வரு கின்றன.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
``சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களில் அடைப்போம். புதிய விதிகளின்படி மாடுகளின் உரிமையாளர் அபராதத் தொகை செலுத்திய பின், மீண்டும் மாடுகளைச் சாலையில் விடமாட்டேன் என்று ரூ.20 மதிப்பு முத்திரைத் தாளில் உறுதிமொழி பத்திரம் வழங்கிய பிறகு பிடிபட்ட மாடுகள் விடுவிக்கப்படும்.
மாடுகளின் உரிமையாளர் 3 நாட்களுக்குள் மாடுகளை மீட்காவிட்டால் புளூ கிராஸிடம் ஒப்படைக்கப்படும். இந்த நடைமுறை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி மேல் பிடிபடும் மாடுகளின் காது மடலில், மாநகராட்சி முத்திரை வில்லை பொருத்தப்படும். மாடு கள் மீண்டும் பிடிபட்டால் புளூ கிராஸிடம் ஒப்படைக்கப்படும்.
சாலையில் சுற்றும் மாடுகளைப் பிடிக்கும்போது, மாடுகளின் உரிமையாளர்கள் சிலர் மாநகராட்சி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். அதைத் தடுக்க, மாடுகளைப் பிடிக்கும் பணிகளை உள்ளூர் காவல்துறை ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த 3 மாதங்களில் 94 மாடுகளைப் பிடித்துள்ளோம். அபராதம் அதிகம் என்பதால் உரிமையாளர்கள் பலர் தங்கள் மாடுகளை மீட்கவில்லை. அவ்வாறு மீட்கப்படாத 24 மாடுகளை புளூ கிராஸிடம் ஒப்படைத்திருக்கிறோம். அபராதத் தொகையாக ரூ.5 லட்சத்து 57 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் மாதங்களில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த இருக்கிறோம். அபராதம் உயர்வால் கடந்த 3 மாதங்களில் பல இடங்களில் மாடுகள் சாலையில் சுற்று வது குறைந்துள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT