Published : 06 Jul 2018 07:34 PM
Last Updated : 06 Jul 2018 07:34 PM

தாம்பரத்தைத் தாண்டினால் பாஜகவை யாருக்கும் தெரியாது: குஷ்பு சிறப்புப் பேட்டி

அகில இந்திய காங்கிரஸில் இணைந்த சிறிது காலத்திலேயே தேசிய செய்தித் தொடர்பாளராக உயர்ந்தவர் குஷ்பு. அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டபோது அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. சமீபத்தில் , தமிழக மகிளா காங்கிரஸ் தேசிய பொறுப்பாளராக இருந்த நக்மா திடீரென மாற்றப்பட்டார். அவருடைய மாற்றத்தின் பின்னணியில் குஷ்புவின் கை ஓங்குகிறது என்ற பேச்சு எழுந்தது.

இன்னொரு பக்கம், தமிழக காங்கிரஸுக்குள்ளேயே குஷ்புவுக்கு எதிரான கருத்துகள் அதிகமாக நிலவி வருகின்றன. அந்த விமர்சனங்களையெல்லாம் குஷ்பு எப்படி எடுத்துக் கொள்கிறார்? அரசியலில் அவர் தன்னை எப்படி வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்? ரஜினி-கமல் அரசியல் வருகை, ராகுல் காந்தியின் தலைமைத்துவம், தமிழக காங்கிரஸுக்குள் நிலவும் குழப்பங்கள் குறித்த பல கேள்விகளுடன் குஷ்புவைச் சந்தித்தோம்.

‘நந்தினி’ சீரியல் படப்பிடிப்பிற்கு இடையில் குஷ்பு அளித்த பதில்கள் இதோ:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். நெருங்கிப் பார்த்தால் அது ஒரு பெண் ஆளுமைக்கான வெற்றிடம். இதைப்பற்றிய பேச்சே எழவில்லையே? 

ஜெயலலிதாவை யாரும் பெண்ணாக பார்க்கவில்லை, ஒரு அரசியல் தலைவராகத்தான் பார்த்தனர். அவர் ஒரு பெண் என்பதைத் தாண்டி அரசியல் தலைவராக இருந்ததால் தான் பெண் ஆளுமைக்கான வெற்றிடம் என யாரும் பேசவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதாவைத் தவிர தன் வாழ்க்கையை முழுமையாக அரசியலுக்கு அர்ப்பணித்த பெண் அரசியல் தலைவரை யாரும் பார்த்ததில்லை. சரியோ, தவறோ அவர் செய்த எல்லாவற்றையும் விவாதிக்கலாம். ஆனால், ஒரு தலைவருக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை நான் உணர்கிறேன்.

ஜெயலலிதாவின் இடத்தில் என்றைக்காவது, உங்களைப் பொருத்திப் பார்த்திருக்கிறீர்களா? அவர் செய்த அரசியலை உங்களால் செய்ய முடியும் என என்றைக்காவது நினைத்திருக்கிறீர்களா?

ஜெயலலிதா செய்ததில் நல்லவை எத்தனை என தெரியவில்லை. ஆனால் தவறானவை அனைத்தும் நம் கண் முன்னால் உள்ளன. 1991-95 வரையிலான ஆட்சியில் மட்டும் தான் அவர் நல்லவற்றைச் செய்திருக்கிறார். அதன்பின்பு ஆட்சியமைத்தபோது அவர் செய்த தவறுகள் தான் நிறைய இருக்கின்றன. அதனால் அவர் இருந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது இல்லை. பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் நான் அரசியலுக்கு வரவில்லை. எனக்கு குடும்பம் முக்கியம். எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்கிறேன். பெண்கள் அரசியலுக்கு வரும்போது மட்டும் முழுநேரம் அரசியலில் இருக்க முடியுமா என்ற கேள்வி வருகிறது. அது தவறு.

 

ஜெயலலிதாவின் அரசியல் காலியிடம் ரஜினி, கமலால் இட்டு நிரப்பக்கூடியதா? அவர்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பு ஏதேனும் வருகிறதா?

அரசியல் காலியிடம் அவர்களால் நிரப்பப்படுமா என்பதை யாராலும் சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவெடுக்க முடியும். அவர்களிடம் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.

அரசியலுக்கு வருவதாய் அறிவித்துவிட்ட ரஜினி தூத்துக்குடி படுகொலை குறித்த சொன்ன கருத்துகள் சர்ச்சையானது. இன்னொரு பக்கம் அரசியல் வருவார் என சொல்லப்படும் விஜய்யின் செயல்பாடு பாராட்டப்பட்டது. நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ரஜினி அரசியலுக்கு வந்தபின்பு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு ரஜினி குறித்து அவ்வளவுதான் சொல்ல முடியும். விஜய் இதுவரை எல்லா பிரச்சினைகளுக்கும் முன்னே நின்றிருக்கிறார். ஆனால், அரசியலுக்கு வருவதாக விஜய் இதுவரை சொல்லவில்லை.

 

சமீபத்தில் சாதி ஒழிப்பு குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துடன் உடன்படுகிறீர்களா?

கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர். அரசியலுக்குச் சென்றவுடன் அவருடைய சாதி குறித்து கேள்வி எழுகிறது. அவர் சொல்லும் வழிமுறை தேவையென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள். அதில் ஆழமாகச் சென்று பார்க்கத் தேவையில்லை. அரசியலுக்கு முன்பு எத்தனையோ மேடைகளில், திரைப்படங்களில் நல்ல கருத்துகளை சொன்னவர் கமல்ஹாசன். அவர் சொல்லும் வழிமுறை சரியானதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

கட்சி, அரசியலைத் தாண்டி பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தமிழிசையைக் குற்றம் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால், அவரை தனிப்பட்ட முறையில் உருவத்தை வைத்து கேலி செய்வது சரியானதல்ல. அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். பாஜக எப்படி இருக்கிறதோ அவரையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். பாஜகவை தாம்பரம் தாண்டினால் யாருக்கும் தெரியாது.

 

சுஷ்மா ஸ்வராஜ் உட்பட பல பெண் அரசியல் தலைவர்கள் மீது இணையவழி தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது?

எல்லோரையும் தாக்குவதற்காக ட்ரோல் ஆர்மியை உருவாக்கியதே பாஜக தான். அவர்கள் செய்த தவறு அவர்களையே திருப்பியடிக்கிறது. பாஜக ஆதரவாளர்கள்தான் சுஷ்மா ஸ்வராஜை ட்ரோல் செய்தனர். கடந்த 2-3 ஆண்டுகளாகத்தான் இந்தத் தாக்குதல் அதிகமாகியிருக்கிறது. பணம் கொடுக்கப்பட்டு ட்ரோல்கள் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலும் ட்ரோல்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. நமக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. சமீபத்தில் காங்கிரஸின் பிரியங்கா சதுர்வேதியின் 12 வயது மகளுக்கு பாலியல் தாக்குதல் இணையத்தில் தொடுக்கப்பட்டது. அம்மாதிரியானவர்களை கண்டறிந்து உலகின் முன் நிறுத்த வேண்டும்.

இந்தியா மதச்சார்பின்மையால் வாழ்கிறது. நீங்களோ பிறப்பால் ஒரு சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர். இத்தனை ஆண்டுகாலத்தில் ஒரு சிறுபான்மையினர் என்பதால் எப்போது அதிக பாதுகாப்பின்மையை உணர்ந்திருக்கிறீர்கள்?

நான் பிறந்து வளர்ந்த இடம் அனைத்து சமூக மக்களையும் கொண்டது. சிறுபான்மையைச் சேர்ந்தவள் என்ற எண்ணமே எனக்கு இருந்ததில்லை. அங்கு இந்து-முஸ்லிம்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்தோம். கடந்த 4 ஆண்டுகளாகத் தான் எங்களை சிறுபான்மை சமூகம் என குத்திக் காண்பிக்கின்றனர்.

என் அண்ணன் பிரதமரின் சொந்தத் தொகுதி வாரணாசிக்குச் சென்றபோது பேரை மாற்றிச் சொல்லுங்கள் இல்லையென்றால் பிரச்சினையாகிவிடும் என்றனர். அண்ணன் மகன் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும்போது இந்தப் பெயர் இருப்பதால் பல பிரச்சினைகள் வருமே என்கின்றனர். இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லையே. இப்போது மட்டும் ஏன் என்னை நகத் கான் என்கின்றனர்? இதனை இந்து நாடு என பாஜகதான் சொல்கிறது. எல்லாவற்றிலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

 

மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவர் என விமர்சிக்கப்படுகிறார். அவரின் செயல்பாடுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தலைமையே இல்லாத அதிமுக இதைச் சொல்கிறது. அமைச்சர்கள் செய்ய வேண்டியதை ஆளுநர் செய்கிறார். இதை எதிர்த்து ஸ்டாலின் உட்பட எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். தலையாட்டிப் பொம்மைகளாக இருக்கும் அதிமுக சொல்வதற்கும் செயல் தலைவர் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மக்கள் அவரை செயல் தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டனர். பாதுகாப்பின்மை காரணமாகத் தான் அவரை குற்றம் சொல்கின்றனர்.

ராகுல் காந்தி ஒரு பலவீனமான தலைவர் என இப்போதும் சிலர் சொல்கிறார்களே? காங்கிரஸுக்கு அப்பால் நின்று நேர்மையாகச் சொல்லுங்கள்?

ராகுல் காந்தி புத்திசாலித்தனத்துடன் செயல்படுகிறார். சத்தமாகப் பேச வேண்டும் என நினைக்கிறோம். ராகுல் அப்படிப் பேசக்கூடியவர் இல்லை. நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் தான் பேச வேண்டும் என எங்களிடமே அவர் சொல்வார். தேவையில்லாத வாக்குகள் கொடுக்கக்கூடாது. பொய்யான நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டாம்.

மாநில சுயாட்சி குறித்து பல மாநிலங்களில் விவாதம் எழுந்திருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கான தேவை என்ன?

தமிழகத்தில் கால் எடுத்து வைப்பதற்கு பிரதமர் மோடி பயப்படுகிறார். 'Go Back Modi' எனும் முழக்கத்தை உலக அளவில் கொண்டு சென்றது காங்கிரஸ். இதிலேயே காங்கிரஸின் தேவை என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் நிறைய செய்திருக்கிறோம் என தமிழக காங்கிரஸ் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை.

நூறுநாள் வேலை திட்டம், விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு வந்தது காங்கிரஸ். அதை நாங்கள் சொல்லிக் காட்டியதில்லை. அமைதியாகப் பணி செய்கிறோம். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மக்கள் அதனை புரிந்துகொண்டுள்ளனர்.

காங்கிரஸ் முன்னேறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸுக்கோ திமுகவுக்கோ போராட்டம் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. காந்திய வழியைப் பின்பற்றி காங்கிரஸ் அமைதியாகப் போராட்டங்களை முன்னெடுக்கிறது. போராட்டங்களின் குறிக்கோளை உணர்ந்து போராடுகிறோம்.

 

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தடையாக உள்ளார் என பேச்சு நிலவுகிறதே...

திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் என நாங்கள் நம்புகிறோம், ஆசைப்படுகிறோம். கூட்டணி நீடிக்கும் என்றுதான் இரு கட்சிகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். திருநாவுக்கரசர் இன்னும் சிறப்பாக செயலாற்றியிருக்கலாம் என்று நான் கூறியதைப் பற்றி கருத்து சொன்னால் மறுபடியும் திருநாவுக்கரசர் என்னைப் பற்றி ஏதாவது கருத்து சொல்வார். திருநாவுக்கரசர் குறித்து நான் சொன்னதாக வந்த செய்தி உண்மைதான். தலைமையில் ஏதேனும் மாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திமுகவில் இருக்கும்போது உங்களைக் களத்தில் பார்க்க முடிந்தது. காங்கிரஸில் இணைந்த பிறகு பார்க்க முடியவில்லை. கட்சிக்குள்ளேயே உங்கள் மீது கடும் விமர்சனங்கள் வருகின்றன. காங்கிரஸில் உங்களது இடம் என்ன?

நான் தேசிய செய்தித் தொடர்பாளர். மாநிலத்தில் வேலை செய்வதற்கென தனிப்பட்ட ஆட்கள் உள்ளனர். தேசிய அளவில் தான் என்னுடைய வேலை இருக்கும். திமுக மாநிலக் கட்சியாக இருப்பதால் அதில் இருந்தபோது கிராம அளவில் பல பணிகளைச் செய்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையைத்தான் நான் செய்ய முடியும்.

நான் காங்கிரஸில் இணைந்து 3 ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் எனக்கு தேசியளவில் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ பேர் இந்த பொறுப்புக்கு காத்துக் கிடக்கின்றனர். எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பை நான் சிறப்பாகச் செய்கிறேன்.

எனக்கு திருப்தியில்லாத, மரியாதையில்லாத இடத்தில் இருக்க மாட்டேன். கட்சி வளர்ந்தால் எல்லோருக்கும் வளர்ச்சி இருக்கிறது. மற்றபடி, என்னைப் பற்றிய தேவையற்ற விமர்சனங்களை இந்தக் காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவேன். நக்மா நீக்கப்பட்டதற்கு மகிளா காங்கிரஸ் தலைவியைத் தான் கேட்க வேண்டும். எனக்கும் மகிளா காங்கிரஸுக்கும் சம்மந்தமில்லை. 

 

கட்சிக்குள்ளேயே உங்கள் மீதான விமர்சனம் அதிகமாகியிருக்கும் நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறதா? வழங்கினால் உங்களால் செயல்பட முடியும் என நினைக்கிறீர்களா?

ஒருவேளை நடந்தால் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x