Published : 26 Jul 2018 06:50 PM
Last Updated : 26 Jul 2018 06:50 PM
பள்ளிக் குழந்தைகளுக்குத் தொடர் பாலியல் தொந்தரவு, வன்கொடுமைகள் ஏன் நிகழ்கின்றன? சமுதாயச் சீர்கேடா? மனப்பிறழ்வா? பெற்றோர் என்ன முன்ஜாக்கிரதையுடன் எப்படிச் செயல்பட வேண்டும் போன்ற கேள்விகளுக்கு உளவியல் நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
அயனாவரத்தில் காதுகேட்காத, வாய்பேசாத சிறுமிக்கு நேர்ந்த கொடுமை, திருவொற்றியூரில் நாலு வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 99 வயது முதியவர், பெண் குழந்தையிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற எஸ்.ஐ என தினந்தோறும் செய்திகள் வெளிவருகின்றன.
பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழும் நிலை உள்ளது. இதற்கான தீர்வுகள் குறித்தும், பெற்றோர் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் உளவியல் நிபுணர் இளையராஜா 'இந்து தமிழ்' இணையதளத்திற்கு அளித்த பதில்கள்.
தொடர்ந்து பள்ளிக் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறதே? இதற்கு காரணம் மனப்பிறழ்வா? சமுக சீர்கேடா?
இதுக்கு முக்கிய காரணம் பீடோபீலியா என்பார்கள். சாதாரண மனிதர்கள் குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்ப்பார்கள். குழந்தைகளால் ஈர்க்கப்பட மாட்டார்கள். ஆனால் பீடோபீலியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் மீது பாலியல் ரீதியாக ஈர்க்கப்பட்டு குற்றம் செய்வார்கள். இது ஒரு வகை மனோ வியாதி.
மற்றொரு காரணம் அதிகப்படியான இண்டெர்நெட் பயன்பாட்டால் பார்ன் அடிக்ஷன் என்பார்கள். ஆபாசத் தளங்களுக்கு நாளடைவில் அடிமையாக மாறுவது.
இதனால் பார்ன் சைட்டில் அவர்கள் பார்க்கும் காட்சிகளில் வரும் அனைத்துப் பெண்களையும் வயது வித்தியாசம் இல்லாமல், பாலியல் பார்வையில் பார்த்துப் பழகுவார்கள். இது அவர்களுக்குள் தேங்கியிருக்கும். அதற்கேற்ற நேரம் வரும்போது அது வெளிப்படும்.
பீடோபீலியா என்பது?
அது ஒரு வகையான மனநோயின் வடிவத்தை இப்படி உளவியலில் அழைக்கிறோம். குழந்தைகளைப் பார்க்கும்போது வரக்கூடிய ஒரு பாலியல் ரீதியான உணர்வு, வன்புணர்வைக் குறிப்பிடுகிறோம்.
தினசரி வெளியில் வரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பெற்றோர்கள் எப்படி கண்டறிவது?
பொதுவாக நான் முன் சொன்ன பீடோபீலியா பாதிப்பு உள்ளவர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களைக் கண்டறிவது மிகவும் கடினம். நமது சமுதாயத்தில் சிறுவயதிலிருந்தே பாலியல் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், சுய இன்பம் போன்ற விஷயங்களைக்கூட தவறு என்று சொல்லி வளர்க்கப்படுகிறோம்.
சில விஷயங்களில் நாம் இதைக் கண்டறியலாம். சில நபர்கள் ஒரு குழந்தையை அதிகம் கொஞ்சுவது, தூக்கி வைத்துக்கொள்வது, தொடுவது, அதிக நேரம் குழந்தையுடன் செலவழிப்பது, தொடக்கூடாத இடங்களைத் தொடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவதைக் கண்டறியலாம். இதை நாட்பட கவனிக்கும்போது தெரியும்.
அதிக நேரம் குழந்தையுடன் செலவழிப்பார்கள், குழந்தையுடன் அன்பாக இருப்பார்கள். நாம் அதை நம் குழந்தை மீது எவ்வளவு அன்பாக இருக்கிறார் என்று விட்டுவிட்டு நமது வேலையைப் பார்ப்போம் என்று விட்டுவிடுவோம். இந்த மாதிரி நேரங்களில் மேற்சொன்ன இரண்டு வகை ஆட்கள் தங்கள் வேலையைக் காண்பிப்பார்கள்.
பெற்றோர்கள் ஏன் அலட்சியமாக இருக்கிறார்கள்?
க்ரூமிங் (grooming) என்பார்கள். இதுபோன்ற நபர்கள் தங்களை நேர்மையானவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். சில நேரம் இவர்கள் நேர்மையை வைத்து குழந்தை குற்றம்சொன்னால்கூட பெற்றோர் நம்பாத அளவுக்கு தங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் அளவுக்கு, மாற்றிக்கொள்வார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கையை ஏற்படுத்திய பின் அவர் என்ன செய்தாலும் அந்த பெண் பெற்றோரிடம் குற்றம் சொன்னால் நம்ப மாட்டார்கள். இதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தை ஒரு நபரிடம் திடீரென போக மாட்டேன் என்று சொன்னால் அதை மதித்து குழந்தையின் லெவலுக்கு இறங்கிப் பேசுவதன் மூலம் குழந்தை மனம் திறந்து பேசும். அதை பெற்றோரால் மட்டுமே செய்ய முடியும்.
வேலைக்குச் செல்லும் பெற்றோர் குழந்தைகளை கவனிக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போதைய வாழ்க்கை சூழலில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளை அழைத்து வழக்கமான பாடம், டியூஷன் குறித்துப் பேசுவது மட்டுமல்ல, இன்று பள்ளியில் என்ன நடந்தது என்று முழுமையாகக் கேட்க ஆரம்பித்தால் அது அவர்களுக்குப் பழகிவிடும். வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுப்பதைப் போல, பேசுவதையும் ஹோம்வர்க்காக மாற்ற வேண்டும்.
அப்படிச் செய்வதன் மூலம் ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வு நடந்தால் குழந்தை நம்மிடம் கூறும்.
இதைப்பற்றிய செய்திகள் வருவதால் மக்களுக்கு அதிக பயம் வரும். இதனால் சாதாரண நபர்களைக்கூட சந்தேகப்படும் நிலை ஏற்படும். இதனால் சாதாரண நபர்கூட இதைவிட்டு விலகி நிற்கும் நிலையும் ஏற்படும்.
இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
முதலில் இப்படிப்பட்ட நபர்கள் பீடோபீலியாவால் பாதிக்கப்பட்டாரா? டிமென்ஷியா என்ற ஒருவகை நோயில் பாதிக்கப்படும்போது திடீர் மாற்றத்தால் வந்த உளவியல் மாற்றத்தால் இப்படி செயல்படுவார்கள் அதை ஆராய வேண்டும். இன்று தினமும் இண்டெர்நெட் உபயோகம் அதிகரித்து வருகிறது.
பாலியல் ரீதியான வலைதளப்பக்கங்களும் எளிதில் காணும் வகையில் உள்ளன. நமது மனம் பாலியல் ரீதியான எண்ணங்களால் ஆக்கிரமிக்கப்படும்போது அந்தப் பக்கங்களை நோக்கிச் சென்று அடிமைப்படத்தான் தோன்றும். இதை சைபர் எஃபக்ட் என்று சொல்வோம், அதை நாம் புரிந்து அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். தனிமனித ஒழுக்கம் முக்கியம் . தற்கு முக்கியத்துவம் கொடுத்தால் இதுபோன்ற விஷயங்களில் அடிமைப்படுவதைத் தவிர்க்கலாம்.
குழந்தைகளிடம் தவறு செய்பவர்கள் வயதானவர்கள் தான் அதிகம் உள்ளனரே?
அதற்குக் காரணம் அந்தந்த வயதில் அதது நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். சிறுவயதில் விளையாட வேண்டும், குறிப்பிட்ட வயதில் திருமணம், வேலை செய்யும் பருவத்தில் வேலை செய்து பொருளீட்டுவது, குழந்தை முறையான வயது வரை இல்லற வாழ்க்கை என்பது போன்றவை இருக்கவேண்டும்.
ஆனால் அப்போது உழைப்பு உழைப்பு என்று ஓடிவிட்டு அனைத்தையும் ஒதுக்கிவிட்டு திரும்பிப் பார்க்கும்போது எதுவுமே இருக்காது. அப்போது தனிமைப்படும்போது பிரச்சினை அதிகமாகும். ஆசை இருக்கும், ஆனால் உங்களால் முறையான உறவு இருக்காது எனும்போது இதுபோன்ற இந்த எண்ணம் தோன்றும். இயலாமையின் விளைவே இதுபோன்ற செயல்பாட்டை குழந்தைகளிடம் காண்பிப்பார்கள்.
இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT