Last Updated : 04 Jul, 2018 08:19 AM

 

Published : 04 Jul 2018 08:19 AM
Last Updated : 04 Jul 2018 08:19 AM

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்க பாஜக திட்டம்: வரும் 9-ல் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்திக்கிறார் அமித்ஷா

தமிழகத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்க ஏதுவாக, பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்களை வரும் 9-ம் தேதி சென்னையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்துப் பேசுகிறார். இதற்காக சட்டப்பேரவை தொகுதி வாரியாக பணியாற்றும் நிர்வாகிகளை பேருந்துகளில் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளை ஒரு சக்தி கேந்திரமாகவும், 30 வாக்குச் சாவடிகளைக் கொண்டது மகா சக்தி கேந்திரமாகவும் பிரிக்கப்பட்டு, இவற்றுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சக்தி கேந்திரங்களில் கட்சியின் அனைத்துப் பிரிவு தலைவர்கள், நிர்வாகிகளும் பொறுப்பாளராக பணியாற்றுவர். கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவும், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கூட தங்களது தொகுதிக்கு உட்பட்ட சக்தி கேந்திரத்தின் பொறுப்பாளராக இருப்பர்.

சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? என்பது தொடர்பாக, 30 பக்கங்கள் கொண்ட வழிகாட்டி கையேடு தயாரிக்கப்பட்டு, இப்போதே விநியோகிக்கப்பட்டு இருக்கிறது.

பல்வேறு கட்டங்களாக பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் சந்திப்பு

மகா சக்தி மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட அணி தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், சட்டப் பேரவை தொகுதி, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்டோரை சென்னையில் உள்ள விஜிபி தங்க கடற்கரையில் வரும் 9-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அமித்ஷா சந்தித்து பேசவுள்ளார்.

பேருந்துகளில் பயணம்

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க ஏதுவாக இந்த கூட்டத்தை மாநாடு போல் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சட்டப்பேரவை தொகுதி வாரியாக 60 முதல் 65 பேர் பேருந்துகளில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதற்கான பணிகளில் கட்சி நிர்வாகிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளரும், மாநில விவசாய அணி பொதுச் செயலாளருமான கணேஷ்குமார் ஆதித்தன் கூறியதாவது:

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜக வியூகம் அமைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு இதுபோல் சக்தி கேந்திரங்களை உருவாக்கி தீவிரமாக செயல்பட்டதால் அங்கு வெற்றிபெற முடிந்தது. சென்னையில் நடைபெறும் கூட்டத்துக்குப் பிறகு தேர்தல் பணிகளை பாஜக முன்கூட்டியே தொடங்கும் என்றார்.

இதனிடையே, தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு மற்றும் வெற்றி வாய்ப்புள்ள 12 நாடாளுமன்ற தொகுதிகளை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடையாளம் கண்டு தலைமைக்கு தெரிவித்திருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x